திங்கள், 31 ஜூலை, 2023

பாதயாத்திரையில் வெளுத்த அண்ணாமலை சாயம்!

 மின்னம்பலம் -Selvam  :   தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரை பற்றிய பாஜகவினரின் வீடியோக்கள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.
அவற்றை பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது. “இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே திட்டமிடப்பட்ட அண்ணாமலையின் தமிழகம் தழுவிய பாத யாத்திரை, கர்நாடக தேர்தலில் அவர் இணைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதால் தாமதமானது. அதன் பின்னர் ஜூலை 28 ஆம் தேதி என திட்டமிடப்பட்டு அதன்படியே உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை தந்து நடைப் பயணத்தை துவக்கி வைத்தார். அன்று மாலை பொதுக்கூட்டம் முடிந்த பிறகு நடைப்பயணம் துவங்கியது. அமித் ஷா கொஞ்ச நேரம் நடந்தார்.
அன்று அண்ணாமலை நடந்த மொத்த தூரம் எவ்வளவு தெரியுமா ராமேஸ்வரம் பேருந்து நிலையம் முதல் ராமநாதசாமி கோயில் மேலவாசல் வரை சரியாக ஒன்றரை கிலோ மீட்டர்கள். சரி, முதல் நாள் துவக்க விழா பொதுக்கூட்டத்துக்குப் பிறகு இவ்வளவு தூரம் தான் நடக்க முடியும் என்று கருதினார்கள் பாஜக நிர்வாகிகள்.



அடுத்த நாள் அதாவது நடைப் பயணத்தின் இரண்டாம் நாளான ஜூலை 29 ஆம் தேதி பகல் வரை அமித் ஷாவுடன் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் அண்ணாமலை. அமித் ஷா ஹெலிகாப்டரில் புறப்பட்டதும் நடைப் பயணத்தின் ஒரு பகுதியாக மீனவர்களை சந்தித்தார் அண்ணாமலை.

அன்று மாலை நடைப் பயணம் தொடங்கியது… அதாவது ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவில் முதல் அரண்மனை திடல் வரை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் நடந்துவிட்டு இரண்டாம் நடைப் பயணத்தை நிறைவு செய்தார் அண்ணாமலை.

மூன்றாம் நாள் ஜூலை 30 ஆம் தேதி முதுகுளத்தூரை நோக்கிப் புறப்பட்டார். தனது மக்கள் ரதம் என்னும் சொகுசுப் பேருந்தில் சென்ற அண்ணாமலை முதுகுளத்தூர் பேருந்து நிலையத்துக்கு சுமார் அரை கிலோ மீட்டர் இருக்கும்போதே காந்தி சிலை அருகே இறங்கிவிட்டார். அங்கே வீரன் சுந்தரலிங்கத்துக்கு மரியாதை செலுத்திய அண்ணாமலை அங்கிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் பேருந்து நிலையத்துக்கு தொண்டர்கள் நிர்வாகிகள் புடை சூழ நடந்தார். அதற்குள் மக்கள் ரதம் அங்கே சென்றுவிட்டது. அதன் மீது ஏறி உரையாற்றிவிட்டு புறப்பட்டார் அண்ணாமலை. அதன் பிறகு மாலை பரமக்குடியில் கிருஷ்ணா தியேட்டரில் இருந்து மேற்கு பகுதி ஓட்டப்பாலம் வரைக்கும் 2 கிலோ மீட்டர் தூரம் நடைப் பயணம்.

இதுதான் முதல் மூன்று நாட்களில் அண்ணாமலை நடந்த தூரம். தமிழ்நாடு இதுவரை எத்தனையோ தலைவர்களின் நடைப் பயணங்களைப் பார்த்திருக்கிறது. பூமிதான இயக்கத்தின் வினோபா பாவே, குமரி அனந்தன், கலைஞர், பழ. நெடுமாறன், வைகோ சமீபத்தில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடா யாத்திரை என்று பலரின் பயணங்களைப் பார்த்திருக்கிறது தமிழ்நாடு. ஆனால் அண்ணாமலை இப்போது சொல்லிக் கொள்ளும் நடைப் பயணம் போல யாருமே பார்த்திருக்க மாட்டார்கள் என்று பாஜகவின் சீனியர் நிர்வாகிகளே சொல்கிறார்கள்.

நடைப் பயணம் என்றால் காலையில் தொடங்கி… மதியம் வரை நடப்பது. பின் மதியம் கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டு பிற்பகல் தொடங்கி இரவு வரை நடப்பது. ஆங்காங்கே மக்களை இயல்பாக சந்திப்பது, அவர்களோடு பேசுவது, அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிவது இரவு கட்சி நிர்வாகிகளோடு தங்கி அவர்களோடு உணவு உண்டு மீண்டும் மறுநாள் பயணம் தொடர்வது. இதுதான் வைகோ போன்ற தலைவர்களின் நடைப் பயணத்தில் நடந்த விஷயங்கள்.

ஆனால் அண்ணாமலை இதுவரை யாரும் பின்பற்றாத புதிய பாணியில் 90% பஸ் பயணம், 10% நடைப் பயணம் என்று செல்கிறார். ஏற்கனவே திட்டமிடப்பட்ட பாயின்ட்டுகளில் நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டி வைக்கிறார்கள், பின் அங்கே பேசிவிட்டு மீண்டும் பஸ்ஸில் செல்கிறார். இடையில் மீனவர்கள், கருப்பட்டித் தொழிலாளர்கள் என்று தேர்ந்தெடுத்த இடங்களில் தேர்ந்தெடுத்தவர்களை சந்திக்கிறார். ஆனால் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் பத்து கிலோ மீட்டர் தூரம் கூட அண்ணாமலை நடக்கவில்லை.

தமிழ்நாடு உளவுத்துறை அண்ணாமலையின் பாத யாத்திரையால் என்ன விளைவுகள், தாக்கங்கள் ஏற்படும் என்பதை எதிர்பார்த்துக் காத்திருந்தது. மத்திய உளவுத்துறையும் மத்திய அரசுக்கு அண்ணாமலை பாத யாத்திரை மக்களிடம் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை கவனித்து வருகிறது. ஆனால் யாத்திரை தொடங்கிய மூன்றாம் நாளே, ‘அண்ணாமலை போவது பாத யாத்திரை இல்லை. அது 10% யாத்திரைதான். மக்களை இயல்பாக சந்திக்கும் எந்த காட்சியும் இதில் இல்லை’ என்று இரு உளவுத் துறைகளும் தங்கள் மேலிடத்துக்கு ரிப்போர்ட் அனுப்பியுள்ளன.

இந்த பாத யாத்திரையின் மூலம் அண்ணாமலையின் இமேஜ் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு பாஜகவை கடந்தும் ஏற்பட்டிருந்த நிலையில், முதல் மூன்று நாட்களிலேயே நெகட்டிவ் ரிப்போர்ட்டே கிடைத்திருக்கிறது. இனியாவது முறையாகத் திட்டமிட்டு நடந்து மக்களை அவர்களின் இயல்பான நிலையில் சந்தித்து அண்ணாமலை இந்த பயணத்தை நடத்துவாரா என்ற கேள்விகள் பாஜகவின் சீனியர்கள் மத்தியிலேயே எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை: