“நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.
இதனைப் படிப்பதற்குக் கூட அவகாசமின்றி கடும் கோடை வெயிலில், பகல் - இரவு பாராது தி.மு.கழகக் கூட்டணியின் வெற்றிக்காக அயராது பணியாற்றிக் கொண்டிருக்கும் உடன்பிறப்புகள் ஒவ்வொருவரையும் நான் அறிவேன். உங்களில் ஒருவனான நானும் ஓய்வின்றிப் பரப்புரைப் பயணம் மேற்கொண்டு வருகிறேன்.
2021-ஆம் ஆண்டு பிறந்தபோதே இது நமக்கான ஆண்டு - தி.மு.கழகத்தின் ஆண்டு - பத்தாண்டுகாலமாக இருள் சூழ்ந்த தமிழகத்தில் புதிய வெளிச்சம் பாய்ச்சும் உதயசூரியன் உதிக்கும் ஆண்டு என்பதைத் தெரிவித்திருந்தேன். உடன்பிறப்புகளான உங்களையும் மக்களையும் நம்பித்தான் அதனைச் சொன்னேன்.
அந்த நம்பிக்கை வெற்றிகரமாக விளைந்திருப்பதைத் தேர்தல் களத்தில் காண முடிகிறது. தமிழகத்தை மீண்டும் சுயமரியாதை கொண்ட மாநிலமாக - தொழில் வளர்ச்சி உள்ள மாநிலமாக - வேலைவாய்ப்பு பெருகும் மாநிலமாக-அனைத்துத் துறைகளிலும் முதலிடம் பெறுகிற மாநிலமாக ஆக்கிட வேண்டும் என்கிற எண்ணம் தமிழ்நாட்டு வாக்காளர்களிடம் உள்ளது. அந்த எண்ணம் நிறைவேறிட, உதயசூரியன் சின்னமும் தோழமைக் கட்சிகளின் சின்னமுமே உறுதுணையாக இருக்கும் என்பதால் 234 தொகுதிகளிலும் மக்களின் பேராதரவு கழகக் கூட்டணிக்கு உள்ளது.
மகத்தான இந்த வெற்றிப் பயணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்திட வேண்டும் என மத்திய - மாநில ஆளுங்கட்சிகளான பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி தொடர்ந்து முயற்சித்து வருகிறது. பொய்ப் பிரச்சாரங்களை அரசாங்க பணத்தில் விளம்பரமாகக் கொடுத்தார்கள். தி.முக மீது அவதூறுகளை அள்ளி வீசினார்கள். திசை திருப்பல்கள், இட்டுக்கட்டுதல், வெட்டி - ஒட்டுதல் எனப் பல தில்லுமுல்லு வேலைகளைச் செய்து பார்த்தனர். மக்களிடம் எதுவும் எடுபடவில்லை.
அதன்பிறகு, முதலமைச்சரில் தொடங்கி பிரதமர் வரை பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டுப் பரப்புரை செய்தார்கள். தி.மு.கவின் வலிமை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருப்பதைக் கள நிலவரமும், ஊடகங்களின் கணிப்புகளும் ஆட்சியாளர்களுக்குத் தெளிவாகக் காட்டிவிட்டது. அவர்களின் அத்தனை மோசடி அம்புகளும் முனை முறிந்த நிலையில், கடைசியாக ரெய்டு எனும் மிரட்டல் ஆயுதத்தை எடுத்திருக்கிறார்கள்.
மிரட்டலுக்கும் - நெருக்கடிக்கும் அஞ்சாத இயக்கம்தான் தி.மு.கழகம். ஜனநாயகக் களத்தில் நேருக்கு நேர் நின்று - மக்களின் ஆதரவைப் பெறுவதற்கு வழியில்லாதவர்கள் - மக்களின் கடுமையான எதிர்ப்பைச் சந்திப்பவர்கள் - மிரட்டல் மூலம் கழகத்தை வீழ்த்திவிடலாம் என மனப்பால் குடிக்கிறார்கள்.
ஒவ்வொரு உடன்பிறப்புக்குள்ளும் தலைவர் கலைஞர் வாழ்கிறார். எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்ற பேரறிஞர் அண்ணாவின் இதயத்தை இரவலாகப் பெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் வாழ்கிறார். மரணத்திற்குப் பின்னும் மெரினாவில் தனக்கான இடத்தை சட்டரீதியாகப் போராடி வென்ற தலைவர் கலைஞர் வாழ்கிறார். அவர்தான் 234 தொகுதிகளிலும் தி.மு.கழகக் கூட்டணியின் வேட்பாளராக நிற்கிறார்.
அதனை நிரூபித்திடும் வகையில், கழக உடன்பிறப்புகள் களப்பணியில் தொடர்ந்து கவனம் செலுத்துங்கள். பெருகிவரும் மக்களின் ஆதரவை ஒருமுகப்படுத்துங்கள். அவற்றை ஒட்டுமொத்தமாக தி.மு.கழக கூட்டணிக்கு ஆதரவான வாக்குகளாக்கிடப் பாடுபடுங்கள். ஆளுந்தரப்பின் பொய் பரப்புரை - ரெய்டு நடவடிக்கைகள் - திசை திருப்பும் நடவடிக்கைகளால் உங்கள் கவனம் சிதறிவிட வேண்டாம்.
நெருக்கடிகளை நான் எதிர்கொள்கிறேன். மக்கள் தரப் போகும் வெற்றியைச் சிந்தாமல் சிதறாமல் நீங்கள் பெற்றுத் தாருங்கள்.
234 தொகுதிகளிலும் வெல்வோம். ஆதிக்கவாதிகளிடமிருந்தும் - அடிமைகளிடமிருந்தும் தமிழகத்தை மீட்போம்.”
இவ்வாறு தனது மடலில் குறிப்பிட்டுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக