கலைஞர் செய்திகள் : தேர்தல் அறிக்கையில் சொன்னபடி விரைவில் கலைஞர் உணவகங்கள் திறக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் இன்று (ஜூலை 5) உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு குறித்த மாநாடு நடைபெற்றது. மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் உணவுத்துறை அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
இந்த மாநாட்டில், தமிழக அரசின் சார்பில் கலந்துகொண்ட அமைச்சர் ஆர்.சக்கரபாணி, அதன் பின் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.“ ‘அம்மா உணவகங்களைப்போல கலைஞர் உணவகங்கள் திறக்கப்படும் என இதே இடத்தில், கடந்த ஆண்டு சொல்லியிருந்தீர்கள். ஆனால், ஓர் ஆண்டு முடிந்துவிட்டது. தற்போது அதன் நிலை என்ன?” என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த அவர், ”திமுக ஆட்சிக்கு வந்தால் 505 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். சொன்ன வாக்குறுதிகளை எல்லாம் அவர் ஓரளவு நிறைவேற்றியிருக்கிறார். அதில் கடந்த ஆட்சியிலே, முதல்வரின் பெயரிலே உணவகங்கள் திறக்கப்பட்டன. அதேபோன்று பேரூராட்சிப் பகுதிகளிலும் மற்ற பகுதிகளிலும் கலைஞர் பெயரால் 500 உணவகங்கள் திறக்கப்படும் என்று சொன்னார். அது, வரும் காலங்களில் கண்டிப்பாக நிறைவேற்றப்படும். 505 வாக்குறுதிகளில் 208ஐ நிறைவேற்றியுள்ளோம். இன்னும் பல்வேறு வாக்குறுதிகள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் படிப்படியாக முதல்வர் நிறைவேற்றுவார்” என்றார்.
பேட்டியின்போது, உணவுத்துறைக்கான ரூ.2,000 கோடி மானியத்தை விடுவிக்க மத்திய உணவுத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தி உள்ளோம் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
ஜெயலலிதா ஆட்சியில் பலராலும் பாராட்டப்பட்ட அம்மா உணவகம், திமுக ஆட்சிக்கு வந்ததும் மூடப்படுமோ என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில்தான் சென்னை முகப்பேரில் அம்மா உணவகம் சூறையாடப்பட்டு அங்கு இருந்த ஜெயலலிதா புகைப்படம் கிழிக்கப்பட்டது. ஆனால் முதல்வர் ஸ்டாலின் துரிதமாக செயல்பட்டு தனது கட்சியினர் மீதே நடவடிக்கை எடுத்தார்.
அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும் என்கிற அறிவிப்பும் வந்தது. அதோடு திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினும் அம்மா உணவகங்களில் ஆய்வு நடத்தி, உணவு அருந்திய கதையும் உண்டு. அதுபோல், மதுரையில் உள்ள ஓர் அம்மா உணவகத்தில் பெண் கவுன்சிலரின் கணவர் ஒருவர், தன் இஷ்டத்துக்கு அதை ஹோட்டலாய் மாற்றி தோசை, ஆம்லேட் எனப் போட்டு கல்லா கட்டிய செய்திகளும் வெளியாகின. இந்த பின்னணியில்தான் கலைஞர் உணவகம் அமைக்கப்படும் என்று டெல்லியில் சொல்லியுள்ளார் அமைச்சர் சக்கரபாணி.
-ஜெ.பிரகாஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக