tamil.oneindia.com - Vignesh Selvaraj : “பாஜகவின் வெற்றி தெளிவான சிக்னல்”- தனது கோட்டையில் பாஜக வென்றதை பாராட்டிய காங்கிரஸ் எம்.பி சசி தரூர்
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் பாஜகவின் வெற்றிக்கு காங்கிரஸ் எம்.பி சசி தரூர் வாழ்த்து தெரிவித்துள்ளார். கேரள உள்ளாட்சி தேர்தலில் சசி தரூரின் கோட்டையான திருவனந்தபுரத்தில் பாஜக வெற்றி பெற்றுள்ளது காங்கிரஸ் கட்சியினருக்கு ஷாக் கொடுத்துள்ள நிலையில் இது மக்களின் தெளிவான ஆணை என சசி தரூர் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதில் காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆளும் இடதுசாரி முன்னணி பின்னடைவை சந்தித்துள்ளது.
Shashi Tharoor Lauds BJP s Historic Thiruvananthapuram Civic Polls Win
அதேசமயம், திருவனந்தபுரத்தை பாஜக கைப்பற்றியுள்ளது. திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. மொத்தமுள்ள 101 வார்டுகளில் பாஜக 50 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. எனவே அக்கட்சி சுயேச்சைகளின் உதவியுடன் மாநகராட்சியை கைப்பற்றும். அதே நேரத்தில் எல்டிஎஃப் 29 இடங்களிலும், யுடிஎஃப் 19 இடங்களிலும் வென்றுள்ளது.
திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் எம்.பி சசி தரூரின் கோட்டையாக இருந்து வருகிறது. கடந்த 2009 முதல் அவர் தொடர்ந்து 4-வது முறையாக அந்த தொகுதியின் எம்.பியாக உள்ளார். இந்தச் சூழலில், கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
திருவனந்தபுரத்தை பாஜக கைப்பற்றிய நிலையில், அத்தொகுதி எம்.பி.யும் காங்கிரஸ் தலைவருமான சசி தரூர், "கேரள உள்ளாட்சித் தேர்தல்களில் என்னவொரு அற்புதமான முடிவுகள் நிறைந்த நாள். மக்கள் ஆணை தெளிவாக உள்ளது, மேலும் மாநிலத்தின் ஜனநாயக உணர்வு பிரகாசமாகத் தெரிகிறது.
பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றிபெற்ற ஐக்கிய ஜனநாயக கூட்டணிக்கு வாழ்த்துகள். ஆளும் இடதுசாரி கூட்டணிக்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளனர். இதுவே, சட்டசபை தேர்தலுக்கான முன்னோட்டம்.
அதேவேளையில், திருவனந்தபுரத்தில் பாஜகவின் வெற்றியும் வரலாற்றுச் சாதனையே. இடதுசாரியின் 45 ஆண்டுகால ஆட்சியை எதிர்த்து நான் பிரசாரம் செய்தேன். ஆனால், மாற்றத்தை விரும்பிய மக்கள், பாஜகவுக்கு வாக்களித்தனர்.
காங்கிரஸ் கூட்டணியின் வெற்றியாக இருந்தாலும், எனது தொகுதியில் பாஜக கூட்டணியின் வெற்றியாக இருந்தாலும், மக்களின் தீர்ப்பையே ஏற்க வேண்டும். கேரளாவின் மேம்பாட்டிற்காக நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம், மக்களின் தேவைகளுக்காக வாதிடுவோம் மற்றும் நல்லாட்சியின் கொள்கைகளை நிலைநிறுத்துவோம். முன்னேறிச் செல்வோம்" எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக