புதன், 5 ஜூலை, 2023

காங்கிரசை கைவிடுங்கள் திமுகவுக்கு பாஜக ஒன்றிய அமைச்சர் ஆலோசனை

 தினமலர்  : 'காங்கிரசை கைவிடுங்கள்' : தி.மு.க.,வுக்கு பா.ஜ., ஆலோசனை
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேசுவதற்காக, தமிழக அமைச்சர் துரைமுருகன் டில்லி சென்றுள்ளார்.
இன்று, மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்திக்க உள்ளார்.
இதுகுறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:கர்நாடகா முதல்வர் பதவி ஏற்பு விழாவில், ஸ்டாலினை அவமதித்தனர்.
ஆட்சிக்கு வந்ததும் முதல் நடவடிக்கையாக, காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப் போவதாக, தமிழகத்திற்கு எதிராக குரல் கொடுத்துள்ளனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரையும் வழங்கவில்லை. கூட்டணி கட்சி என்பதால், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைவதை, தி.மு.க., பெரிதும் வரவேற்றது.



ஆனால், ஆட்சிக்கு வந்ததும் வராததுமாக, தமிழகத்திற்கு எதிரான செயல்களில், அம்மாநில காங்கிரஸ் அரசு இறங்கி விட்டது. ஆனால், கூட்டணி கட்சியாக இருப்பதால், போராட்டம் நடத்த முடியவில்லை.இந்நிலையில், டில்லியில் மத்திய அமைச்சரை சந்திக்க, துரைமுருகன் தரப்பில் நேரம் கேட்கப்பட்டு உள்ளது. உடனே மத்திய அமைச்சர் தரப்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதோடு, பா.ஜ., தரப்பின் சில விருப்பங்களையும், தொலைபேசி வாயிலாக துரைமுருகனிடம் கூறி
உள்ளனர்.

அதாவது, 'தமிழக மக்கள் நலனுக்காக, காங்கிரஸ் கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்வோம் என, தி.மு.க., அறிவிக்க வேண்டும்.'அவர் அப்படி அறிவித்தால், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தண்ணீரை திறந்து விட, தீர்ப்பாயத்தின் வாயிலாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்' என துரைமுருகனிடம் கூறப்பட்டுள்ளது.
மேலும், 'ஏற்கனவே கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் மீது, அமலாக்கத் துறை விசாரணை நடக்கிறது. சட்டசபை தேர்தலை காரணம் காட்டி, அவர் ஆஜராகாமல் இருக்கிறார். தற்போதுள்ள சூழலில், விசாரணை விரிவடைய வாய்ப்பு இருக்கிறது' என்றும், துரைமுருகனிடம் சொல்லப்பட்டு உள்ளது.

காவிரி பிரச்னையை மையமாக வைத்து, காங்கிரசுக்கு எதிரான நிலைப்பாட்டை, தி.மு.க., எடுக்குமானால், தமிழகத்திற்கு தேவையான உதவிகள் தடையின்றி கிடைக்கும் என்றும் வாக்குறுதி தரப்பட்டு உள்ளது. இதையெல்லாம் முதல்வர் ஸ்டாலினிடம் கூறி, கட்சியினரிடமும் பேசி, எங்கள் முடிவை அறிவிப்பதாக துரைமுருகன் சொல்லியிருக்கிறார்.
இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.

'கட்சி வேறுபாடுகளுக்கு இதில் இடமில்லை!'

''தமிழகத்திற்கு தர வேண்டிய நீரை, கர்நாடகா மாநிலம் திறந்து விட அறிவுறுத்துமாறு, காவிரி மேலாண்மை ஆணையத்தை வலியுறுத்துவோம்,'' என, அமைச்சர் துரைமுருகன் கூறினார். டில்லி செல்லும் முன், சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி:காவிரியில் இருந்து ஜூன் மாதத்திற்கான ஒதுக்கீடான, 6 டி.எம்.சி., தண்ணீர் இதுவரை திறந்து விடப்படவில்லை. தண்ணீர் திறந்து விடுவதை கண்காணிக்க, காவிரி மேலாண்மை ஆணையம் உள்ளது. ஆனால், கர்நாடகா தண்ணீர் திறந்து விட, ஆணையம் அறிவுறுத்தவில்லை.
ஆணையத் தலைவரை சந்தித்து, தமிழகத்திற்கு தண்ணீரை திறந்து விட, கர்நாடகா அரசை அறிவுறுத்துமாறு வலியுறுத்த உள்ளோம். ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்தபோதும், இதேபோல தண்ணீர் பிரச்னை ஏற்பட்டது. அப்போது, அவர்களுக்கு வேண்டிய கட்சி, கர்நாடகாவில் ஆட்சியில் இருந்தது.
இதில், கட்சி வேறுபாடுகளுக்கு இடம் இல்லை. நமக்கு நியாயமான, சட்டப்படி வர வேண்டிய தண்ணீரை திறந்து விட கோருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர்

கருத்துகள் இல்லை: