புதன், 15 ஜனவரி, 2020

பெரியாரின் உயரம், ‘சோ சாருக்கும்’ ரஜினி சாருக்கும் புரியவே புரியாது! - சுப. வீரபாண்டியன் பதிலடி!

suba vee about rajini speech in thuglak function
nakkheeran.in - அதிதேஜா : துக்ளக் இதழின் 50 ஆவது ஆண்டுவிழாவில் நடிகர் ரஜினிகாந்த பேசியது குறித்து பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், 1971 ஆம் ஆண்டு பெரியார் நடத்திய ஊர்வலம் குறித்து ரஜினி பேசியதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன், தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார்.  இதோ அவரது முகநூல் பதிவு -
 ‘பொங்கல் நாளில் மகிழ்ந்து பொங்கும் நிலையைத்  தாண்டி, நேற்றையப் பொய்களைக் கண்டு பொங்கும் மனத்துடன் இந்தப் பதிவை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.  14.01.2020 அன்று சென்னையில் நடைபெற்ற துக்ளக் ஆண்டுவிழாவில் பேசிய திரு. ரஜினி, "1971 சேலத்தில் பெரியார் அவர்கள்,  ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சிலை, அது வந்து உடையில்லாம,  செருப்பு மாலை போட்டு ஊர்வலமா எடுத்துட்டுப்போனாரு" என்று பேசியுள்ளார். "அதனை எதிர்க்க வேறு எந்தப் பத்திரிகைக்கும் தைரியம் இல்லாதபோது, சோ சார், துணிச்சலா அட்டைப்படத்துலயே போட்டு விமரிசிச்சாரு" என்றும் பேசியுள்ளார்.


யார் ஒருவருக்கும் தன் கருத்தைச் சொல்ல உரிமை உண்டு. ஆனால் செய்திகளை மாற்றிச் சொல்லவும், திரித்துச் சொல்லவும்  யாருக்கும் உரிமையில்லை.  ரஜினி  அதனைத்தான் செய்திருக்கிறார்.

ரஜினி குறிப்பிடும் அந்த ஊர்வலம், 24.01.1971 அன்று சேலத்தில் நடைபெற்றது. அன்று அங்கு நடைபெற்ற இரண்டு நாள் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில், இரண்டாவது நாள், ஒன்றரை மைல்  நீளத்திற்கு நடைபெற்ற பேரணி அது! அந்த மாநாட்டிற்குத் தடை கோரி, அன்றைய  ஜனசங்கம் கட்சியினர் (இன்றைய பா ஜ க) கருப்புக் கொடி காட்டினர். அந்தக் கருப்புக்கொடிப் போராட்டத்திற்கு அனுமதி கொடுத்ததும் கலைஞர் அரசுதான்!

கறுப்புக்கொடி காட்ட அங்கே கூடிய அந்தச் சிறு கூட்டத்தினரிடமிருந்து ஒருவர், ஐயா பெரியாரை நோக்கிச் செருப்பெடுத்து வீசினார்.  அது ஐயாவின் பின்வந்த ஒரு வண்டியில் போய்  விழுந்தது. அந்த வண்டியில்தான்  ராமர், சீதை படங்கள் இருந்தன.

தானாய் வந்த செருப்பு, வீணாய்ப் போக  வேண்டாம் என்று கருதிய ஒரு தொண்டர் அந்தச் செருப்பையே எடுத்து,  ராமர் படத்தை அடித்தார். இதுதான் நடந்தது. முன்னால்  சென்றுவிட்ட பெரியாருக்குக் கூட இந்த நிகழ்வு பிறகுதான் தெரியவந்தது.

செருப்பை எடுத்து வீசியவர்கள் பற்றி ரஜினி எதுவும் பேசவில்லை. அந்தக் கயமைத்தனத்தைக் கண்டிக்க அவருக்குத் துணிவில்லை. ஆனால்  பிறகு நடந்த நிகழ்வைத் திரித்துக் கூறுகின்றார்.

ரஜினியைப் போலவேதான் அவருடைய "சோ சாரும்" செய்தியைத் திரித்து அட்டையில் வெளியிட்டார். பெரியார் ராமரைச் செருப்பால் அடிப்பதைப்  போலவும், அதனைக் கலைஞர் பார்த்துக் கைகொட்டிச் சிரிப்பதைப் போலவும்  அட்டைப்படம் போட்டார். அதனால்தான் அது தடை செய்யப்பட்டது.

நாடு முழுவதும் இச்செய்தி பரப்பப்பட்டது. துக்ளக் மட்டுமில்லை, இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி ஆகிய நாளேடுகளும் செய்தியைத் திரித்து வெளியிட்டன. அம் மாநாட்டுத் தீர்மானங்களைக் கொச்சைப்படுத்தி எழுதின.

அந்த ஏடுகள் மீது 1971 பிப். 9-ஆம் நாள் மான நட்ட   வழக்குத் தொடுக்கப்பட்டது. அவ்வழக்கு 16.03,1971 அன்று நீதிபதிகள் கே.வீராசாமி, ராகவன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்து ஏட்டின்  சார்பில் நீதிமன்றம் வந்த ரங்கராஜன், ராமமூர்த்தி (அய்யர்) ஆகியோர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டனர். பிறகு வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன.

இன்று நேற்றல்ல, எப்போதும், "ஹைகோர்ட்டாவது....." என்பது போலப் பேசுவது, பிறகு மனோகரா வசனம் பேசிக்கொண்டு நீதிமன்றம் சென்று, மண்டியிட்டு மன்னிப்பு கேட்டுவிட்டுத்  திரும்புவது என்பதெல்லாம்   அவாளுக்கு 'சகஜமப்பா' என்பது ரஜினிக்குத் தெரிந்திருக்காது !

இது தெரியாமல், அந்த வீராதி வீரர்  திரும்ப அச்சிட்ட துக்ளக் பிளாக்கில் (black) விற்பனையானது என்கிறார் ரஜினி!  தர்பார் படம் டிக்கெட்தான் பிளாக்கில் விற்கிறது என்று நாம் நினைத்தால், அப்போதே 'சிஸ்டம் கெட்டுவிட்டது' போலும்! (பிளாக்கில் விற்பதைப்  பாராட்டிவிட்டு, ஊழலை எப்படி ஒழிப்பது?)

'சோ சார்' தவறாகப் பரப்பிவிட்ட இந்தச் செய்தியைப் பிடித்துக் கொண்டு, 1971 பிப்ரவரி முழுவதும் தமிழ்நாடெங்கும் திமுக விற்கு எதிரான பரப்புரைகள் நடைபெற்றன. மார்ச் மாதம் நடைபெறவிருந்த தேர்தலில் திமுகவைத் தோற்கடிப்பதற்கு இந்த ஓர் ஆயுதமே போதும் என்று கருதினர்.

பெரியார் படத்தைத் தீயிட்டுக் கொளுத்தினர். பெரியார் உருவ பொம்மையை எரித்தனர்.  அப்போது தந்தை பெரியார், 12.02.1971 அன்று, "பொறுமையாய் இருங்கள் தோழர்களே" என்று ஒரு தலையங்கம் எழுதினார். ராமரைக் காப்பாற்றவோ, நம்மை எதிர்க்கவோ இல்லை, தேர்தலில் திமுக வந்துவிடாமல் தடுக்கவே அவர்கள் இப்படியெல்லாம் செய்கிறார்கள். "என் உருவத்தை மட்டுமல்ல, என்னையே செருப்பால் அடித்தாலும், லட்சியமோ, கவலையோ கொள்ளாதீர்கள். இது நமக்குப்  புதிதல்ல" என்று எழுதினார்.

இனமானம் காக்க, கொள்கை பரப்ப இந்த இழிவுகளையெல்லாம் தாங்கித்தான் ஆகவேண்டும் என்று தம் தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார். அந்த மாமனிதரின் உயரம்  'சோ சாருக்கும்' ரஜினி சாருக்கும்  புரியவே புரியாது.

தேர்தல் முடிவுகள் மார்ச் முதல்வாரம் வெளியானபோது, திமுக மாபெரும் வெற்றியைப் பெற்றிருந்தது. சோ சார் ஆதரித்த காங்கிரஸ் கட்சியும் ராஜாஜியின் சுதந்திரா கட்சியும் படுதோல்வி அடைந்திருந்தன. எந்த சேலத்தில் அந்த நிகழ்வு நடைபெற்றதோ,  அதே சேலத்தில் இரண்டு தொகுதிகளிலும் திமுக வெற்றி
பெற்றது.

இவை எல்லாம் நம்மில் பலருக்கு இயல்பாகத்  தெரியும். பிறகு ஏன் ரஜினிக்கு மட்டும் தெரியவில்லை?

விடுதலை, முரசொலி படிப்பவர்களுக்கு நாட்டின் நடப்பும், உண்மைகளும் தெரியும். துக்ளக் மட்டும் படிக்கும் அறிவாளிகளுக்கு வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை!’ என்று குறிப்பிட்டுள்ளார் சுப. வீரபாண்டியன்.


உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


கருத்துகள் இல்லை: