வெள்ளி, 4 டிசம்பர், 2020

ரஜினி அரசியல்: நவம்பர் 30 டு டிசம்பர் 3 -.. நடந்தது என்ன... பின்னணியில் அமித் ஷாஜி இருக்காரு' என கமலாலயத்தினர்

vikatan :  1992-ம் ஆண்டிலிருந்தே தன்னை நோக்கி எழுப்பப்பட்டுக் கொண்டிருந்த கேள்விக்கு, 2020 டிசம்பர் 3-ம்தேதி விடையளித்துவிட்டார் நடிகர் ரஜினிகாந்த். 2021 ஜனவரியில் தனிக் கட்சி, டிசம்பர் 31, 2020 -ல் அறிவிப்பு என்று ட்வீட் மூலம் அறிவித்த ரஜினி, தொடர்ந்து, தமது கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும், தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனமூர்த்தியையும் நியமித்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், ` அரசியலில் மாற்றம் வேண்டும். இப்போ இல்லைன்னா... எப்பவும் இல்லை' என்றும் முழங்கினார். இது எல்லாமே, ஆண்டாண்டுகாலமாக காத்துக்கொண்டிருந்த ரஜினியின் ரசிகர்களுக்கு அளவில்லாத ஆனந்தத்தைக் கொடுக்க, அவர்கள் இனிப்புக் கொடுத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
ரஜினி - பத்திரிகையாளர் சந்திப்பு
ரஜினி - பத்திரிகையாளர் சந்திப்பு

இத்தனை ஆண்டுகளாக இல்லாமல், தற்போது திடீரெனெ எப்படி இந்த முடிவுக்கு வந்தார் ரஜினி, அவர் மனதை கரைத்தவர்கள் யார்?... குறிப்பாக நவம்பர் 30-ம் தேதியிலிருந்து டிசம்பர் 3-ம் தேதிக்கு இடைப்பட்ட நாள்களில் என்ன நடந்தது என்ற பல்வேறு கேள்விகளோடு ரஜினி ரசிகர் மன்றத்தின் முக்கிய நிர்வாகிகள், அவருக்கு நெருக்கமானவர்கள் எனப் பலரையும் தொடர்பு கொண்டோம்.

ரஜினியின் பார்ப்பார் அர்ஜுன்  மூர்த்தியின் ஜாதிவெறி

``எப்பவுமே யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் எதிர்பாராத ஒன்றை அறிவிப்பதுதான் எங்க தலைவரின் ஸ்பெஷலே. ஆனா, எதை எந்த நேரத்தில் அறிவிக்க வேண்டும் என்று அவருக்கு நன்றாகவே தெரியும். அவர் வழி எப்பவுமே தனி வழிதான்’’ என பில்டப்புடன் தொடங்கியவர்கள், தொடர்ந்து மிக விரிவாகப் பேசினார்கள்.

நவம்பர் 30 மீட்டிங்கில் என்ன நடந்தது?

``மன்றத்தின் முக்கிய நிர்வாகிகளை அழைத்து சென்னையில் தலைவர் மீட்டிங் நடத்தினார் அல்லவா, அங்கே எல்லோரிடமும் மனம் விட்டு பேசினார். மாவட்ட அளவிலான பணிகளைப் பற்றிக் கேட்டார். அப்போது, எல்லோருமே, ``நாம் கட்சி தொடங்கி தேர்தலைச் சந்தித்தால் நிச்சயம் மாற்று சக்தியாக வருவோம்' என்றனர் ஒருமித்த குரலில். உடனே ரஜினியோ, `உங்களில் 15% பேரு நல்லா பணியாற்றியிருக்கீங்க... ஆனா மீதி ஆள்கள் சுணக்கமா இருக்கீங்க. உங்களை வைத்து எப்படி மாற்றத்தைக் கொடுக்க முடியும்?' என்று தமது வேதனையைப் பகிர்ந்தார். ஆனாலும், அது எங்களை உத்வேகப்படுத்த அவர் பேசியதாகவே நாங்க எடுத்துக்கிட்டோம். அதன் தொடர்ச்சியாகவே, `நாம 10-15% வாக்குகள் பெறுகிறோம் என்றால், அதைவைத்து எப்படி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும்?' என்றும் கேட்டார் ரஜினி. `இல்ல, நமக்கு 234 தொகுதிகளிலும் ரசிகர்கள் இருக்காங்க. அவர்கள் குடும்பத்தினரையும் வாக்காளர்களாக மாற்ற நம்முடைய பூத் கமிட்டிகளையும் வலிமைப்படுத்திக் கொண்டே இருக்கோம். நிச்சயம் நாம், பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறுவோம்' என்று உறுதியான குரலில் தெரிவித்தோம்.

ரஜினி ஆலோசனைக் கூட்டம்
ரஜினி ஆலோசனைக் கூட்டம்

எல்லாவற்றையும் கவனமாகக் கேட்டுக்கொண்டவர், `விரைவில் முடிவை அறிவிக்கிறேன். உங்க மாவட்டத்தில் நீங்கள் செய்த பணிகள் , மீட்டிங் குறித்த மினிட் நோட்ஸ் எல்லாம் எனக்கு அனுப்பி வையுங்கள். தொகுதியில் நல்ல பெயர் எடுத்தவர்கள் லிஸ்ட்டும் அனுப்பி வையுங்கள். பூத் கமிட்டியை வலுப்படுத்தும் பணிகளைத் தீவிரப்படுத்துங்கள்' என்றும் உத்தரவிட்டார். அப்போதே நிச்சயம் கட்சியை அறிவிப்பார் என எங்களுக்கு உறுதியாகத் தெரிந்தது. இதோ இப்போது அறிவித்தும் விட்டார்" உற்சாகமாகத்தை வெளிப்படுத்தியவர்களிடம்,

நவம்பர் 30 - டிசம்பர் 3 வரையிலான இந்த இடைப்பட்ட நாள்களில் என்ன நடந்தது என்றோம். `தலைவா, பொறுங்க...சொல்றோம்' என சிரித்தவர்கள், அருகிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீர் அருந்திவிட்டு, தொடர்ந்தனர்.

ரஜினியின் மனதைக் கரைத்த நண்பர்கள்

``அரசியல் கட்சி தொடங்குவதே சரி... நல்ல முடிவெடுங்க' என இந்த இடைப்பட்ட நாள்களில் ரஜினியின் பல்வேறு நண்பர்களும் அவரிடம் வலியுறுத்தினார்கள். அதில் முதன்மையானவர் தமிழருவி மணியன். தலைவரை தமிழருவி மணியன் சந்தித்தபோது, `எங்க மன்றத்தின் பல மாவட்ட நிர்வாகிகள் ஆளும்கட்சியோடு நெருக்கமாக இருக்காங்க. ஒரு சிலர் எதிர்க்கட்சியான தி.மு.க-வோடு கூட நெருக்கம் காட்டுறாங்க. இவர்களை நம்பி எப்படி களத்தில் இறங்குவது?' என்று மனம்விட்டு பேசியிருக்கார் எங்க தலைவர்.

ரஜினி
ரஜினி

`ஒரு இடத்தில் இருந்துகொண்டே இன்னொரு இடத்துக்குத் துண்டு போடுவதெல்லாம் அரசியலில் சகஜம். இதற்காகவெல்லாம் நம்முடைய இலக்கிலிருந்து பின்வாங்கக் கூடாது. இவர்கள் எல்லோரையும் கடந்து, மக்கள் உங்களை நேசிக்கிறார்கள். உங்களுக்காக பல ஆண்டுகளாகக் காத்திருக்கிறார்கள். குறிப்பாக நீங்கள் சொன்னதுபோலவே தற்போதைய அரசியல் வெற்றிடத்தை நீங்கள்தான் பூர்த்தி செய்ய முடியும். நீங்கள் முடிவெடுக்கவே இவ்வளவு ஆண்டுகள் எடுப்பதாக இப்பதே எதிர்க்கட்சிகள் கேலி செய்துகொண்டிருக்கிறார்கள். தி.மு.க, தேர்தல் பரப்புரையையும் தொடங்கி தீவிரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். எல்லாவற்றையும் யோசிக்க வேண்டும் . நல்ல முடிவெடுங்க' என்று தமிழ்நாட்டுக் களச்சூழலை மிக அழுத்தமாகவே பதிவு செய்தார் அவர்.

தம்முடைய உடல்நிலை குறித்து தலைவர் சுட்டிக் காட்டியபோது,`தற்போதைய தேர்தல் வெற்றி, தோல்வியை தீர்மானிப்பதில், சமூக வலைதளங்கள் அதாவது டிஜிட்டல் தளம் முக்கிய பங்கு வகிக்கும். இன்னைக்கு பல கட்சிகளுடைய மீட்டிங்குகளும் காணொலி வாயிலாகத்தானே நடக்கிறது?... நாங்க இருக்கோம். மக்கள் உங்களை எதிர்பார்க்கிறாங்க’’ என்று தொடர்ந்து பேசியிருக்கிறார் தமிழருவி மணியன். இதே கருத்தைத்தான் தொலைக்காட்சி விவாதங்களில் பத்திரிகையாளர்கள், அரசியல் பிரமுகர் என பலரும் எடுத்துக்கூற, இறுதியாக மனம் கரைந்தார் தலைவர் ரஜினி " என்றனர்.

``இவர்கள் மட்டுமல்ல ரஜினி கட்சி அறிவித்ததன் பின்னணியில் எங்க அமித் ஷாஜியும் இருக்காரு' என பெருமிதத்தோடு பேசுகிறார்கள் கமலாலயத்தினர்.,,,, அமித் ஷா ஆபரேஷன் சக்ஸஸ்!,,,,``அமித் ஷா சென்னை வந்தபோது, `ரஜினியை எப்படியாவது சந்திக்க வைக்க வேண்டும் என்று பெருமுயற்சி எடுத்தார் ஆடிட்டர் குருமூர்த்தி. ஆனால், அது அமையாததால் கொஞ்சம் கோபம்தான் இருந்தாலும், ரஜினிக்காக லாபி செய்பவர்களிடம் தொடர்ந்து ரஜினியின் அரசியல் கட்சியின் தேவை குறித்து வலியுறுத்தியது டெல்லி தலைமை.

தி.மு.க-வில் உதயநிதியின் பரப்புரைப் பயணத்துக்கு நல்ல கூட்டம் சேருகிறது. அதற்கு முக்கிய காரணம் சினிமா இமேஜும்தான். அவருக்கே கூட்டம் வரும்போது, ரஜினி களத்தில் இறங்கினால் மாற்றம் நிகழும். மேலும், கணிசமான தொகுதிகளைக் கைப்பற்றினால், தொங்கு சட்டமன்றம் போன்ற ஒன்று அமைந்தால், அந்த நேரத்தில் புதிய முகமாக ரஜினியை முன்னிறுத்தலாம். இந்தவகையில் ரஜினி தயங்காமல் புதுக் கட்சி தொடங்கிக் களமிறங்கலாம். தேர்தலை எதிர்கொள்வது சாதாரணமானதல்லதான்; புரிகிறது. அதனால் ஒவ்வொரு தொகுதிக்கும் வேண்டிய வைட்டமின் `ப' உதவிகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’’ என்று சில முக்கிய தொழிலதிபர்களையும் கைகாட்டியுள்ளது டெல்லி தலைமை. ......அந்தத் தொழிலதிபர்களும் `நாங்க இருக்கோம்' என்று ரஜினிக்கு நம்பிக்கை கொடுத்துள்ளனர். அடுத்தடுத்த சிட்டிங்கில் வேண்டிய உதவிகள் செய்ய, அவர்கள் தயாராக இருக்க, அதன்பிறகுதான் ரஜினியும் கட்சி தொடங்க கிரீன் சிக்னல் காட்டியுள்ளார். ரஜினியின் வருகை ஆட்சிக் கனவில் இருக்கும் தி.மு.க-வுக்கு பலத்த அடியாக இருக்கும். இந்த வகையில் எங்க அமித் ஷா ஆபரேஷன் சக்ஸஸ்’’ என்று சொல்லும் தாமரைக் கட்சி நிர்வாகிகள், ``ரஜினியின் கட்சியில் பொறுப்புக்கு வந்திருக்கும் தமிழருவி மணியன்தான் 2014 நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க, பா.ம.க, தே.மு.தி.க, ம.தி.மு.க கூட்டணி சேர்வதில் முக்கிய பங்கு வகித்தார். அர்ஜுனமூர்த்தியோ, பா.ஜ.க அறிவுசார் பிரிவில் மாநில பொறுப்பில் இருந்தவர். இதெல்லாம் வச்சே நீங்க புரிஞ்சுக்கக் கூடாதா’’ என்கிறார்கள் சூசகமாக.

இப்படியாக அரசியல் கட்சி தொடங்கலாமா என முடிவெடுக்கவே, தனியாக ஆலோசனைக் கூட்டம் நடத்திக் கொண்டிருந்த ரஜினி, ஒருவழியாக முடிவெடுத்து, அதை அறிவித்தும் விட்டார். சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், கடந்த 2017 டிசம்பர் 31-ல் அறிவித்தபடி, போரில் குதிக்க, மூன்றாண்டுகளாக யோசித்தவர், இறுதியாக நவம்பர் 30 -டிசம்பர் 03, இந்த நான்கு நாளில் முடிவெடுத்து, போர்க்களத்திலும் குதித்துவிட்டார் ரஜினி.ஆனால், ``எதிரிகள் மட்டுமல்ல துரோகிகளும் நிறைந்ததே போர்க்களம். இங்கே பதமாகப் போர் செய்பவர்களால், மட்டுமே வெற்றியைச் சாத்தியமாக்க முடிந்துள்ளது என்பதே வரலாறு. வரலாறு முக்கியம் ரஜினியாரே" என்கிறார்கள் தேர்தல் கள வல்லுநர்கள்.

கருத்துகள் இல்லை: