![]() |
![]() |
ராதா மனோகர் : யாழ் பொதுசன நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட நாள் ஜூன் 1, 1981.
இன்று ஜூன் 1, 2025 ..சரியாக 44 நான்கு வருடங்களுக்கு முன்பு நடந்த அக்கிரமம்.
மக்கள் படிக்கிறார்களே என்று ஒரு சிறு கூட்டம் வெறுப்புற்றது
இவர்களை படிக்க விடலாமா என்று அந்த சிறு கூட்டம் கருதியது
அவர்கள் விருப்பப்படியே படித்தவர்கள் நிரம்பிய சமூகம் பின்பு தற்குறிகள் நிரம்பிய சமூகமாக மாறியது.
விளைவு?
கல்வியை தூக்கி எறிந்தால் என்ன நடக்கும் என்பதை பெரிய விலை கொடுத்து எல்லோரும் படித்து கொண்டார்கள்.
நூலக தீக்கிரை என்பது வெறும் ஒரு சம்பவம் என்று கடந்து போகமுடியாது.
எந்த குற்றங்களுக்கும் பல பக்கங்கள் இருக்கும். வெறுமையாக எதிரி எதிரி என்று சிங்கள இனத்தை மட்டும் சுட்டி காட்டி யாரும் தப்பி விடமுடியாது?
அது ஒரு மோசமான இனவெறி சம்பவம்.
அந்த அளவுக்கு சமூகத்தில் ஒரு கொத்தி நிலையினை உண்டாக்கியதில் தமிழ் தலைவர்களுக்கும் பங்கு இருக்கிறது.
இனவெறியை அதிகம் தூண்டுவது நீயா நானா என்று இரு பகுதி தலைவர்களும் போட்டி போட்ட வரலாறு என்ன சாதார்னமானதா?
எப்போதும் இனவாதிகளும் பாசிஸ்டுகளும் கல்விக்கு எதிராகத்தான் செயல்படுகிறார்கள்
இன்று பாஜக சங்கிகளும் இதே பாதையில்தான் செல்கிறார்கள்
மாணவர்களை எப்படி படிக்க வைக்கலாம் என்றுதான் சுய நினைவுள்ள எவரும் சிந்திப்பார்கள்.
ஆனால் சங்கிகள் மட்டும் மக்கள் படித்து விட்டால் எங்கே தங்கள் அதிகாரம் கைநழுவி போய்விடுமோ என்று மக்களின் கல்விக்கு எவ்வளவு முட்டு கட்டை போட முடியுமோ அவ்வளவு தடங்கல்களை மேற்கொள்கிறார்கள்
கல்வியை புறந்தள்ளினால் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை உணர முடியாதவர்கள் அவர்கள்.
சங்கிகளின் உள்ளத்தில் ஊறி இருக்கும் இனவாதமும் மதவாதமும் அவர்களின் பகுத்தறிவை தொலைத்து விட்டது!
ஒரு வேளை சங்கிகளை இனம் கண்டு தூக்கி எறிய மக்கள் தவறி விட்டால்,
இலங்கையில் நடந்ததை விட பலமடங்கு அழிவை ஒன்றியம் சந்திக்கும் என்று கருதுகிறேன்.
உலக வரலாறு இதைத்தான் எனக்கு கற்று தந்திருக்கிறது.
மீள் பதிவு யாழ்ப்பாணம் பொது சன நூல் நிலயம்! காலை எனது பாடசாலை கதவு எட்டு மணிக்கு தான் திறக்கப்படும். அனேகமான நாட்கள் நான் சற்று முன்னதாகவே அங்கு சென்று விடுவேன், ஓட்டமும் நடையுமாக பொதுசன நூல் நிலையம் நோக்கி சென்றுவிடுவேன், எனது பொன்னான சுமார் இருபது முப்பது நிமிடங்கள் அங்குதான் . அந்த நூல் நிலையத்தின் அன்றைய முதல் வாசகனாக நான் இருப்பேன், நூலகத்தின் மேல் தளத்தில் உள்ள நூலக ( reference section) படிப்பு மண்டபம்தான் எனக்கு அப்போது Google . நிமிடங்களோடு போட்டி போட்டுகொண்டு அங்குள்ள நூல்களை உழுது தள்ளுவேன். அங்குள்ள் ஒவ்வொரு நூலும் எனக்கு ஒரு தங்க சுரங்கமாகவே இருந்தது.
அந்த இனிய காலைப்பொழுதுகளில் அங்கு நானும் நூல்களும் மட்டுமே இருந்தோம் . எங்களின் ராஜ்யத்தின் இடையில் ஒரு அழகான மனிதர் சில நொடிகள் வந்து போவார் . அவர் மெதுவாக நடந்து அந்த நூலகத்தின் அன்றைய தூய்மை ஒழுங்கு போன்றவற்றை கண்களால் கணக்கெடுத்து கொண்டு செல்வார். அங்கு ஒரு தூசி துரும்பும் இருக்க கூடாதே , அங்குள்ள நாற்காலிகளும் மேசைகளும் நூல்களும் ஒழுங்காக அடுக்கி வைக்கபப்ட்டிருகக் வேண்டுமே? என்பதில் அவர் கொண்ட சிரத்தை ஒரு தவம் என்று கூறலாம் .
தூரத்தே இருந்து பார்க்கையில் சில சமயம் ஒரு சில நாற்காலிகள் சற்று ஒழுங்கற்று இருந்தால் மெதுவாக நடந்து வந்து அதை சரியாக்கி விட்டு மெதுவாக நடந்து சென்றுவிடுவார்,அவரை நிமிர்ந்து பார்க்க கூட எனக்கு நேரம் இருக்காது . நான்தான் அந்த கால google பைத்திய்மாச்சே? அவரை பெரியதாக பார்க்கவிடினும் அவரை ரசிப்பேன் அவர் ஒரு அரசியல்வாதி, யாழ்ப்பான மேயர் அல்பிரட் தங்கராஜா துரையப்பா என்பது அவரது பெயர், அவர் அங்கு எந்த நாளும் வந்து பார்த்து பார்த்து அந்த நூலகத்தின் நேர்த்தியை பேணுவது எனக்கு தெரிந்த அளவு வேறு எந்த வாசகனுக்கும் தெரிந்திருக்கிறதோ தெரியவில்லை. நானோ சிறியவன் எனக்கு வாக்குரிமை கூட கிடையாது . அந்த மனிதர் அதையெல்லாம் எதிர்பார்ப்பவர் அல்ல . அவர் தேடி நிதம் மக்கள் நலம் நாடிய ஒரு மாமனிதர்.. இன்றோடு யாழ் நூலகம் பற்றி எரிந்து 37 வருடங்கள் ஆகிவிட்டது . அந்த நூலகத்தை எப்படி மறக்க முடியாதோ அது போலவே அந்த நல்ல மனிதரையும் என்னால் மறக்க முடியாது


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக