இலங்கையில் சாதியப் பிரிவுகள் தமிழ்-சிங்கள மக்கள் மத்தியில் நிலவிவந்தாலும் வடபகுதியில் மட்டுமே மிகவும் ஆழமாக வேரூன்றி உள்ளது. அது மட்டுமன்றி வடபகுதியில் மட்டுமே சாதியம் என்பது பல்வேறு படிநிலை ஏற்றத்தாழ்வுகளுடன் தீண்டாமை எனும் மானிட விரோதக் கருத்தியலையும் உள்ளடக்கியதாக இருந்து வருகின்றது. இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட இச்சாதியம் இலங்கையின் வடபகுதியில் மட்டும் வேரூன்றக் காரணம் என்னவென்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
வெள்ளக்காரர்கள் இலங்கையை ஆட்சி புரிந்த காலத்தில், குறிப்பாக ஆங்கிலேயர்களுடைய வருகைக்குப் பிற்பாடு கல்விப் பாரம்பரியத்திலும், காலணித்துவ நிர்வாக அலுவலகங்களிலும் மிகப்பயன் பெற்றவர்களாக இருந்தவர்கள் தமிழ்பேசும் மக்களில் ஒரு பிரிவினர் மட்டுமே என்பதை வரலாறு எமக்கு சுட்டிக்காட்டுகின்றது.
இவ்வாறான வாய்ப்புகள் எப்படி நிகழ்ந்தது என்பதை நாம் தேடுகின்றபோது ஆங்கிலேயர்களது அடிமைத்தனத்தை ஏற்றுக்கொண்டவர்களாகவும், அவர்களது சுரண்டல்களுக்கு துணைபோனவர்களாகவும் செயல்படுவதனூடாகவே தமிழர்களில் ஒரு பிரிவினர் பல்வேறு வாய்ப்புகளையும் வசதிகளையும் பெறக்காரணமாகியது. இந்த ஒரு பிரிவினர் தான் யாழ்ப்பாண மேலாதிக்க தன்மைகொண்ட ‘சுண்டி எடுக்கப்பட்ட’ உயர் குலத்தோர் எனச்சொல்லப்படுபவர்களாகும். இக்குலத்துக் கல்விமான்கள் சிங்கள மக்களுக்கும், ஏழைத் தமிழர்களுக்கும் இடைத்தரகர்களாக செயல்பட்டு வந்துள்ளனர்.
இக்கல்விமான்களின் வழி வந்த ஆறுமுகநாவலர் அவர்களே தமிழ்ச் சுமூகத்தில் நிலவும் சாதியத்தை இறுக்கமாக கட்டமைத்த முதல் மனிதராவர். இவரைத்தொட்டு தொடர்ச்சியாக வந்த தமிழ்த் தலைவர்கள் எனச் சொல்லப்படுவோர் சாதிய வெறியை ஊட்டி வளர்த்ததுடன் தீண்டாமைக் கொடுமையையும் கடைப்பிடித்து வந்துள்ளனர். சாதியின் பெயரால் ஒரு குறிப்பிட்ட தமிழ்பேசும் மக்கள் ‘எழிய’ சாதியினர் எனவும் , பஞ்சமர் எனவும், சிறுபான்மைத் தமிழர் எனவும் அழைக்கப்படுவதுடன் சமூக உரிமைகள் மறுக்கப்பட்ட வர்களாகவும் இருந்து வருகின்றனர்.
இவ்வாறான சமூக ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டு போரடப் புறப்பட்டட முதல் மனிதன் திரு. ஜோவல் போல் என்பவராகும். இவர் 1927 இல் கூலித் தொழிலாளர் சங்கம் என்னும் அமைப்பின் ஊடாக தமது போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றார். இந்த அனுபவத்தினூடாக விழிப்புணர்ச்சிபெற்ற பல இளைஞர்களின் முயற்சியே வாலிபர் சங்கங்களாக தோற்றம் பெற்று சிறுபான்மைத் தமிழர் மகாசபையாக பரிணமித்து 1980 வரை சாதிய ஒடுக்குமுறைக்கெதிராக உறுதியுடன் போராட வழிகோலியது.
மறுபுறமாக தீவிர குணாம்சம் கொண்ட வேறுபலர் முற்போக்கு சக்திகளையும் இணைத்து தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் எனும் அமைப்பின் ஊடாக சாதிய ஒடுக்குமுறைக்கெதிராக தமது போராட்டத்தை முன்னெடுத்தனர். மேற்படி இரு அமைப்புகளும் சாதியத்திற்கு எதிராக போராடும் அதே நேரத்தில் முதலாளித்துவ ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் போராடிவந்தனர். தமது உரிமைகளுக்காக தாமே போராடி பல வெற்றிகளையும் கண்டனர். இவ் இயக்கங்கள் 1980 இல் விடுதலைப்புலிகளால் தடைசெய்யப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியல் அனாதைகளாகவே இருந்து வருகின்றனர்.
தமிழ் மக்களின் ஒரு பிரிவினர் மீது மேற்கொண்ட தீண்டாமை கொடுமைகளை எதிர்கொண்டு தீவிரமாக போராடிக்கொண்டிருந்த தலித் அமைப்புகளை யாழ் மேலாதிக்க கட்சிகளால் எதிர்கொள்ள முடியவில்லை. எனவே அக்கட்சிகள் குறிப்பாக தமிழரசுக் கட்சியும், தமிழ் காங்கிரசும் தலித் மக்களின் போராட்டங்களை வளரவிடாமல் தடைசெய்ய பல்வேறு சதிகளை மேற்கொண்டனர்.
இலங்கையில் இடதுசாரிகளின் ஆதரவுடன் அமைந்த ஆட்சிக்காலத்தில் தலித் அமைப்புகளும், சிங்கள தொழிலாளர்களும் இணைந்து பல போராட்டங்களை மேற்கொண்டு வந்தனர். அதனை பொறுக்கமுடியாத மேற்படி வலதுசாரி சிந்தனைகொண்ட தமிழ்க் கட்சிகளானது சிங்கள வலதுசாரிகளுடன் இணைந்து பல இடையூறுகளை செய்து வந்துள்ளனர். தென் இலங்கை வலது சாரிகளும், வட இலங்கை வலது சாரிகளும் ஆளுக்கு ஆள் இனவாதம் பேசி தமிழ் சிங்கள மக்களுக்கிடையேயான உறவுகளை சீர்குலைத்து வந்தனர். இவ் இனவாத சிந்தனை வலுப்பெறுவதற்காக வட இலங்கை வலதுசாரிகள் முன்வைத்த கோட்பாடுகள்தான் ‘வட்டுக்கோட்டைத் தீர்மானமும்’, ‘தமிழீழக் கோசமுமாகும்’.
தமிழ் முதலாளிகள் (‘அப்புக்காத்துகள்’) ஒன்றிணைந்து தமிழர் கூட்டணி என்னும் பெயரில் ஒரு தமிழர் இயக்கத்தை உருவாக்கினர். தமிழ் ஈழம் கிடைத்த பின்னர் வலு இலகுவாக சாதிப்பிரச்சனையை தீர்த்துவிடலாம் என தலித் மக்களின் ஒரு சிலரிடம் ஆசைகாட்டி தம்பக்கம் இழுக்க முயன்றனர். தலித் மக்களை திருப்திப்படுத்தும் வகையில் தலித் சமூகத்தை சேர்ந்த இராஜலிங்கத்தை பாராளுமன்ற உறுப்பினர் ஆக்கியதோடு தலித் மக்களின் தொடச்சியான சமூகவிடுதலைப் போராட்த்தை சீர்குலைத்தும் வந்துள்ளனர்.
கூட்டணியினரது இனவாதப்பேச்சுக்களால் உள்வாங்கப்பட்ட இளைஞர்கள் ஆயுதம் தாங்கிய இயக்கங்களாக மாறிய பின் கூட்டணியினருது தலைமைத்துவம் இளைஞர்களால் பறிக்கப்பட்டது. தமிழ் இளைஞர்கள் மத்தியில் பல விடுதலை இயக்கங்கள் உருவாகினாலும் ஈ.பி.ஆர்.எல்.எவ் எனும் இயக்கம் மட்டுமே சாதி ஒழிப்பின் அவசியத்தையும் முன்வைத்து இடதுசாரிக் கோட்பாட்டுடன் போராடிவந்தது. இதன் காரணமாக பல தலித் இளைஞர்கள் அக்கட்சியில் இணையும் சந்தர்ப்பமும் ஏற்பட்டது.
இவ் இயக்கத்தின் கோட்பாடுகள் சாதியைப் பேணிப்பாதுகாக்க முனையும் யாழ் மேலாதிக்க சாதியினருக்கு இடையூறாகவே இருந்துவந்தது.
எனவே ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் கோட்பாடுகளுக்கு எதிரான கருத்தியலைக்கொண்ட இயக்கத்தை தேர்வு செய்து அதை ஆதரித்தும் உற்சாகப்படுத்தியும் வந்தனர். அவ்வாறு அவர்கள் ஆதரித்து வளர்த்த ‘பிராணிதான்’ விடுதலைப் புலிகள். விடுதலைப் புலிகளின் வளர்ச்சியின் பின்னணியில்தான் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி ஈழம் பள்ளர் இயக்கம் என அடையாளப்படுத்தப்பட்டு பின்பு துரோகிகளுமாக்கி அழித்துச் சின்னாபின்னமாக்கப்பட்டது.
எனவே சாதியைக் காப்பாற்றுவதற்காக யாழ் மேலாதிக்கம் எந்த பிணம் தின்னும் பேயுடனும் கூட்டுச்சேரத் தயங்காது என்பது இலங்கை அரசியல் வரலாற்றின் சாட்சியங்களாக இருக்கிறது.
தொடர்ச்சியாக இடம்பெற்ற யுத்தத்தில் முகம் கொடுத்துப் போராட முடியாத யாழ் மேலாதிக்கம் தமது உயிர் உடமைகளை காப்பாற்றும் நோக்கோடு செழிப்பான நாடுகளுக்கு புலம்பெயர்ந்து தஞ்சம் அடைந்தனர். இருப்பினும் தமது நலன்களைப் பாதுகாக்கும் தகுதி கொண்ட ஒரு இயக்கம் புலிகள்தான் என்பதையும் அடையாளம் கண்டுகொண்டனர். தமது யாழ் மையவாத சிந்தனையை தக்கவைக்கும் நோக்கத்துடனேயே புலிகளுக்கான பண உதவிகளையும் அதன் அனைத்து ஆராஜகப்போக்கையும் தடவிக்கொடுத்து வளர்த்து உலகின் மிகப் பலம்பெற்ற பயங்கரவாத இயக்கமாக புலிகள் வளரவும் காரணமாக இருந்தவர்கள்.
விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் ஏகப்பிரதி நிதிகள் என்ற காலத்தில் நடைபெற்ற இலங்கை பாராளுமன்றத்தேர்தலில் தாங்கள் சாதி பாகுபாடு காட்டுவதில்லை என்று காட்டுவதற்காக தேடிப்பிடித்த மனிதன்தான் தலித் சமூகத்தைச் சேர்ந்த சிவநேசன் என்ற அப்பாவியாகும். சாதியப் போராட்டங்கள் பலவற்றில் பங்குகொண்ட இம் மனிதன் இறுதியில் தமிழ்த் தேசிய போராளியாகி மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். எனவே தொடர்ச்சியாகவே சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் ஏமாற்றப்படுபவர்களாகவும் , யாழ்மேலாதிக்க சதிகளை அறிந்து கொள்ள முடியாதவர்களாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழர் விடுதலைப்போராட்டம் என்ற பெயரில் இன்றுவரை நடந்து வரும் சகலவித போராட்டங்களிலும் முன்னுக்குத் தள்ளப்பட்டு யாழ் மேலாதிக்க அதிகாரங்களுக்காக பலிகொடுக்கும் கூட்டமாக பயன்படுத்தப்பட்டும் வருகிறார்கள். மாவீரர்களாக, துரோகிகளாக, சமூகவிரோதிகளாக கொல்லப்பட்டோரின் எண்ணிக்கையை அவதானித்தோமாயின் அவர்களில் பெரும்பான்மையாக தலித் சமூகத்தவர்களையே நாம் காணக்கூடியதாக இருக்கும். மேலும் புலம் பெயர்ந்த தமிழர் சிலர் தொடர்ந்தும் யுத்தம் நடத்தும் முகமாக வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்றும், நாடு கடந்த தமிழீழம் என்றும் வேடிக்கைகாட்டி சொந்த தேசத்தில் வாழும் அப்பாவி உயிர்களை பலி கொள்ள முயல்கின்றனர். இந்தப் புலம்பெயர் பிற்போக்கு வாதிகளே எமது இனம் அமைதியடனும் சமாதானமாகவும் வாழவிடக்கூடாது என்பதில் மிக உறுதியாக செயலாற்றிவருகின்றனர்.
‘ஆண்டபரம்பரை மீண்டுமொருமுறை ஆழ நினைப்பதில் என்ன தவறு’ ஆமா நான் கேக்கிறேன் இவர்கள் யாரை ஆண்டார்கள். போத்துக்கேயர்களையா? ஓல்லாந்தர்களையா? ஆங்கிலேயர்களையா? இல்லை சிங்களவர்களையா? யாரை ஆண்டார்கள்? இவர்கள் அடக்கி ஒடுக்கி சிறைப்படுத்தி அடிமைப்படுத்தி ஆண்டதெல்லாம் சாதியின் பெயர் சொல்லி தம் மொழி பேசும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தையே இவர்கள் ஆண்டு பெருமை கண்டவர்கள். அதைத்தான் மீண்டும் நடைமுறைப்படுத்த முயற்சிக்கின்றனரா? எம்மை ஆள நினைப்போரை, எம்மீது தொடர்ந்தும் சவாரி செய்ய நினைப்போரை நாம் தொடர்ந்தும் அனுமதிக்க வேண்டுமா?
புலம் பெயர் தமிழர்கள் சிலர் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் நாம் ஒன்றுக்கு பல தடவை மிக நிதானமாக சிந்திக்கவேண்டும். தங்கள் நலன் கருதி கோடி கோடியாய் பணம்தேடும் நோக்குடுன் செயற்படும் இவர்கள் திட்டத்தை நாம் இனம் காணவேண்டம். வன்னித் தலைமையை உசுப்பேத்தி, உசுப்பேத்தி ஒரு வழி பண்ணி விட்ட கதையை நாம் பாடமாகக் கற்றுக்கொண்டுள்ளோம். எமது தேசத்தில மரணங்கள் மலியவேண்டும் அதைக்காட்டி தாம் கோடி கோடியாக சம்பாதிக்கவேண்டும் என்பதே இவர்களது அடிப்படை நோக்கமாக உள்ளது. இலங்கை ஒரு யுத்த சூழலுக்குள் இருக்கும் வரைதான் இவர்களால் சம்பாதிக்கமுடியும. அத்துடன் மேற்குலக நாடுகளின் சூட்சிக்கு மொத்த இலங்கையையும் காட்டிக்கொடுக்க முனையும் இவர்களால் சாதி ரீதியாக ஒடுக்கப்படும் மக்கள் மீது அக்கறைகொள்வது எப்படி சாத்தியமாகும். இவர்கள் போடும் தமிழ்த் தேசிய கபட நாடகங்களில் நாம் சிக்குண்டு சின்னாபின்னப்பட்டது போதும். எமது கண்களை அகல விழித்துக் கொள்வோம்.
எமக்கு இப்போது ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. இச்சந்தர்ப்பத்தை நாம் பயன் படுத்த தவறுவோமாயின் மேலும் மேலும் எமது சமூகம் எமாற்றப்படுவது தொடரும் என்பதை நாம் உணரவேண்டும்.
வடபகுதியில் தற்போது சனத்தொகையில் நாற்பது வீதத்திற்கு மேற்படடோர் எமது சமூகமாக இருப்பதால் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் குறைந்தது நான்கு உறுப்பினர்களாவது தெரிவு செய்யப்படவேண்டும். ஆனால் கடந்த காலங்களில் யாழ் மேலாதிக்க அரசியல் தலைமைகள் எமது சமூகத்திலிருந்து ஒருவரை உறுப்பினராக்கி எம்மை முட்டாள்களாக்கிய செயலை நாம் தொடர்ந்து அனுமதிக்க முடியாது. இம்முறை நாம் மிகவும் விழிப்பாக செயல்படவேண்டும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு இம்முறையும் எங்களது சமூகத்தவர்களை தமது வலையில் சிக்கவைத்து தமது நலன் சார்ந்த அரசியலை முன்னெடுக்க நாம் அனுமதிக்கக்கூடாது. எனவே தலித் சமூகத்தைச்சேர்ந்த அச்சமூக நலன்களில் அக்கறை கொண்ட நான்கு உறுப்பினர்களை பாராளுமன்ற பிரதிநியாக ஏற்றுக்கொள்ள எந்தக்கட்சி முன்வருகின்றதோ அக்கட்சியை நாம் பயன் படுத்திக்கொள்ளலாம். இல்லாத பட்சத்தில் நாம் எமது பிரதிநிதிகளை சுயேட்சையாகவே பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிட தாயார்படுத்தவேண்டியுள்ளது.. இது உடனடியான பயனைக் கொடுக்காதுபோனாலும் நீண்டகால எமது வளர்ச்சிக்கு இதுவே பயனுள்ள செயல்பாடாக அமையும்.
தமிழ் தேசியத்தின் பெயரில் வெளிநாடுகளில் கோடி கோடியாக சம்பாதிப்பதற்கு அவர்கள் போடும் அரசியல் கோசங்களை நாம் துணிவுடன் நிராகரிக்கவேண்டும். எமக்கான தலைமையை நாமே தேர்ந்தெடுக்கவேண்டும். இன்று உருவாகியிருக்கும் ஜனநாயகச் சூழலை மிகவும் நல்ல முறையில் பயன் படுத்திக்கொள்ளவேண்டும். எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் பதிய அணுகுமுறைகொண்ட அரசியலை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். எனவே மீண்டும் சிந்திப்போம்.. செயல்படுவோம்.. தொடரும் எமது ‘இழிவை’ அகற்றுவோம்.
(சித்தன்) ‘சூத்திரம்’ இணையத்திற்காக எழுதப்பட்டது
© copyright 2009 thuuu.net
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக