ஞாயிறு, 5 ஏப்ரல், 2020

கால்நடைத் தீவனமாகும் கேரட்: கண்ணீரில் ஊட்டி விவசாயிகள்


கால்நடைத் தீவனமாகும் கேரட்: கண்ணீரில் ஊட்டி விவசாயிகள் மின்னம்பலம் :  கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் நாடே முடங்கிக்கிடக்கிறது. தென்னிந்திய அளவில் மலைக் காய்கறி உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் நீலகிரியில் ஆயிரக்கணக்கான ஹெக்டர் பரப்பளவில் கேரட், உருளைக்கிழங்கு, பீட்ரூட், பூண்டு உள்ளிட்டவை பயிரிடப்படுகிறது.
நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் அதிக அளவில் மேட்டுப்பாளையம் சந்தைக்குக் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் மேட்டுப்பாளையத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் மொத்த விற்பனை காய்கறி மண்டிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளனஇதனால் நீலகிரியில் அறுவடை செய்யப்படும் மலைக் காய்கறிகளை முறையாக விற்பனை செய்யமுடியாமல் தவித்து வருகின்றனர். சிலர் அறுவடை செய்யாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதை மீறி அறுவடை செய்யும் சிலர் விற்பனையாகாமல் சாலைகளில் கால்நடைகளுக்கு உணவாகக் கொட்டிச் செல்கின்றனர்.
இந்தத் துயரம் குறித்து பேசியுள்ள கேத்தி பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர், “கடந்த மழை வெள்ளத்தில் பாதித்த நிலத்தை சீரமைத்து இப்போதுதான் பயிர் செய்தோம். அறுவடை நேரத்தில் கொரோனாவால் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. கேரட் போன்ற காய்கறிகளை ஒரு சில நாட்களுக்குமேல் வைக்க முடியாது. மீறி வைத்தால் கெட்டுப்போகும். இதனால் வேறு வழியின்றி ரோட்டில் கொட்டவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. காய்கறிகளை மொத்தமாக வாங்கி விற்பனை செய்வதற்காக கடந்த சில நாள்களுக்கு முன்புவரை மேட்டுப்பாளையம் மண்டிகள் இயங்கின. விவசாயிகள் பலரும் தங்கள் தோட்டங்களில் விளைந்த கேரட் உள்ளிட்ட காய்கறிகளை அறுவடை செய்து மண்டிகளுக்கு அனுப்பிவைத்தோம்
இந்த நிலையில், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் கொரோனா அறிகுறியால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் வசித்த பகுதிகள் சுமார் 5 கி.மீ சுற்றளவுக்கு மூடப்பட்டுள்ளன. வாகனங்கள் நுழையவும், வெளியே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அங்குள்ள காய்கறி மண்டிகள் அனைத்தும் வரும் 14ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளன. மண்டிகள் திறந்திருக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் பலரும் முன்கூட்டியே கேரட் பயிர்களை அறுவடை செய்தோம். இந்தச் சூழலில் மேட்டுப்பாளையத்தில் மண்டிகள் மூடப்பட்டுள்ளதால், அறுவடை செய்யப்பட்ட கேரட்களை விற்பனைக்கு அனுப்ப முடியாத நிலையில் தவித்து வருகிறோம்.
அறுவடை செய்த கேரட்டுகள் வீணாகி அழுகத் தொடங்கியுள்ளன. அவை சாலையோரங்களில் குவியல் குவியலாகக் கொட்டப்பட்டு கால்நடைகளுக்கு உணவாகி வருகிறது.
கேரட் மட்டும் அல்ல ஸ்ட்ராபெரி, காளான், கொய்மலர் உற்பத்திகளில் ஈடுபட்டவர்களும் பெரிய அளவில் நஷ்டமடைந்து வருகின்றனர். இந்த இழப்பை எப்படி ஈடுகட்டப்போகிறோம் என்றே தெரியவில்லை" என வேதனை தெரிவிக்கிறார்.
-ராஜ்

கருத்துகள் இல்லை: