திங்கள், 5 அக்டோபர், 2020

ரயில்வே டிக்கெட்டில் இந்தித் திணிப்பா? ரயில்வே விளக்கம்!

minnnambalam :ிக்கெட்டில் இந்தித் திணிப்பு தொடர்பாக ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் மத்திய அரசு இந்தி திணிப்பில் ஈடுபடுவதாக தமிழகத்திலிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், ரயில்வே டிக்கெட்டில் இந்தி திணிப்பு நடைபெறுவதாக நேற்று குற்றச்சாட்டு எழுந்தது.

அதாவது, வழக்கமாக ஐஆர்சிடிசியில் டிக்கெட் முன்பதிவு செய்தால் ஆங்கிலத்தில்தான் குறுஞ்செய்தி வரும். ஆனால், நாகர்கோவிலைச் சேர்ந்த செல்வி என்பவருக்கு சில நாட்களாக குறுஞ்செய்தி இந்தியில் வந்திருக்கிறது. இந்தியில் குறுஞ்செய்தி வந்ததற்கு பாமக நிறுவனர் ராமதாஸ், திமுக எம்.பி.க்கள் கனிமொழி, தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்த நிலையில் ரயில்வே அமைச்சகம் நேற்று இரவு (அக்டோபர் 4) வெளியிட்ட செய்திக் குறிப்பில், “ரயில் பயணி ஒருவர் டிக்கெட் முன்பதிவு செய்தபோது குறுஞ்செய்தி இந்தியில் வந்ததாகவும், அதைப் புரிந்துகொள்ள சிரமமாக இருந்ததாகவும் குற்றச்சாட்டப்பட்ட சில ட்விட்டர் பதிவுகள் எங்கள் கவனத்துக்கு வந்தன” என்று குறிப்பிடப்பட்டது.

ஐஆர்சிடிசி இணையதளத்தில் கணக்கு தொடங்கும்போது, நமக்கான தகவல்கள் எந்த மொழியில் வர வேண்டும் என்பதற்கான மொழித் தேர்வு ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது எனக் கூறிய ரயில்வே அமைச்சகம், “அதில் ஆங்கிலம் அல்லது இந்தியைத் தேர்வு செய்ய வேண்டும். இப்போது எழுந்துள்ள புகாரில் யார் பெயரில் டிக்கெட் பதிவு செய்யப்பட்டுள்ளதோ, அவர் டிக்கெட் பதிவு செய்த கணக்கில் இந்தி விருப்ப மொழியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதனால்தான் அவருக்கு குறுஞ்செய்திகள் இந்தி மொழியில் சென்றுள்ளன” என்று விளக்கம் அளித்துள்ளது. பயணிகள் ஆன்லைனில் முன் பதிவு செய்யும்போது மொழித் தேர்வைச் சரியாக மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

எழில்

கருத்துகள் இல்லை: