hirunews.lk யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கு இந்தியாவின் சென்னை விமான நிலையத்தில் இருந்து பயணிகளுடன் வந்த விமானமொன்று தரையிறங்க முடியாமல் திரும்பிச் சென்றுள்ளது.
குறித்த சம்பவம் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விமானத்தை தரையிறக்க பல முறை முயற்சி செய்தும் மோசமான காலநிலையால் தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னை விமான நிலையத்தை நோக்கி பயணித்தது.
இதனிடையே, யாழ்ப்பாண மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக 435 குடும்பங்களைச் சேர்ந்த 1523 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 24 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார்.
சங்கானை பிரதேச செயலக பிரிவில் 214 குடும்பங்களைச் சேர்ந்த 267 பேரும், பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவில் 146 குடும்பங்களைச் சேர்ந்த 485 பேரும், சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் 60 குடும்பங்களைச் சேர்ந்த 205 பேரும், கோப்பாய் பிரதேச செயலக பிரிவில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேரும், சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 19 பேரும், உடுவில் பிரதேச செயலகப் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 46 பேர் அன்னை முன்பள்ளி நிலையத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக