ஞாயிறு, 7 டிசம்பர், 2025

25 மாணவர்கள் சேர்ந்து அடித்தே கொன்றுவிட்டனர்! கும்பகோணம் - எங்கள் நிலை யாருக்கும் வரக்கூடாது'' - கதறி அழுத பெற்றோர்

உயிரிழந்த அரசுப்பள்ளி மாணவன் கவியரசன்

 Vikatan  :  கும்பகோணம் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சிகிச்சையில் இருந்த 12ஆம் வகுப்பு மாணவன் கவியரசன் உயிரிழந்தார்.
கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் பகுதியில் அரசு அறிஞர் அண்ணா மாதிரி மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் இனாம்கிளியூர் பகுதியைச் சேர்ந்த கவியரசன் என்ற மாணவன் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கும் அதே பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் 11ஆம் வகுப்பு மாணவன் மூக்கில் காயம் ஏற்பட்டு சிகிச்சை எடுத்துள்ளார்.


கதறி அழும் பெற்றோர்
இதுதொடர்பாக 11ஆம் வகுப்பு மாணவனின் பெற்றோர் பட்டீஸ்வரம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். மாணவர்களின் நலன் கருதி போலீஸார் வழக்குப்பதிவு செய்யாமல், இரு தரப்பினரின் பெற்றோரை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி, மாணவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். அப்போது கவியரசன் தரப்பு, 11ஆம் வகுப்பு மாணவனின் சிகிச்சைக்கான செலவை ஏற்றுக்கொண்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 3ம் தேதி கவியரசன் தரப்புக்கும், 11-ம் வகுப்பு மாணவன் தரப்பை சேர்ந்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக முன்விரோதம் ஏற்பட்டு மாணவர்களுக்குள் புகைந்துள்ளது. இந்நிலையில் 4-ம் தேதி மாலை சிறப்பு வகுப்பை முடித்துவிட்டு பள்ளியிலிருந்து கவியரசன் தன் நண்பர்களுடன் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

பட்டீஸ்வரம் கோயில் அருகே சென்றபோது 11-ம் வகுப்பு மாணவர்கள் கவியரசன் உள்ளிட்ட 12-ம் வகுப்பு மாணவர்களைத் தாக்கியுள்ளனர். அப்போது கவியரசன் தலையில் கட்டையால் அடித்து விட்டு ஓடி விட்டனர்.
இதில் சரிந்து விழுந்த கவியரசனை சக மாணவர்கள் மற்றும் அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

பட்டப்பகலில் நடுரோட்டில் பள்ளி மாணவர்கள் சக மாணவனைத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து கவியரசனுக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக பட்டீஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதுடன் கவியரசனைத் தாக்கிய 11-ம் வகுப்பு மாணவர்கள் 15 பேரைக் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.

இந்நிலையில், நேற்று மாணவன் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தரப்புக்கு தெரிவித்தது. இதனால் கவியரசனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மிகுந்த சோகத்தில் மூழ்கினர்.

இதனை தொடர்ந்து, நேற்று இரவு சுமார் 2 மணியளவில் கவியரசன் இறந்ததாக தெரிவித்தனர். இதை கேட்ட பெற்றோர் உள்ளிட்டவர்கள் கதறி அழுதனர். மேலும், உரிய நீதி கிடைக்காமல் உடற்கூறாய்வு செய்ய அனுமதிக்க மாட்டோம் எனக் கொந்தளித்தனர்.

கவியரசனின் பெற்றோர் மற்றும் ஏராளமான உறவினர்கள் இன்று மருத்துவக்கல்லூரியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, “உடற்கூறாய்வு செய்ய அனுமதிக்க மாட்டோம், உடலை வாங்க மாட்டோம்” என கூறியதால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இது குறித்து கவியரசன் தாய் ராஜலட்சுமி பேசுகையில், “என் புள்ள சிரிச்ச முகத்துடன் இருப்பான், எந்த வம்பு தும்புக்கும்போக மாட்டான். அப்படிபட்டவனை பள்ளியிலிருந்து வரும் போது 25 மாணவர்கள் சேர்ந்து அடித்துள்ளனர். துவண்டு விழுந்தவனை மிதித்து அடித்துக்கொன்று விட்டனர்.

நான்கு நாளா தவித்து நின்று கொண்டிருக்கிறோம். அரசு, பள்ளி கல்வித்துறை அமைச்சரும், ஏன் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளும் எங்களுக்கு ஆறுதல் சொல்லவில்லை, ஆறுதலாக நிற்கவில்லை. நாங்கள் எங்க மகனை இழந்து நிற்கிறோம்; எங்க நிலை இனி யாருக்கும் ஏற்படக்கூடாது” எனக் கலங்கினார்.

மேலும் அந்த பகுதி மக்கள் சிலர் பேசுகையில், "பட்டீஸ்வரம் பகுதியில் கஞ்சா விற்பனை அமோகமாக நடக்கிறது. மாணவர்கள் கஞ்சா போதையில் தான் கவியரசனை அடித்துக்கொள்கிற அளவுக்கு சென்றுள்ளனர். இதை ஆதாரத்துடன் நிரூபிக்கத் தயார். 25 பேர் சேர்ந்து அடித்துள்ளனர். ஆனால், போலீசார் 15 பேரை மட்டும் கைது செய்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட மற்ற மாணவர்களையும் கைது செய்ய வேண்டும். ஏற்கெனவே கைது செய்யப்பட்ட மாணவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். கவியரசன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். உரிய நிவாரணம் வழங்க வேண்டும். கவியரசன் அரசு பள்ளி மாணவன் என்பதால் முதலமைச்சர் எங்களுக்கு ஆறுதல் சொல்லியிருக்கலாம். நாங்கள் ஒரு பிள்ளையை இழந்து விட்டோம். வரும் காலங்களில் இது போன்ற இழப்பு ஏற்படக்கூடாது. எந்த மாணவனுக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க பள்ளியில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட மாணவர்களின் வழக்கை கொலை வழக்காக மாற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: