வெள்ளி, 28 மே, 2010

கிளிநொச்சிக்கும், யாழ் மாவட்டம் சுன்னாகத்துக்கும் மின்சாரம் வழங்கும்



இலங்கையின் வடக்கே கிளிநொச்சிக்கும், யாழ் மாவட்டம் சுன்னாகத்துக்கும் மின்சாரம் வழங்கும் புதிய திட்டத்துக்கான வேலைகள் தொடங்கியுள்ளன.
இந்த இரு நகரங்களுக்கும், தேசிய மின்வழங்கல் வலைப்பின்னல் ஊடாக அதிசக்தி வாய்ந்த 132 கிலோ வோட்ஸ் மின்சாரம் வழங்குவதற்கான வேலைத்திட்டங்கள் இன்று கிளிநொச்சி நகரில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 132 கிலோ வாட்ஸ் சக்தியுள்ள மின்சாரம் கிளிநொச்சியில் அமையவுள்ள மின்விநியோக நிலையத்திற்கும் யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் உள்ள மின்விநியோக நிலையத்திற்கும் கிடைக்கும் என்றும், அந்த நிலையங்களில் இருந்து 33 கிலோ வோட்ஸ் மின்சாரம் கிளிநொச்சி மாவட்டத்திற்கும், யாழ் குடாநாட்டிற்கும் வழங்கப்படும் என்றும் மின்சாரசபை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இரண்டு வருடங்களில் இந்த வேலைத்திட்டங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போது வவுனியாவில் உள்ள மின்வழங்கல் நிலையத்தில் இருந்து கிளிநொச்சி நகரத்திற்கும், முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவிக்கும் மின்சாரம் வழங்கப்பட்டிருக்கின்றது. இதேவேளை, மாங்குளத்தில் இருந்து முல்லைத்தீவு நகரத்திற்கு மின்விநியோகம் வழங்குவதற்கான இணைப்பு வேலைகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.       இதேவேளை யாழ்ப்பாணத்திற்கு மின்பிறப்பாக்கிகள் ஜெனரேற்றக்கள் மூலமாகவே மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய கிளிநொச்சி வைபவத்தில் உரையாற்றிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்கள், இந்த மின்விநியோகத் திட்டத்திற்கு ஜப்பானிய அரசும், ஆசிய அபிவிருத்தி வங்கியும் நிதியுதவி வழங்கியிருப்பதாகத் தெரிவித்தார்.
யுத்தம் நடைபெற்ற பிரதேசங்களில் இராணுவத்தினர் கண்ணிவெடிகளை அகற்றி வருகின்ற அதேவேளை, வடக்கிற்கு முழுமையான மின்சார வசதியை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படுகின்றது.
இதேபோன்று வீதிகளை அமைத்தல், சுகாதார வசதிகள், பாடசாலைகளை ஆரம்பித்தல், நீர்ப்பாசன வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்துவதற்கான அபிவிருத்திப் பணிகளை அரசாங்கம் வடக்கில் மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: