ஞாயிறு, 31 டிசம்பர், 2023

குஜராத்தில் போலி சுங்கச்சாவடி, 6 போலி அரசு அலுவலகங்கள் ஆண்டுக்கணக்கில் இயங்கியது எப்படி?

  BBC News தமிழ் -, RAJESH AMBALIYA :  2023ம் ஆண்டில் குஜராத் சந்தித்த ஏராளமான நிகழ்வுகளில், “போலி” என்ற வார்த்தையுடன் தொடர்புடைய ஒரே மாதிரியான சில சம்பவங்கள் இந்தியா முழுவதும் பேசுபொருளாயின.
அது போலி சுங்கச்சாவடியில் தொடங்கி போலி பிரதமர் அலுவலக அதிகாரி வரை, இந்தாண்டில் குஜராத்தில் மட்டும் பல போலி மோசடி சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இவை குஜராத்தை தாண்டி இந்தியா முழுவதும் பிரபலமான சம்பவங்கள் என்பதே இதில் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் தான் குஜராத்தின் மோர்பியிலிருந்து, கட்ச் வரையிலான தேசிய நெடுஞ்சாலை 27ல் உள்ள வகாசியா சுங்கச்சாவடியில் ஓராண்டுக்கும் மேலாக இயங்கி வந்த போலி சுங்கச்சாவடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.


வான்கனேர் வகாசியா சுங்கச்சாவடிக்கு அருகில் இருபுறமும் சட்டவிரோதமாக சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக மக்களிடம் பணம் பறிக்கப்பட்டு வருவதாக கிடைத்த தகவலுக்கு பிறகு அரசு நிர்வாகம் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

காவல்துறை விசாரணையின்படி, தினமும் தோராயமாக 2,000 வாகனங்கள் இந்த சுங்கச்சாவடியின் வழியாக பயணித்துள்ளன. இந்த வாகனங்களிடம் ரூ. 20 முதல் ரூ. 200 வரை கட்டணம் பெறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் மோர்பி மாவட்ட பாஜக தலைவர் தர்மேந்திர சிங் பகதூர் சிங் ஜாலா மற்றும் அவரது சகோதரர் யுவராஜ் சிங் பகதூர் சிங் ஜாலா ஆகியோரின் முன்ஜாமீனை மோர்பி கூடுதல் அமர்வு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

தற்போது இந்த வழக்கில் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
2023இல் குஜராத்தை ஆட்டிப்படைத்த “போலி” என்ற வார்த்தை, போலி காவலர் முதல் போலி சுங்கச்சாவடி வரை

தன்னை பிரதமர் அலுவலக அதிகாரி என்று கூறி கொண்ட பட்டேல், உண்மையில் அப்படி ஏதும் பொறுப்புகளில் இல்லை.

பிரதமர் அலுவலக இணை இயக்குனர் கிரண் படேல்?

மார்ச் 3ம் தேதி ஜம்மு காஷ்மீர் காவல்துறை கிரண் ஜே பட்டேலை கைது செய்த போது, அவரின் பொய்களை கேட்டு நாடே அதிர்ந்து போனது.

தன்னை பிரதமர் அலுவலகத்தின் இணை இயக்குனர் என்று கூறிக்கொண்டு அரசு பங்களாக்களில் ஆடம்பரமான வசதிகளை அனுபவித்துள்ளார் அவர். காவல்துறை தகவலின்படி, தன்னை பிரதமர் அலுவலக அதிகாரி என்று கூறி கொண்ட பட்டேல், உண்மையில் அப்படி ஏதும் பொறுப்புகளில் இல்லை.

அவரிடமிருந்து பத்து போலி விசிட்டிங் கார்டுகள் மற்றும் இரண்டு மொபைல் போன்களை பறிமுதல் செய்துள்ளது காவல்துறை.

கிரண் படேல் பலமுறை காஷ்மீரின் சுகாதார விடுதிகளுக்கு சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை பாதுகாப்போடு சுற்றுலா சென்றுள்ளார்.

அப்போது பல வீடியோக்களையும் எடுத்து அதை தனது ட்விட்டர் (X) தளத்திலும் பதிவேற்றியுள்ளார். அந்த சமயத்தில் அவருக்கு அரசு பாதுகாப்பு மற்றும் குண்டு துளைக்காத வாகனம் கொடுக்கப்பட்டிருந்தது.

“அவரை கைது செய்வதற்கு முன்பு வரை, தன்னை பிரதமர் அலுவக இணை இயக்குனர் என்று கூறிக்கொண்டு அவர் இருமுறை காஷ்மீருக்கு வந்ததாக” பிபிசியிடம் கூறியுள்ளார் மூத்த உளவுத்துறை அதிகாரி

இரண்டாவது முறை அவர் காஷ்மீருக்கு வந்த போது அவர் கண்காணிக்கப்பட்டதாக கூறும் அவர் அந்த முறை அவரது குடும்பமும் அவரோடு வந்திருந்ததாக கூறுகிறார்.

அவர் மீது ஐபிசி பிரிவுகள் 419, 420, 467 மற்றும் 471 ஆகியவற்றின் கீழ் ஜம்மு காஷ்மீர் நிஷான் காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. குஜராத்திலும் அவர் மீது மூன்று வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் 30ம் தேதி ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றம் கிரண் பட்டேலுக்கு ஜாமீன் வழங்கியது. ஆனால், தற்போது குஜராத் சபர்மதி சிறைச்சாலையில் இருக்கிறார் அவர்.

2023இல் குஜராத்தை ஆட்டிப்படைத்த “போலி” என்ற வார்த்தை, போலி காவலர் முதல் போலி சுங்கச்சாவடி வரை

6 போலி அரசு அலுவலகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன
போலி அரசு அலுவலகங்கள்
2023 அக்டோபர் மாதம், சோட்டா உதய்பூர் மாவட்டத்தில் உள்ள போடேலியில் 'போலி அரசு அலுவலகம்' ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட போது, குஜராத் அரசு நிர்வாகமே தர்மசங்கடத்திற்கு உள்ளானது.

இந்த சம்பவம் அரசு நிர்வாகம் குறித்தான தீவிரமான கேள்வியை எழுப்பியது. இது போக இதன் பரபரப்பு அடங்குவதற்கு முன்பே மேலும் 6 போலி அரசு அலுவலகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

தஹோத் மாவட்டத்தில் போலி அரசு அலுவலகம் மூலம் 21.15 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சந்தீப் ராஜ்புத் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இதை தொடர்ந்து நடைப்பெற்ற காவல்துறை விசாரணையில், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பி.டி. நினாமா மீதும் குற்றம் சாட்டப்பட்டது. நினாமா நவம்பர் 28ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் தாஹோத் திட்டத்தின் நிர்வாகியால் செய்யப்பட்ட பணிகளைச் விசாரணை செய்த பிறகு, குற்றம் சாட்டப்பட்ட சந்தீப் ராஜ்புத் தஹோத் மாவட்டத்தில் ஐந்து மற்றும் தபோயில் ஒன்று என ஆறு போலி அலுவலகங்கள் மற்றும் போலி அதிகாரிகளை உருவாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.

"தாஹோட் மாவட்ட திட்ட அலுவலர் அளித்த புகாரின் பேரில், ஆறு போலி அலுவலகங்கள் கண்டறியப்பட்டு சீல் வைக்கப்பட்டது" என்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கூறியிருந்தார் தாஹோத் மாவட்ட எஸ். பி. ராஜ்தீப் சிங் ஜாலா

"இந்த வழக்கில் சந்தீப் ராஜ்புத் அரசு அதிகாரியாக நடித்துள்ளார். அங்கித் சுதர் பொய்யான வங்கிக் கணக்குகளைத் உருவாக்கி கொடுத்துள்ளார். இது தவிர, முன்னாள் திட்ட அதிகாரியாக இருந்த பாபுபாய் நினாமாவும் இந்த வழக்கில் சம்மந்தப்பட்டுள்ளதாக கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்."

இதுவரையிலும் இந்த வழக்கு தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணையில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான பி.டி.நினாமா இந்த போலி அரசு அலுவலகங்களை 2016ம் ஆண்டிலிருந்து சுமார் 7 ஆண்டுகளாக நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் பல்வேறு திட்டங்களின் மூலமாக மாநில அரசிடமிருந்து இந்த அலுவலகத்திற்கு 21.15 கோடி வழங்கப்பட்டுள்ளது.

2023இல் குஜராத்தை ஆட்டிப்படைத்த “போலி” என்ற வார்த்தை, போலி காவலர் முதல் போலி சுங்கச்சாவடி வரை

மோசடி செய்த நிக்குஞ் பட்டேல் என்பவர் ஜாம்நகர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

முதல்வர் அலுவலக அதிகாரி முதல் என்ஐஏ அதிகாரி வரை

இந்த வருடத்தில் மட்டும் பல போலி அரசு அதிகாரிகள் குஜராத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். எந்த வித பயமும் இல்லாமல் தங்களை முதல்வர் அலுவலக அதிகாரி என்றும், பிற அரசு துறை அதிகாரிகள் என்றும் கூறிக்கொண்ட பல மோசடி நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“நான் முதல்வர் அலுவலகத்தில் பணிபுரிகிறேன், உன்னை இரண்டே நிமிடத்தில் சிறைக்கு அனுப்பிவிடுவேன்” என்று கூறி வதோதராவில் உள்ள தியேட்டர் ஒன்றில் பிரதீப் நாயர் என்ற இளைஞரிடத்தில் பிரச்னை செய்துள்ளார் விராஜ் பட்டேல் என்று இளைஞர்.

தொடர்ந்து தன்னை குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேல் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரி என்று கூறிக்கொண்டிருந்த அந்த நபர், அவரது ஐடி கார்டை காட்ட சொல்லி காவல்துறை கேட்டபோது, அதை ஹோட்டலில் மறந்து வைத்து விட்டு வந்தாக கூறியுள்ளார்.

உடனே முதல்வர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு காவல்துறை விசாரித்த போது, அப்படி ஒரு பெயரில் இங்கு யாரும் பணிபுரியவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இதே போல்தான் சில நாட்களுக்கு முன்பு தன்னை முதல்வரின் அதிகாரி என்று சொல்லி கொண்டு குற்றவாளிகளை விடுவிக்க லட்சக்கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்த நிக்குஞ் பட்டேல் என்பவர் ஜாம்நகர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

சூரத்தில் போலி நிறுவனம் மூலம் பல லட்சம் மோசடி செய்த அஸ்லாம் மேமன் என்பவர் ஜாம்நகர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் இருந்து அவரை விடுவிக்க முடியும் என்றும், தன்னை ஒரு முதல்வர் அலுவலக அதிகாரி என்றும் கூறிக்கொண்டு அவர் சார்ந்தவர்களிடம் நிக்குஞ் பட்டேல் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

இதில் அவர் மாட்டிக்கொண்டதை அடுத்து அவர் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 170இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு கடுமையான கடனில் மாட்டிக்கொண்டார் நிக்குஞ். இந்நிலையில் காந்திநகர் வரும் அவர் பிரபலமான தலைவர்களோடு செல்ஃபீ எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த போட்டோக்களை பதானில் உள்ள மக்களிடம் காட்டி தான் பிரபலமானவர்களின் வீட்டில் பணிபுரிவதாக கூறி அவர்களிடம் அடிக்கடி பணத்தை கடனாக பெற்றுள்ளார்.

அதுமட்டுமன்றி கடன் கொடுத்தவர்களை மிரட்டவும் செய்துள்ளார். இதில் ஒருவரோடு பிரச்னை ஏற்பட்டதில் பதானை விட்டு வெளியேறியுள்ளார் அவர்.

இதே போல்தான் தன்னை என்ஐஏ அதிகாரி என்று கூறிக் கொண்டிருந்த குஞ்சான் கான்டியாவும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குஜராத் அரசின் செயல் அலுவலர், என்ஐஏ அதிகாரி, மத்திய அரசின் நகர் திட்ட அதிகாரி என போலியாக பல மோசடிகளில் ஈடுபட்டதாக குஞ்சான் கான்டியா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குஞ்சனின் மனைவி அவருடைய அலுவலகத்தைப் பார்க்க வேண்டும் என்று வற்புறுத்தி கேட்டதற்காக, அவரை சரோடியில் உள்ள என்ஐஏ-இன் குஜராத் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போதே காவல்துறையிடம் பிடிபட்டு விட்டார்.

இவர் மீது அகமதாபாத் சோலா காவல்நிலையத்தில் இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 170, 420, 465, 468, 471 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: