ஞாயிறு, 21 ஜூலை, 2024

திமுக 2026 சட்டப்பேரவை தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவை அறிவிப்பு -- கேஎன் நேரு, தங்கம் தென்னரசு, எவா வேலு, ஆர் எஸ் பாரதி உதயநிதி ஸ்டாலின்

 tamil.oneindia.com  -  Rajkumar R  சென்னை: நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மற்றும் விக்ரவாண்டி இடைத்தேர்தலில் திமுக பெருவெற்றி பெற்றிருக்கும் நிலையில் 2026 சட்டசபை தேர்தலுக்கு தற்போதைய தயாராகி வருகிறது.
இந்த நிலையில் 2026 சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள ஒருங்கிணைப்பு குழுவை அறிவித்துள்ளார் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான முக ஸ்டாலின். அந்த குழுவில் திமுக இளைஞரணி தலைவரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கும் இடம் வழங்கப்பட்டிருக்கிறது.
திமுக தலைவராக தான் சந்தித்த முதல் சட்டமன்ற தேர்தலிலேயே பெரு வெற்றி பெற்று தமிழகத்தில் முதலமைச்சராக பதவி ஏற்றார் மு.க.ஸ்டாலின். அதற்குப் பிறகு அவர் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றி தான் கிட்டி இருக்கிறது.



திமுக தொண்டராக, இளைஞர் அணி செயலாளராக, சென்னை மேயர், அமைச்சர், துணை முதலமைச்சர் என நீண்ட கால அரசியல் பயணம் அவரை முதலமைச்சர் ஆக்கி இருக்கிறது. திமுக தலைவராக அவர் தமிழகத்தின் பிரதான எதிர்க் கட்சியான அதிமுக எனும் பெரிய கட்சியை அனைத்து தேர்தல்களையும் தோல்வியடை செய்திருக்கிறார்.

2021 சட்டமன்றத் தேர்தல் மட்டுமல்லாது. அதற்குப் பிறகு நடந்த உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் திமுகவே பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. குறிப்பாக நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழக மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரிய வெற்றியை பெற்றன. அதற்குப் பிறகு நடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் திமுக பெரிய வெற்றியை பெற்றது.

இதனையடுத்து வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளை திமுக செய்து வருகிறது. தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் 2026 இல் மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம் என சபதம் ஏற்று பணிகளை செய்து வருகின்றது. மேலும் நாடாளுமன்ற தேர்தலில் தோல்விக்கான காரணம் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் அக்கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை முதல் கட்சியாக செய்திருக்கிறது திமுக.

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பல பணிகளை தற்போதைய அந்த கட்சியினர் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த தேர்தலில் தோல்வியை சந்தித்த தொகுதிகளை எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று முடிவெடுத்து கட்சிப் பணிகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் எதிர்கொள்ள வகையில் ஒருங்கிணைப்பு குழுவை அறிவித்திருக்கிறார் அக்கட்சியின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான முக ஸ்டாலின்.

இந்த குழுவில் அமைச்சர் கேஎன் நேரு, தங்கம் தென்னரசு, எவா வேலு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆர் எஸ் பாரதி உள்ளிட்டோர் இடம் பெற்று இருக்கின்றனர். கட்சியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்த குழு திமுக தலைவரான ஸ்டாலினுக்கு பரிந்துரைக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இதே போன்ற ஒருங்கிணைப்புக் குழுவை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த ஒருங்கிணைப்பு குழு விரைவில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை துவக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்,"2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக கட்சிப் பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்புக்குழு தனது பணிகளை மிகச் சிறப்பாகச் செய்தது. அதே வகையில் வரவிருக்கும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு, கட்சியில் மேற்கொள்ள வேண்டிய மாறுதல்கள் - அமைப்பு ரீதியான சீரமைப்புகளை கட்சித் தலைவருக்கும் - தலைமைக்கும் பரியதுரைக்கவும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் "ஒருங்கிணைப்புக்குழு" பின்வருமாறு அமைக்கப்படுகிறது. கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்" என கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: