திங்கள், 22 பிப்ரவரி, 2010

Kaaங்கிரசுடன் மோதலுககும் தயாராகும் திமுக?!திங்கள்கிழமை, பிப்ரவரி 22, 20 -அறிவழகன்
சென்னை: தமிழக அரசியல் களத்தை சூடாக்க தயாராகி விட்டது திமுக. காங்கிரஸுடன் இதுவரை நடத்தி வந்த நிழல் யுத்தத்தை இப்போது நிஜ யுத்தமாக்க அது தயாராகி விட்டது.
நாம் ஒரு தெளிவான முடிவை மத்திய அரசிடமிருந்து எதிர்பார்க்க இயலாத நிலை. நம்மை நாமேதான் வலுப்படுத்திக் கொண்டு இந்தப் பிரச்சனையை அணுக வேண்டும்
 நம்மோடு இன்றைக்குத் தோழமை கொண்டு, இயங்கிக் கொண்டிருக்கின்ற மத்திய அரசும் - நம் நிலையை உணர்ந்து - நமக்கு நேசக்கரம் நீட்ட வேண்டும். அப்படி நேசக்கரம் நீட்டுவது, அந்தக் கரத்தை நாம் பிடிப்பது தேர்தலுக்காக அல்ல. இந்த மாநிலமும், இதை ஒட்டி இருக்கின்ற மாநிலங்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்பதற்காக மாத்திரமல்ல. காவேரி பிரச்சினைக்காக, முல்லைப் பெரியாறு பிரச்சினைக்காக - இந்த இரண்டு ஆறுகளின் பிரச்சினைக்காக மாத்திரமல்ல, இந்தக் கைகுலுக்கல். ஒட்டுமொத்த இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்காக, ஒற்றுமைக்காக என்பதை மற்ற மாநிலங்களில் இருப்பவர்களும், மத்தியிலே இருப்பவர்களும் உணர வேண்டும், உணர்வார்கள் என்று நம்புகிறேன்.
சேது சமுத்திரத் திட்டத்திற்காக இன்னும் பொறுமை காப்போம் என்று காத்துக் கொண்டிருக்கிறோம். இவை எல்லாம் ஒரு காலக்கட்டத்திற்குத்தான். எல்லை மீறி விடுமேயானால், அப்படி மீறுகிற நேரத்தில் நாம் நம்முடைய வீரத்தை, நம்முடைய போர்க் குணத்தை, நம்முடைய உரிமைக் குரலை அந்த நேரத்திலே காட்டத்தான் போகிறோம். அப்போது நாம் வாளாயிருக்கப் போவதில்லை.
போர்க் குணம் 1965ம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தோடு அழிந்து விடவில்லை. இன்னமும் அதன் சாரல் இருக்கிறது. அதனுடைய காரம் இருக்கிறது. அதனுடைய வேகம் இன்னமும் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டிருக்கிறேன். அந்த உறுதியை, வேகத்தை, காரத்தை, சாரலை இழந்து விடாமல் அதை வைத்தே மேலும் மேலும் உங்களையெல்லாம் உணர்ச்சிப் பிம்பங்களாக ஆக்க வெகு நேரம் ஆகாது. இரண்டொரு கூட்டங்கள் - தஞ்சையிலும், நாகையிலும், காவேரிப் பூம்பட்டினத்திலும், தூத்துக்குடியிலும், நெல்லையிலும், சென்னையிலும் பேசினாலே மீண்டும் அந்த உணர்வை ஏற்படுத்த முடியும்.
திமுக பொதுக்குழுவில் முதல்வர் கருணாநிதி பேசியவை மேற்கண்ட வார்த்தைகள். ஒரு கட்சியின் தலைவர் பேசியவையாக மட்டுமே இதை எடுத்துக் கொள்ள முடியாது. மத்தியில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கூட்டணியின் மூத்த தலைவர் ஒருவரின் குரலில் தொனித்த மிகப் பெரிய ஆதங்கமாகவே இவை எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
மிகவும் பொறுமையாக இருக்கிறோமே, இன்னும் இந்தப் பொறுமையை எவ்வளவு நாளுக்கு சோதிக்கப் போகிறீர்கள் என்று கேட்பது போல இருக்கிறது முதல்வரின் பேச்சு.
அதாவது மோதலுக்கு காங்கிரஸ் தயாரானால், அதற்கும் திமுக தயார் என்று தான் முதல்வரின் பேச்சை எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
முதல்வரின் இந்த ஆதங்கத்திற்கும் காரணம் உண்டு.
கடந்த ஆட்சியில் திமுக எம்பிக்களை முழுக்க முழுக்க நம்பி ஆட்சியில் இருந்த காங்கிரசுக்கு இப்போது திமுக சுமை போல தெரிய ஆரம்பித்துள்ளது. திமுக இல்லாவிட்டாலும் அரசு நிலைக்கும் என்பதால், மரியாதையை குறைத்துக் கொண்டுவிட்டது.
கடந்த தேர்தல் முடிந்த பின் சில துறைகளைக் கேட்ட திமுகவை அலையவிட்டது காங்கிரஸ், கேட்டதையும் தரவில்லை. இதனால் அரசு பொறுப்பேற்கும் முன்பே கோபத்தில் சென்னைக்குத் திரும்பி வந்தார் முதல்வர்.
இதையடுத்து ராகுல் உருவத்தில் மீண்டும் மரியாதை பிரச்சனை வந்தது. செனனைக்கு இரண்டு முறை வந்த ராகுல் ஒரு மரியாதைக்குக் கூட முதல்வரை சந்திக்கவில்லை.
மேலும் தமிழகத்தில் கட்சியை வளர்க்கிறோம் என்ற பெயரில் திமுகவை முழுக்க ஒதுக்க ஆரம்பித்துவிட்டார் ராகுல். இப்போது ராகுல் பேச்சு தான் காங்கிரசில் எடுபடுகிறது. அதன் அடிப்படையில் காங்கிரசும் மத்திய அரசும் நடந்து கொள்ளும் விதம் திமுகவின் பொறுமையை மிகவும் சோதித்து வருகிறது.
சமீபத்தில் அதிமுக-காங்கிரஸ் கூட்டணி ஏற்படும் என்று தனது ஆதரவு பத்திரிக்கைகள் மூலம் ஜெயலலிதா புயல் கிளப்பிவிட்டபோது, அதை திமுகவும் அதன் தலைவர் கருணாநிதியும் தான் சமாளிக்க வேண்டி வந்தது. காங்கிரஸ் தலைவர் சோனியாவோ அல்லது பிரதமர் மன்மோகன் சி்ங்கோ இது குறித்து வாயே திறக்கவில்லை.
டிவி கேமராக்கள் முன்னால் மட்டுமே பேசும் சில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்கள் தான் இதற்கு உப்பு சப்பில்லாமல் பதில் தந்தார்கள். அதில் அபிஷேக் சிங்வி போன்ற செய்தித் தொடர்பாளர்கள், கடந்த மக்களவைத் தேர்தல் முடிவுக்கு முன், ஜெயலலிதாவின் உதவியை காங்கிரஸ் பெற்றாலும் தவறில்லை என்று பேசியவர்கள் தான். (அதாவது திமுக-அதிமுக இதில் யார் அதிக இடங்களில் வெல்கிறார்களோ அவர்களுடன் கூட்டணி!)


2009ம் ஆண்டு தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்தே திமுக-காங்கிரஸ் உறவு நல்லபடியாக இல்லை. ஆனால், தனது சொந்த நலனுக்காக காங்கிரஸை விடாமல் தொங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது திமுக.
இதை காங்கிரஸ் நன்றாக உணர்ந்துள்ளதால் திமுகவுக்கு தரப்படும் முக்கியத்துவத்தை நாளுக்கு நாள் குறைத்துக் கொண்டே வருகிறது.
முல்லைப் பெரியாறு பிரச்சினையாக இருந்தாலும் சரி, சேது சமுத்திரத் திட்டமாக இருந்தாலும் சரி, சமீபத்தில் புதிதாக கிளம்பிய உர மானிய கொள்கையாக இருந்தாலும் சரி, நாடாளுமன்றத்தில் தமிழில் அமைச்சர்கள் பதில் சொல்வது குறித்த விவகாரமாக இருந்தாலும் சரி எதுவுமே திமுகவுக்கு சாதகமான வகையில் இல்லை.

இந்த விவகாரங்களில் சில நீதிமன்றத்தில் இருந்தாலும் இதில் மத்திய அரசின் நிலைப்பாடு தமிழகத்துக்கு எதிராக உள்ளதாகவே கருதப்படுகிறது.
குறிப்பாக முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மகா பொறுமையுடனும், மிகப் பெரிய சகிப்புத்தன்மையுடனும் முதல்வர் கருணாநிதி நடந்து கொண்டதை நாடறியும். இதனால் தமிழக எதிர்க்கட்சிகளால் வறுத்தெடுக்கப்பட்டார்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் முதலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியவர் ஜெய்ராம் ரமேஷ். முற்றிலும் தமிழகத்தை கேவலப்படுத்தி விட்டு, கேரளாவுக்கு ஆதரவாக நடந்து கொண்டு புதிய அணைக்கான சர்வே பணிக்கு அனுமதி அளித்தார் ரமேஷ். இதை காங்கிரஸ் கட்சி சற்றும் கண்டுகொள்ளவில்லை, தமிழக முதல்வர் கடுமையான முறையில் எச்சரித்தும் கூட அதை காங்கிரஸும் சரி, பிரதமர் மன்மோகன் சிங்கும் சரி, சோனியாவும் சரி கண்டு கொள்ளவே இல்லை.

மேலும் தனித்து நின்றால் டெபாசிட் கூட வாங்க முடியாத அளவுக்கு 'பலம் வாய்ந்த' தமிழக குட்டி காங்கிரஸ் தலைவர்கள் எல்லாம் கருணாநிதி ஜாடையாகப் பேசுவதும், அட்வைஸ் தருவதும், கிண்டலடிப்பதுமாக கிளம்பியுள்ளனர். இவர்களுக்கு 'ராகுல்ஜி'யின் ஆசிர்வாதம் உள்ளதாக திமுக நம்புகிறது.

இப்படி காங்கிரஸின் போக்கு தாறுமாறாக போக ஆரம்பித்திருப்பதால்தான் திமுகவும் தன் பங்குக்கு இப்போது கோபத்தைக் காட்டுவதாகத் தெரிகிறது.

காங்கிரசின் இந்தப் போக்கை இனியும் பொறுக்க முடியாத நிலைக்கு வந்து விட்டதைத் தான் முதல்வர் கருணாநிதி மறைமுகமாக சுட்டிக் காட்டியிருக்கிறார்.
கட்சியை வளர்க்கிறோம் என்ற பெயரில் திமுகவை மேலும் ஒதுக்கவோ அல்லது ஒடுக்கவோ முயன்றால் காங்கிரசுக்கு எதிரான களத்தில் குதிப்பதைத் தவிர தங்களுக்கு வேறு வழியில்லை என்பதை தான் திமுகவின் பொதுக் குழு தீர்மானங்கள் கூறுவதாகத் தெரிகிறது.

பொதுக்குழுவில் மொத்தம் 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் 19 தீர்மானங்கள் மத்திய அரசுக்கு 'வேண்டுகோள்' விடுப்பவையாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
திமுகவை காங்கிரஸ் தொடர்ந்து புறக்கணித்தால் இந்த 'வேண்டுகோள்கள்' எல்லாம் அப்படியே 'கோரிக்கைகளாக' மாறலாம்.
'கோரிக்கைகளும்' நிறைவேற்றப்படாவிட்டால் 'கெடு்'க்களும் வரலாம்.

2004ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன் பாஜக கூட்டணியில் இருந்து விலக திமுக சொன்ன முக்கிய காரணம், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து தர மறுக்கிறார்கள் என்பது தான்.
இது தொடர்பாக திமுக பொதுக்குழுவில் தீர்மானங்களை 'கோரிக்கையாக' வைத்தும் பாஜக கேட்கவில்லை என்பதால் தான் கூட்டணியை விட்டு விலகுவதாக திமுக சொன்னது.

இதனால் தான் இப்போது திமுக பொதுக் குழுவில் வைக்கப்பட்டுள்ள 'வேண்டுகோள்களும்' முக்கியத்துவம் பெறுகின்றன.

திமுக இந்த 'வேண்டுகோள்கள்' எதிர்காலத்தல் 'கோரிக்கைகளாக' மாறுவதும் மாறாமல் போவதும் காங்கிரஸ் நடந்து கொள்ளும் விதத்தை பொறுத்தே அமையும்.

கருத்துகள் இல்லை: