புதன், 2 ஆகஸ்ட், 2023

பிரேசிலைச் சேர்ந்த உலகின் மிக வயதான மனிதர் ஜோஸ் கோம்ஸ் 127 வயதில் மரணம்

தமிழ் மிரர் : உலகின் மிக வயதான மனிதர் என்று கூறப்படும் பிரேசிலைச் சேர்ந்த ஜோஸ் பாலினோ கோம்ஸ் தனது 127வது வயதில் காலமானார்
பிரேசிலைச் சேர்ந்த ஜோஸ் பாலினோ வரும் 4-ம் தேதி தனது 128வது பிறந்தநாளை கொண்டாட இருந்த நிலையில், மினாஸ் ஜெரைஸ் மாநிலத்தில் அமைந்துள்ள பெட்ரா பொனிடாவில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.
வயது முதிர்வு காரணமாக உடல் உறுப்புகள் செயலிழந்ததால் அவர் இறந்ததாக பாலினோவின் குடும்பத்தினர் தெரிவித்தனர். அவர் கடந்த சனிக்கிழமை பெட்ரா பொனிடாவின் கொரேகோ டோஸ் ஃபில்ஹோஸ் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.


ஆகஸ்ட் 4, 1895 இல் பிறந்த ஜோஸ் பாலினா, முதல் மற்றும் 2-ம் உலகப் போர் மற்றும் மூன்று பெருந்தொற்று நோய் காலக்கட்டத்தில் வாழ்ந்தவர். வில்லியன் ஜோஸ் ரோட்ரிக்ஸ் டி சௌசா என்ற அதிகாரி, ஜோஸ் பாலினாவின் வயது துல்லியமானது என்றும், அவர் 1900 க்கு முன் பிறந்தவர் என்றும் தெரிவித்தார்.

ஜோஸ் பாலினோவின் பிறப்பு பற்றிய விவரங்கள் துல்லியமாக இல்லாததால், அவரின் ஆவணங்களை உலக சாதனைகளுக்கான கின்னஸ் அமைப்பு ஆராயுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 116 வயதான மரியா பிரன்யாஸ் மோரேரா உலகின் மிக வயதான மனிதர் என்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

ஜோஸ் பாலினா ஒரு எளிய மற்றும் அடக்கமான மனிதர் என்றும் தொழில்மயமான எதையும் விரும்புவதில்லை என்றும் அவரின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். அவர் கிராமப்புறங்களில் உள்ள பொருட்களையே அதிகம் விரும்பினார் என்றும், தனது சொந்த பண்ணையில் கோழிகள் மற்றும் பன்றிகளை வளர்த்தார் என்றும் தெரிவித்தனர்.

ஜோஸ் பாலினா தனது 7 பிள்ளைகள், 25 பேரக்குழந்தைகள், 42 கொள்ளுப் பேரக்குழந்தைகள் மற்றும் 11 எள்ளுப் பேரக்குழந்தைகளுடன் வாழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: