சிவசங்கரன் சுந்தரராசன் : சமூகம் சாதி – மதம் போலி மார்க்சிஸ்டுகளின் வேத உபதேசம்
சங்கரன் நம்பூதிரியும் அவரது சீடர்களும் ஆற்றிவரும் சமுகப்பணி
போலி மார்க்சிஸ்டுகளின் வேத உபதேசம்
வினவு
இதுவரை ”புதிய கலாச்சாரம்” வாசகர் களுக்கு ”அறிவுச் சோதனைப் போட்டி” எதையும் நாம் நடத்தியதில்லை. இப்போது ஒரு சிறு ஆவல். அதையும் செய்து பார்த்து விடுவோமே! கீழே தரப்படும் மேற்கோள்கள் யாருடையது என்று வாசகர்களால் கண்டுபிடிக்க முடிகிறதா பார்ப்போம்!
வேத கலாச்சாரம்
”பல்வேறு மன்னர்கள் ஆட்சி நடத்திய நாடுகளாகத் தான் இந்திய உபகண்டம் இருந்தது. ஆனால், இந்த உபகண்டத்தில் வாழ்ந்த மக்களுக்கிடையே ஏதோ ஒருவிதமான இணைப்பும் – பிணைப்பும் நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறது.
இந்திய மக்களின் மொழிகளுக்கிடையிலான தொடர்புகள், இலக்கியங்கள் – இதிகாசங்கள் மூலமாக ஏற்பட்டுள்ள ஆன்மீகப் பிணைப்புகள், ஆச்சாரங்கள் அனுஷ்டானங்களில் காணப்படுகிற ஒருமைப்பாடுகள், மத நம்பிக்கையினாலும் – கடவுள் வழிபாட்டினாலும் ஏற்பட்டுள்ள ஒற்றுமை, உறவுகள் – இவைகளினால் ஏற்பட்ட இந்தியா என்ற இந்தியர் என்ற உணர்வு ஆழமாகவே வேரூன்றியுள்ளது”.
”வேதங்கள், உபநிடதங்கள் இந்திய உபகண்டத்தில் சில ஆயிரம் ஆண்டுகள் கோடிக்கணக்கான மக்களின் உணர்வைப் பற்றிக் கொண்டிருந்த தத்துவங்கள்”
”இந்தியா வேதங்களின் நாடு என்றும் இந்தியாவின் ஆரம்பகால கலாச்சாரம் வேத கலாச்சாரம் என்றும் தான் உலகில் அறியப்படுகிறது. வேதங்களையும் வேத கலாச்சாரத்தையும் உருவாக்கியதில் ஆரியர்கள் தான் பிரதான பங்குவகித்தனர் என்பதும் வரலாற்று உண்மையாகும். இதனை ஆரியர் கலாச்சாரம் என்றும் கூறுவர்”
நால்வருண முறையும் சாதீய முறையும் நிலவிய காலத்தில் தான், ”இந்திய நாடு, இந்திய மக்கள், இந்தியச் சமுதாயம் என்று உருவாகியது. அது ஆரம்பத்தில் பாரத தேசம் என்று அறியப்பட்டது. பிற்காலத்தில் இந்தியா என்று ஆகியது. வேதங்களும் இதிகாசங்களும் இதில் பெரும் பங்காற்றின”.
”சமூக விஞ்ஞானிகள், வரலாற்றாசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் இந்தியாவை அறியும் தாகத்தால் இந்திய வேதங்களையும் இதிகாசங்களையும் ஆழ்ந்து ஆராய்கின்றனர். அயல்நாடுகளில் தங்கள் மொழியில் இவைகளை வெளியிடுகின்றனர். இந்தியாவின் பண்டைக்கால கலாச்சாரத்தைப் போற்றுகின்றனர். இந்தியர்களான நாமெல்லாம் பெருமைப்படக்கூடிய இந்தக் கலாச்சாரத்தை உருவாக்கியவர்கள் ஆரியர்கள் என்ற பேரில் வரலாற்றில் அறியப்படுகிறார்கள். அதன் காரணமாக பண்டைக்கால இந்தியக் கலாச்சாரத்தை ஆரியக் கலாச்சாரம்” என்றும் அந்தக் கலாச்சாரத்தின் தோற்றுவாய் வேதங்களாக இருந்ததினால் வேதக்கலாச்சாரம் என்றும் அறிஞர்கள் அழைக்கின்றனர்”.
இந்தியாவில் ஆரியர்களின் வருகை
இந்தியாவில் ஆரியர்களின் வருகை
”இந்தியக் கலாச்சாரத்தில் ஆரியர்களால் இயற்றப்பட்ட வேதங்களும் இதிகாசங்களும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை இந்தக் கலாச்சாரம்தான் இந்திய மக்களின் கலாச்சாரமாக நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறது”.
”வேதங்கள், உபநிஷத்துகள், பல்வேறு விஞ்ஞானத் துறைகள் குறித்து எழுதப்பட்ட நூல்கள், புராண இதிகாசங்கள், காவிய நாடக இலக்கிய நூல்கள் – இவைகள் மூலமாக மனித சமுதாயத்தின் கலாச்சார வளர்ச்சிக்கு விலை மதிக்க முடியாத பங்கு செலுத்த ஆரிய சமூகத்தினால் முடிந்தது”.
”ஒட்டுமொத்தமாக ஆரியர்களுக்கும், வேதங்களுக்கும் தென்னிந்தியா உட்பட இந்திய சமுதாயத்தையும் கலாச்சாரத்தையும் உருவாக்கியதில் மிகப் பெரிய பங்குண்டு என்பதுதான் வரலாற்று ரீதியான உண்மை”.
”பொதுவாக இந்தியக் கலாச்சாரத்தில் மட்டுமின்றி தமிழ் கலாச்சாரத்தை உருவாக்கியதிலும் வேதங்களுக்கும் ஆரியர்களுக்கும் பங்குண்டு என்பது தானே உண்மை”“.
இவையெல்லாம் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களது ஆய்வு நூல்களில் இருந்து எடுக்கப்பட்டவை என்று நீங்கள் கருதினால் அது தவறாகும். இவை ”இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி” என்ற பெயரில் இயங்கிவரும் சங்கரன் நம்பூதிரிகள் மற்றும் அவரது சீடர்களின் ஆய்வு முடிவுகள். ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்கள் எதை ”இந்துத்துவம்” என்று கூறுகிறார்களோ அதையே தமது மார்க்சிய வரலாற்று ஆய்வுகளின் கண்டுபிடிப்புகள் என்று இந்தப் போலிக் கம்யூனிஸ்டுகள் பெருமையோடு பீற்றிக் கொள்கிறார்கள். ஆனால் இவர்கள் ”மார்க்சியம்” என்று எதைக் கூறிக் கொள்கிறார்கள் தெரியுமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக