வியாழன், 12 மார்ச், 2020

ம.பி. .. சிந்தியா ஆதரவு 12 எம்எல்ஏக்கள் மீண்டும் காங்கிரசுக்கு ஆதரவு ..?


.hindutamil.in : மத்திய பிரதேசதத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 19 பேர் ராஜினாமா செய்ததாக கூறி விட்டதாலேயே சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியமில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் கூறினார்.
மத்தியப் பிரதேச அரசியலில் பெரும் குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது. முதல்வர் கமல்நாத்துக்கும், மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் இடையே ஏற்பட்ட உட்கட்சி மோதலால் அவர் கட்சியிலிருந்து ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து சிந்தியாவின் ஆதரவாளர்கள் 22 எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்தார்கள்.
இதனால், 228 உறுப்பினர்கள் கொண்ட மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 206 ஆகக் குறைந்தது. பாஜகவுக்கு 107 எம்எல்ஏக்களும், காங்கிரஸ் கட்சிக்கு 95 உறுப்பினர்களும் உள்ளனர்.
பெரும்பான்மைக்கு 104 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு 95 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். காங்கிரஸ் கட்சி தன்னிடம் இருக்கும் 95 எம்எல்ஏக்களையும் பாஜகவின் குதிரை பேரத்துக்குப் பயந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த சூழலில் சட்டப்பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்கும் சூழல் ஏற்பட்டால் கமல்நாத் அரசு தப்பிக்குமா அல்லது கவிழுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், சிந்தியா ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேரில் தங்களுக்கு 12 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவிப்பார்கள், வாக்கெடுப்பு நடக்கும்போது அதிசயம் நிகழும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே மைனாரிட்டி அரசாக இருக்கும் கமல்நாத் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க பாஜக கோரும் என்ற கேள்வி எழுந்த நிலையில் வரும் 16-ம் தேதி அதற்கான வாய்ப்புகள் உள்ளதாக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் கூறியதாவது:
‘‘மத்திய பிரதேசதத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 19 பேர் ராஜினாமா செய்ததாக கூறி விட்டதாலேயே சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியமில்லை.
அப்படி ராஜினாமா செய்ததாக கூறும் நபர்கள் சபாநாயகரை நேரில் சந்தித்து தங்கள் கருத்தை தெரிவிக்க வேண்டும். பாஜகவினர் காங்கிரஸ் எம்எல்ஏக்களை கடத்திச் சென்று அடைத்து வைத்துள்ளனர்.’’ எனக் கூறினார்

கருத்துகள் இல்லை: