tamil.goodreturns.in - Prasanna Venkatesh : தமிழ்நாடு பல துறையில் முன்னோடியாக இருந்தாலும், ஒட்டுமொத்த இந்தியாவும் வியந்து பார்க்கும் ஒரு துறை என்றால் காலணி தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி துறை தான். இந்தியாவின் மொத்த தோல் மற்றும் தோல் அல்லாத காலணி ஏற்றுமதியில் தமிழ்நாடு மட்டுமே 48 சதவீத பங்கீட்டை வகிக்கிறது. இதேபோல் இந்தியாவின் மொத்த காலணி தயாரிப்பில் தமிழ்நாட்டின் பங்கு மட்டும் 32 சதவீதம்.
இந்தச் சூழ்நிலையில் இத்துறைக்கான அடுத்தகட்ட வளர்ச்சி என்ன? எனத் திட்டமிட்ட போது தான் உலகம் முழுவதும் சீனா+1 கொள்கை காட்டுத்தீபோல் பரவிவந்தது.
இதில் குளிர்காயத் திட்டமிட்ட தமிழ்நாடு அரசு வெளிநாட்டுக் காலணி தயாரிப்பு நிறுவனங்களுக்கான கதவுகளைத் திறந்தது.
தமிழ்நாடு அரசு தோல் அல்லாது காலணி தயாரிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்க்க முடிவு செய்தது. இதில் முதல் வெற்றி
Crocs பிராண்ட். சர்வதேச பேஷன் மற்றும் லைப்ஸ்டைல் உலகிற்குள் பெரும் விமர்சனங்கள் உடன் வந்த க்ராக்ஸ் பிராண்ட் இப்போது அனைவருக்கும் பிடித்த காலணியாக மாறியுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு பெரம்பலூரில் துவங்கிய புதிய காலணி தயாரிப்புப் பூங்காவில் Crocs பிராண்ட் தனக்கான இடத்தைப் பிடித்துக்கொண்டு தற்போது காலணிகளைத் தயாரிக்கும் பணிகளைத் துவங்கி அசத்தி வருகிறது.
சீனா+1 கொள்கை வாயிலாக Nike, Adidas, Puma பிராண்டுகளின் காலணிகளைத் தயாரிக்கும் தைவான் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழிற்சாலை அமைக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் முன்னணி பிராண்டுகளின் காலணி தயாரிப்பு பல்வகைப்படுத்தப்பட்டு உள்ளது மட்டும் அல்லாமல் சர்வதேச அளவில் சப்ளை செய்ய உள்ளது.
தமிழ்நாட்டில் தோல் அல்லாத காலணி தயாரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட இதே வேளையில், தமிழ்நாட்டின் உற்பத்தித் துறை வேகமெடுக்கத் துவங்கியதோடு, காலணி நிறுவனங்களில் பெண் ஊழியர்களை 90 சதவீதம் வரையில் நியமிக்கப் பெரும்பாலான நிறுவனங்கள் முடிவு செய்தது மூலம் பெரும் மாற்றும் தமிழ்நாடு காலணி தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி துறையில் ஏற்பட்டது.
தமிழ்நாடு ஆட்டோமொபைல் முதல் எலக்ட்ரானிக்ஸ் வரையில் பல துறைகளில் அதிகப்படியான முதலீட்டைப் பெற்று இருக்கும் வேளையில் தற்போது தோல் அல்லாத காலணி தயாரிப்பில் அடுத்தடுத்து பெரும் முதலீட்டைத் திரட்டி வருகிறது. பெரம்பலூரில் தற்போது இயங்கும் க்ராக்ஸ் தொழிற்சாலை இந்தியாவின் பீனிக்ஸ் கோதாரி குரூப் மற்றும் தைவான் நாட்டின் ஷூடவுன் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து தயாரித்துள்ளது.
சர்வதேச தோல் ஏற்றுமதி வர்த்தகத்தில் சுமார் 13 சதவீதத்தை இந்தியா கொண்டு உள்ளது, இதில் 48 சதவீதம் தமிழ்நாட்டின் பங்கீடு. தமிழ்நாட்டில் இருந்து சுமார் 16000 கோடி ரூபாய் மதிப்பிலான காலணிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதேவேளையில் ஆடம்பர பிராண்டுகளான Ferragamo, Prada, Louis Vuitton போன்றவை தமிழ்நாட்டில் இருந்து தோல் பொருட்களை நீண்ட காலமாக வாங்கி வருகிறது.
தைவான் காலணி நிறுவனங்கள் சீனா+1 கொள்கை கீழ் இந்தோனேஷியா, பங்களாதேஷ், கம்போடியா ஆகிய நாடுகளை விடுத்துத் தமிழ்நாட்டைத் தேர்வு செய்துள்ளது மிகப்பெரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது. இவை அனைத்திற்கும் அடித்தளமிட்டது 2022 ல் தமிழ்நாடு அரசு வெளியிட்ட காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை தான்.
இந்தப் புதிய கொள்கை கீழ் தமிழ்நாட்டில் காலணி தொழிற்சாலை அமைக்கும் நிறுவனங்களுக்கு மானியம் மற்றும் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக இதுவரையில் சுமார் 2250 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
தோல் அல்லாத காலணி தயாரிப்பில் உலகின் 4 மிகப்பெரிய நிறுவனங்கள் என்றால் அது Shoetown, Feng Tay, Pou Chen, Hong Fu ஆகியவை தான். இந்த நிறுவனங்கள் பாத்ரூம் செருப்பு முதல், ஸ்போர்ட்ஸ் ஷூ வரையில் தயாரிக்கிறது. தற்போது இந்த 4 தைவான் நிறுவனங்களும் தமிழ்நாட்டில் தொழிற்சாலை அமைக்க உள்ளது.
மேலும் பிக் 4 என அழைக்கப்படும் இந்த 4 தைவான் நிறுவனங்கள் Nike, Adidas, Reebok, Puma, Converse, Crocs ஆகிய பிராண்டிகளின் காலணிகளைத் தயாரிக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக