புதன், 20 ஆகஸ்ட், 2025

சுதர்ஷன ரெட்டி - துணை குடியரசு தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்ட்ரோக்!

 tamil.oneindia.com  - Yogeshwaran Moorthi  :  கூட்டணி கட்சிகளுக்கு ஸ்டாலின் கொடுத்த விருந்து.. அடுத்த சில நிமிடங்களில் வந்த ட்வீட்! என்ன மேட்டர்?
சென்னை: குடியரசு துணைத் தலைவர் தேர்தல் தொடர்பாக திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை மேற்கொண்டன. 
ஆழ்வார்பேட்டை முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக்குப் பின், 
இந்தியா கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். 
அதேபோல் இந்தியா கூட்டணி சார்பாக ஆந்திராவைச் சேர்ந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். தமிழரான சிபி ராதாகிருஷ்ணனை தேர்வு செய்ததன் மூலமாக திமுகவுக்கு பாஜக செக் வைத்ததாக பார்க்கப்பட்டது.

ஆனால் ஆந்திராவைச் சேர்ந்த சுதர்சன் ரெட்டியை வேட்பாளராக அறிவித்ததன் மூலமாக பாஜக கூட்டணிக் கட்சியான தெலுங்கு தேசம் கட்சி, பவன் கல்யாண் மற்றும் ஜெகன் மோகன் ரெட்டி, பிஆர்எஸ் உள்ளிட்ட தரப்புக்கு இந்தியா கூட்டணி மிகப்பெரிய நெருக்கடியை கொடுத்துள்ளது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களை ஆலோசனை நடைபெற்றது.

ஆழ்வார்பேட்டையில் முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்திற்கு முன்பாக கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு ஸ்டாலின் விருந்தையும் அளித்தார். நாளை திருமண நாளினை ஸ்டாலின் கொண்டாட உள்ளதால், இந்த விருந்தில் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதற்காக பல்வேறு கட்சித் தலைவர்களும் விருந்தில் கலந்து கொண்டனர்.

இதன்பின் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், இந்தியா கூட்டணி சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சுதர்சன் ரெட்டிக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துகள். நேர்மையாகவும் சுதந்திரமாகவும் செயல்பட்டு, குடிமக்களின் உரிமைகள் மற்றும் சமூகநீதியை உயர்த்திப் பிடித்த நீதியரசராக விளங்கிய அவர், தமது பணிக்காலம் முழுவதும் அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களைப் போற்றிப் பாதுகாத்தவர்.

நமது நாட்டின் அமைப்புகளெல்லாம் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் சூழலில், சுதர்சன் ரெட்டியை வேட்பாளராக்கியதன் மூலம், மக்களாட்சியையும் அரசியலமைப்பின் விழுமியத்தையும் பாதுகாப்பதில் நமது ஒருமித்த உறுதிப்பாடு வலுப்படுகிறது. சுதந்திரமாகச் செயல்பட்டு, இந்திய மக்களாட்சியைப் பாதுகாக்க வேண்டிய தன்னாட்சி அமைப்புகள் அத்தனையும் பாஜகவின் துணை அமைப்புகளாக மாற்றப்பட்டு, அரசியலமைப்புச் சட்டமே ஆபத்தில் சிக்குண்டுள்ளது.

இத்தகைய சூழலில், இந்தியாவின் அடிப்படைக் கொள்கைகளான மதச்சார்பின்மை, கூட்டாட்சியியல், சமூகநீதி மற்றும் வேற்றுமையில் ஒற்றுமையில் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்ட ஒருவரை ஆதரிப்பதுதான் நம்முன் உள்ள கடமை. நீட் விலக்கு, கீழடியின் தொன்மையை ஏற்றுக்கொண்டு அங்கீகரிப்பது, நியாயமான நிதிப் பகிர்வு, கல்வி நிதி விடுவிப்பு உள்ளிட்ட தமிழ்நாட்டின் நியாயமான பல கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காமல், மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்து வருகிறது.

ஆளுநர்கள் மூலமாக இணை அரசாங்கம் நடத்தி, மாநில அரசுகளின் செயல்பாட்டை முடக்கி, உயர்கல்வி நிறுவனங்களை வலுவிழக்கச் செய்யும் செயல்களிலும் ஈடுபட்டு வருகிறது. மாநில உரிமைகள் பறிப்பு, அதிகாரக்குவிப்பு, வெறுப்பு பிரசாரம் தீவிரமாக முன்னெடுப்பு, இடைவிடாத இந்தி - சமஸ்கிருதத் திணிப்பு என அரசியலமைப்பைக் குழிதோண்டிப் புதைக்கும் அநீதிகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் திமுக தொடர்ந்து தீவிரமாகக் குரல் எழுப்பி வருகிறது. மாநில உரிமைகளையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் காக்க, மதநல்லிணக்க உணர்வு கொண்ட தமிழ்நாட்டு மக்கள் அடுத்தடுத்த தேர்தல்களில் தொடர்ந்து திமுக கூட்டணி எம்பி, எம்எல்ஏ-க்ககு வாக்களித்துள்ளனர்.

எனவே சுதர்சன் ரெட்டியை ஆதரிப்பதுதான் மக்களின் முடிவுக்கும் உணர்வுக்கும் மதிப்பளிப்பதாக அமையும். ஜனநாயகவாதியாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு இடமளித்து அவையில் எதிர்க்கட்சிகளின் குரல்களுக்கு வாய்ப்பளிக்க கூடியவராக, சுதர்சன் ரெட்டி திகழ்கிறார். கூட்டாட்சியலுக்கு எதிரான போக்கு, எதேச்சாதிகாரம் மற்றும் வெறுப்புணர்வைப் பரப்புவது ஆகியவற்றை எதிர்த்து நிற்கக் கூடியவராக சுதர்சன் ரெட்டி மிகச் சரியான தேர்வு என்று பதிவிட்டு இருக்கிறார்.

கருத்துகள் இல்லை: