nakkeeran : அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். அதேசமயம் அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக அவர் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு நீதிமன்றத்தின் அனுமதியோடு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது.
கடந்த 14 ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு ஜூன் 28 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டது.
தொடர்ந்து காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என அனுமதி கேட்டு அமலாக்கத்துறை கொடுத்திருந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் 14 ஆம் தேதி முதல் இன்று மாலை 3 மணி வரை நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரித்து காணொளி வாயிலாக செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்த உத்தரவிட்டனர்.
இந்நிலையில் செந்தில் பாலாஜி கைது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், 'செந்தில் பாலாஜியை சட்டவிரோதமாக கைது செய்யவில்லை. சம்மனை பெற செந்தில் பாலாஜி மறுத்தார். அதிகாரிகளை மிரட்டும் தொனியில் நடந்து கொண்டார். விசாரணைக்கு ஒத்துழைக்காததால் வேறுவழியின்றி கடைசியாக செந்தில் பாலாஜியை கைது செய்தோம். அவர் சட்ட விரோத பண பரிமாற்றம் செய்துள்ளார் என்பதற்கு காரணங்கள் உள்ளன. அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் அவரை காவலில் எடுத்து விசாரிக்கவில்லை. வருங்காலத்தில் செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க வாய்ப்பளிக்க வேண்டும். ஜூன் 13ஆம் தேதி நடந்த சோதனையில் செந்தில் பாலாஜி உடன் இருந்தார். அவரை சட்டவிரோதமாக சிறை பிடிக்கவில்லை. பெருந்தொகை டெபாசிட் செய்யப்பட்டது பற்றி எந்த விளக்கமும் செந்தில் பாலாஜி தரப்பில் அளிக்கப்படவில்லை. செந்தில் பாலாஜி கைது பற்றி அவரது குடும்பத்தினருக்கும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் தகவல் அளிக்கப்பட்டது' என பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக