tamil.abplive.com - சுதர்சன் : கடந்த 16 மாதங்களாக, உக்ரைன் போர் உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், அதில் திடீர் திருப்பமாக ரஷியா ஆதரவு கூலிப்படை ரஷியா ராணுவத்திற்கு எதிராகவே திரும்பியது.
குறிப்பாக, ரிஷிய நாட்டு ராணுவ தலைமையை கவிழ்க்க போவதாக வாக்னர் கூலிப்படை எச்சரிக்கை விடுத்தது.
ரஷிய தலைநகர் மாஸ்கோவை நோக்கி படையெடுத்து செல்ல, தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் கூலிப்படைக்கு அதன் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் உத்தரவிட்டார்.
இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உத்தரவு பிறப்பித்த வேகத்துடனேயே அதனை திரும்ப பெற்றார் வாக்னர் கூலிப்படை தலைவர் பிரிகோஜின்.
இரவு நடந்த ரகசிய பேச்சுவார்த்தையில் ரஷிய அரசுக்கும் வாக்னர் கூலிப்படைக்கும் சுமூகமான தீர்வு ஏற்பட நாட்டை விட்டு செல்ல பிரிகோஜின் ஒப்பு கொண்டதாகக் கூறப்படுகிறது.
பிரச்னை முடிவுக்கு வந்த போதிலும், உலகின் அதிகாரமிக்க தலைவரான புதினுக்கு எதிராக சொந்த நாட்டு கூலிப்படையே திரும்பியது உலக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இதனால், அவரின் செல்வாக்கு சரியும் என கூறப்படுகிறது. இப்படிப்பட்ட பிரச்னைக்கு மத்தியில், ரஷிய அதிபர் தற்போது எங்குள்ளார் என்ற கேள்வி உலக நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது.
மக்கள் முன் தோன்றி ரஷிய அதிபர் புதின்:
இந்நிலையில், வாக்னர் கூலிப்படையின் கிளர்ச்சி முடிவுக்கு வந்த பிறகு, முதல்முறையாக வீடியோ செய்தி வெளியிட்டு மக்கள் முன் தோன்றியுள்ளார் புதின். "எதிர்காலத்தின் பொறியாளர்கள்" என்று அழைக்கப்படும் இளைஞர் மன்றத்தில் புதின் உரையாற்றினார். கடுமையான வெளிப்புற சவால்களை எதிர்கொண்டு நாட்டின் தொழில்துறையின் நிலையான செயல்பாட்டை உறுதி செய்ததற்காக நிறுவனங்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.
வாக்னர் கூலிப்படை - யார் இவர்கள்?
பிஎன்சி வாக்னர் எனப்படும் வாக்னர் கூலிப்படை, ரஷிய நாட்டின் துணை ராணுவ அமைப்பாகும். சட்டத்திற்கு அப்பாற்பட்டு வேலை செய்து வருகிறது. அடிப்படையில், இது ஒரு தனியார் ராணுவ அமைப்பாகும். கூலிப்படையினரை கொண்டு இயங்கி வருகிறது. கிழக்கு உக்ரைனில் ரஷிய சார்பு பிரிவினைவாத சக்திகளுக்கு ஆதரவளிக்கும் போது இந்த குழு முதலில் 2014இல் அடையாளம் காணப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக