வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

கிழக்கு மாகாண அரசியல்வாதிகளான இராஜதுரை, தங்கத்துரை ஆகியோரை குறிவைத்து (1977ல்) எய்த எறிகணை இன்று வடமாகாண மேலாதிக்க அரசியல்வாதிகளின் தலையை துண்டித்துவிட்டது.


நாங்களே ராசாக்கள், நாங்களே மந்திரிகள் இது தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகரான திரு எஸ்.ஜே.வி செல்வநாயகம் அவர்களின் மறைவிற்குப்பின்னர் தமிழ்மக்களின் அரசியலில் ஏற்படுத்தப்பட்ட எழுதப்படாத யாப்பாகும். இந்த நிலையிலேயே திரு செல்வநாயகம் அவர்களின் மறைவிற்குமுன்னர் அதாவது திரு செல்வநாயகம் அவர்கள் 1977 ஏப்ரல் மாதம் 26 ந் திகதி மரணமானார். அவர் முற்றாக செவிப்புலன் இழந்திருந்த நிலையில் 1976 ம் ஆண்டு மே மாதம் 14 ந் திகதி அன்று கீரியும், பாம்புமாக வடமாகாண அரசியலில் செயற்பட்ட தமிழரசுக் கட்சியினரும், தமிழ் காங்கிரஸ் கட்சியினரும் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி என்னும் பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றினை உருவாக்கினர்.


புதிய அரசியல் கட்சியின் உருவாக்கத்திற்கான அடிப்படைக் காரணிகள் என்ன?


1970ம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் வடமாகாணத்தின் பிரதான அரசியல்வாதிகளென அறிமுகமான சிலர் தோல்வியடைந்தனர். அதாவது திரு ஜீ.ஜீ. பொன்னம்பலம் ( யாழ்ப்பாணம்) மு.சிவசிதம்பரம் (உடுப்பிட்டி) தா.சிவசிதம்பரம் (வவுனியா) திரு அ.அமிர்தலிங்கம் (வட்டுக்கோட்டை) ஈ.எம்.வி நாகநாதன் (நல்லூர்) முன்னைய மூவரும் தமிழ் காங்கிரஸ் கட்சியினதும், பின்னைய இருவரும் தமிழரசுக்கட்சியினதும் உறுப்பினர்களாவார். இந்நிலையில் இவர்களின் அரசியல் மறுவாழ்விற்கான ஒரு நாடகமே புதிய அரசியல் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியின் உருவாக்கமாகும்.


திரு செல்வநாயகம் அவர்களின் மறைவிற்குப் பின்னர் கட்சியின் தலைமைப் பதவியினை ஏற்பதற்கான அனைத்து தகைமைகளையும் தன்னகத்தே கொண்டிருந்த மட்டுநகர் பாராளுமன்ற உறுப்பினரான திரு செ இராசதுரை அவர்கள் புறந்தள்ளப்பட்டு கட்சியின் முக்கிய பதவிகள் இரண்டும் அதாவது தலைவர், செயலாளர் வடமாகாண அரசியல்வாதிகளின் பரம்பரைச் சொத்தாக ஆக்கப்பட்டு முறையே மு. சிவசிதம்பரம், அ.அமிர்தலிங்கம் ஆகிய இருவரினதும் அதிகாரத்தின்கீழ் கொண்டுவரப்பட்டது.


அதன்பின்னர் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதியாக வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமை தாங்கினார்.


குறிப்பு –திரு இராஜதுரை அவர்கள் கட்சியின் தலைமைப்பதவியினை வகிப்பதற்காக கொண்டிருந்த தகைமைகள் என்ன?


1952ம் ஆண்டு முதல் தமிழரசுக் கட்சியின் மட்டுநகருக்கான அமைப்பாளராகவும், 1956 ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக மட்டுநகர் மக்களினதும் கிழக்கு மாகாணத்தினதும் முடிசூடா மன்னனாக, பாராளுமன்றப் பிரதிநிதியாக தெரிவானது மட்டுமன்றி மட்டுநகர் மாநகர சபையின் முதலாவது நகர பிதாவாகவும் தெரிவுசெய்யப்பட்டு பணியாற்றிய பெருமைக்குரியவராக மட்டுநகர் மக்களால் நேசிக்கப்பட்டவராகும். அதேவேளை திரு மு. சிவசிதம்பரம் அவர்கள் 1956,ல் பருத்தித்துறையிலும் மற்றும் 1970ம் ஆண்டுத் தேர்தலில் உடுப்பிட்டியிலும் போட்டியிட்டு தோல்வியடைந்ததுடன் திரு அ அமிர்தலிங்கம் அவர்கள் 1952, மற்றும் 1970 ம் ஆண்டுப் பொதுத் தேர்தல்களில் வட்டுக்கோட்டையிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்களாகும்.


இந்நிலையிலும் திரு இராசதுரை அவர்கள் கிழக்கு மாகாணத்தவர் என்னும் காரணத்தினால் அவர் தலைமைப்பதவியில் அமர்வதற்கு யாழ் மேலாதிக்க சக்திகள் இடமளிக்கவில்லை. அத்துடன் மட்டும் அவர்கள் தமது மேலாதிக்க அதிகாரத்தினை நிறுத்திக்கொள்ள முயலவில்லை. 1977ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் திரு இராசதுரை அவர்களை அரசியலிலிருந்து அகற்றும் நடவடிக்கையாக மட்டுநகர் மக்களின் கருத்துக்களுக்கு எவ்வித மதிப்புமளிக்காமல் திரு இராசதுரை அவர்களுக்கு எதிராக மட்டுநகர் தொகுதியில் திரு காசி ஆனந்தன் என அழைக்கப்படும் காத்தமுத்து சிவானந்தன் என்பவர் நிறுத்தப்பட்டார். ஆனால் அவரால் வெற்றியீட்ட முடியவில்லை.


அதேபோல் திருகோணமலை தொகுதியிலும் திரு தங்கத்துரை அவர்களுக்கு எதிராக திரு சம்பந்தன் (1977) நிறுத்தப்பட்டார்.


குறிப்பு –சம்பந்தனைவிட தங்கத்துரைக்கு இருந்த தகைமைகள் என்ன?


1970ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் முதன்முதலாக மூதூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்தான் திரு தங்கத்துரை. அதே ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் திருமலை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் திரு பா நேமிநாதனாகும். அவரின் பதவிக்காலத்தின்போது மக்களுக்கு அவர் சரிவர பணியாற்றவில்லை என்னும் முறையீடுகள் தமிழரசுக் கட்சியின் தலைமைப்பீடத்திற்கு தொகுதி மக்களால் முறையீடு செய்யப்பட்டமையைத் தொடர்ந்து கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதற்கமைய திருமலைத் தொகுதி மக்களினது தேவைகளையும் கவனிக்கும் பொறுப்பும் திரு தங்கத்துரை அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அவரே திருமலை மக்களினது தேவைகளையும் நிறைவேற்றினார்.


இந்நிலையிலேயே அமிர்தலிங்கத்தினதும், சிவசிதம்பரத்தினதும் அதிகாரம் தங்கத்துரையை திருமலைத் தொகுதிக்கான வேட்பாளர் (1977) பட்டியலிலிருந்து நீக்கியதுடன் சம்பந்தனுக்கு வழங்கப்பட்டது. இருந்தும் பின்னர் இடம்பெற்ற (1989, 1994 ஆகிய இரு தேர்தல்களிலும் தோல்வியடைந்த சம்பந்தன் (10-10–2000ல்) இடம்பெற்ற தேர்தலில் போட்டியிட அஞ்சியநிலையில் அவரது மருமகன் முறையான சிவபாலன் என்பவரை களமிறக்கி அதிலும் தோல்வியைத் தழுவினார். இந்நிலையில் தம்மை பாராளுமன்ற பலகணியில் அமாவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்த திரு அமிர்தலிங்கம் அவர்களை கொன்றொழித்த பிரபாகரனின் பாதங்களில் சாஸ்ட்டாங்க நமஸ்காரம் பண்ணியதற்கமையவே (05-12-2001ல்) இடம்பெற்ற தேர்தலில் மீண்டும் பாராளுமன்ற பலகணியில் அமர்வதற்கான வாய்ப்பினை தமதாக்கினார். அதனைத் தொடர்ந்து பிரபாகரன் இடும் கட்டளைகளை சிரம்மேல் சுமந்து பாராளுமன்றத்தில் குமுறிய சம்பந்தனின் (18.05.2009)ற்குப் பிந்திய வரலாறு என்ன?


இலங்கையில் எந்தவொரு தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இன்றுவரை மேற்கொள்ளாத புதிய அரசியல் நடைமுறை ஒன்றினை அரங்கேற்றிய சம்பந்தன் தனது ஏகப்பிரதிநிதியும் முன்னாள் எஜமானனுமான பிரபாகரனை கொன்றொழித்த இராணுவத் தளபதியான சரத் பொன்சேகாவுடன் தமிழ் மக்களுக்கான விலையினை தெரிவித்து அவருடன் உடன்படிக்கை ஒன்றினை ஏற்படுத்தினார். அதற்கமைய வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்த தமிழ் மக்களை சரத் பொன்சேகாவிற்கு வாக்களிக்குமாறு பகிரங்கமாகவே மேடைகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். ஆனால் அதுவும் தோல்வியிலேயே முடிவுற்றது.


கிழக்கு மாகாண அரசியல்வாதிகளான இராஜதுரை, தங்கத்துரை ஆகியோரை குறிவைத்து (1977ல்) எய்த எறிகணை இன்று வடமாகாண மேலாதிக்க அரசியல்வாதிகளின் தலையை துண்டித்துவிட்டது.


அன்று கிழக்கு மக்களின் கதாநாயகர்கள் நாங்களே எனவும் கிழக்கிலங்கை மக்கள் வெறும் நடிகர்களே எனவும் முழக்கமிட்டவர்கள் அனைவரினதும் அதிகாரங்களை தனது கையில் இன்று எடுத்துக்கொண்ட (கிழக்கு மாகாணத்தவரான) சம்பந்தன் நானே ராஜா, நானே மந்திரி நீங்கள் அனைவருமே எனது அடியாட்களே என வடமாகாண மேலாதிக்க சிந்தனையாளர்களுக்கு தனது முதலாவது அதிகார பலத்தினை பிரயோகித்துள்ளார். பிரபாகரனிடம் இருந்த அதிகாரத்தினைவிட இன்று சம்பந்தனிடமுள்ள அதிகாரம் வட மாகாண அரசியல்வாதிகள் அனைவரையும் மண்டியிட வைத்துள்ளது.


அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஸ்தாபகரான திரு ஜீ.ஜீ பொன்னம்பலத்தின் வாரிசான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கதி என்ன? புலியின் அதிகாரமிக்க உறுப்பினர்களான செல்வராஜா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன், எம்.கே சிவாஜிலிங்கம், என் ஸ்ரீகாந்தா, சதாசிவம் கனகரெத்னம், மற்றும் சிவநாதன் கிஸ்ஸோர். ரசீம் முகமட் இமாம் இவர்களுக்கு ஏற்பட்ட கதியென்ன?


இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவரான அப்பாப்பிள்ளை வினாயகமூர்த்தி சம்பந்தனின் கால்களில் விழுந்து தம்மை யாழ் மாவட்ட வேட்பாளர் பட்டியலில் இணைத்துக்கொண்டார். ஆனால் இடம்பெறப்போகும் தேர்தலில் (08.04.10) வினாயகமூர்த்தி வெற்றிபெறுவது பகல் கனவே!


இவர்கள் தவிர புலிகளினால் வேட்பாளர் நியமனங்கள் வழங்கப்பட்டவர்கள் என அடையாளங்காட்டப்பட்டு தங்கேஸ்வரி கதிராமன், சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி.


மற்றும் திருமலைத் தொகுதியின் உறுப்பினரான கதிர்காமத்தம்பி துரைரத்தினம் என்பவர் சம்பந்தனுக்கும் சரத் பொன்சேகா அணியினருக்குமிடையிலான இரகசிய உடன்படிக்கையினை வெளியிட்டமைக்காகவும், இரு சாராருக்குமிடையில் இடம்பெற்ற நிதிப்பரிமாற்றங்களை சிலரிடம் தெரிவித்த குற்றச்சாட்டிற்காகவும் வேட்பாளர் பட்டியலிலிருந்து விலக்கப்பட்டுள்ளார்.


வண்டியும் ஒரு நாள் ஓடத்திலேறும், ஓடமும் ஒரு நாள் வண்டியிலேறும், சக இனத்தவர்களையே அடிமைகளாக்க நினைப்பவர்களின் அதிகாரம் ஒருபோதும் நிலைத்திருப்பதில்லை என்பதனை நினைவு கூர்வதற்காகவே இக்கட்டுரை வெளியிடப்படுகின்றது.
ஆசிரியர் மஹாவலி.கொம்

கருத்துகள் இல்லை: