வெள்ளி, 30 டிசம்பர், 2022

பாகிஸ்தானில் இந்து பெண் தலை துண்டித்து படுகொலை

 மாலை மலர் : கடந்த 27ந் தேதியன்று வெளியே சென்ற நிலையில் அந்த பெண் வீடு திரும்பவில்லை.
வயல் வெளியில் இருந்து அவரது சிதைக்கப்பட்ட உடல் கண்டெடுக்கப்பட்டதாக தகவல்.
சிந்து: பாகிஸ்தானின் இந்து பெண் தயா பீல் என்பவர் (வயது 44) தலை துண்டிக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து பாகிஸ்தான் மக்கள் கட்சியின் சிந்து மாகாண சிறுபான்மை பிரிவு நிர்வாகி கிருஷ்ணகுமாரி தமது டுவிட்டர் பதிவில், சின்ஜிரோ பகுதி வயல்வெளியில் இருந்து அவரது சிதைக்கப்பட்ட உடல் கண்டெடுக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
நான்கு குழந்தைகளுக்கு தாயான தயா பீல், கடந்த 27ந் தேதியன்று வெளியே சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது.
தாய் வராததால் அவரை தேடி சென்றதாகவும் பல மணிநேர தேடுதலுக்குப் பிறகு வயலில் அவரது சிதைந்த உடலை கண்டதாக, தயா பீல் மகன் சூமர் தெரிவித்துள்ளார்.



தனது தாய் கொல்லப்பட்ட விதம் எங்களுக்கு வேதனை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கொடூர தாக்குதல் அந்த பகுதியில் உள்ள இந்து சமூகத்தினரிடையே அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தானில் இந்து பெண் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்டதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, பாகிஸ்தான் தனது சிறுபான்மையின மக்களை பாதுகாக்க வேண்டும் என்றும், அவர்களது நலன்கள், பாதுகாப்பில் உள்ள பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்றும் கடந்த காலங்களில், இந்தியா தெரிவித்துள்ளதாகவும்,
தற்போது அதையே மீண்டும் வலியுறுத்துவதாகவும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: