புதன், 1 மே, 2019

அண்ணல் அம்பேத்கார் .. இந்திய தொழிலாளர்கள் மறக்க கூடாத தலைவர் ...


Adv Manoj Liyonzon : மே1 தொழிலாளர் தினத்தில் மறைக்கப்பட்ட தலைவர்
உலகெங்கிலும் மே 1 தொழிலாளர் தினமாக நெகிழ்ச்சியோடு கொண்டாடப்படுகிறது. அந்தந்த நாடுகளில் உள்ள தொழிலாளர்கள் தங்களுக்காக குரல் கொடுத்த, போராடிய, பாதுகாப்பளித்த, சட்டம் நிறைவேற்றிய தலைவர்களை நினைவு கூறுவர். இந்திய தேசத்தில் தொழிலாளர் நலன் சார்ந்த பல போராட்டங்களை அமைப்புகளும் தனி மனிதர்கள் பலரும் ஆங்காங்கே பிரச்சனைகளின் அடிப்படையில் முன்னெடுத்தனர் என்கிறது நம் வரலாறு.
ஆனால் ஒரு தலைவர் மட்டும் தொழிலாளர் நலன் சார்ந்த 28 சட்ட மசோதாக்களை சத்தமில்லாமல் நிறைவேற்றினார்.
அவரிடம் எந்த தொழிலாளர்களும் தங்களது துயரங்களை போக்க மனு கொடுக்கவில்லை. தங்களுக்காக போராட அழைக்கவில்லை. ஆனாலும் மனிதர்கள் மீது அவர் கொண்டிருந்த பேரன்பினாலும், மனிதர்களை பாரபட்சமின்றி சமமாக நடத்தும் பண்பை கொண்டிருந்ததாலும் தன்னிச்சையாக அந்த 28 சட்ட மசோதாக்களை வடிவமைத்தார், முன்மொழிந்தார், நிறைவேற்றினார், அமுல்படுத்தினார்
அவர் தான் நமது நவீன இந்தியாவின் தந்தை பாபாசாஹிப் டாக்டர் பிஆர். அம்பேத்கர் (M.A., Ph.D., M.Sc., D.Sc., Barrister-at-Law, L.L.D., D.Litt) அவர்கள்.
அவை:-
1. சம வேலைக்கு பாலின பேதமற்ற சம ஊதியம்
2. தொழிற்சாலைகளில் 12 மணி நேர வேலை நேரத்தை நீக்கி 8 மணி நேர வேலை திட்டத்தை அமுல்படுத்தினார்

3. முத்தரப்பு தொழிலாளர் மாநாட்டை, ஆகஸ்டு 7, 1942ல் புது டில்லியில் நடத்தினார். முத்தரப்பு பேச்சுவார்த்தையை அமுல்படுத்தினார்.
4. சுரங்க பெண் தொழிலாளர்கள்​ மகப்பேறு அனுகூலச் சட்டம்
5. பெண் தொழிலாளர்கள் சேமநல நிதி
6. பெண்கள் மற்றும் குழந்தைகள், தொழிலாளர் பாதுகாப்பு சட்டம்
7. பெண் தொழிலாளர் மகப்பேறு அனுகூலம்
8. நிலக்கரி சுரங்கங்களில் நிலத்தடி வேலைத் திட்டத்தில் பெண்கள் வேலைவாய்ப்பு குறித்த தடை மீட்பு
9. தொழிற்சங்கங்களை கட்டாயமாக அங்கீகரித்தல்
10. தேசிய வேலைவாய்ப்பு மையங்கள்
11. ஊழியர் அரசாங்க காப்பீட்டு திட்டம்
12. குறைந்தபட்ச ஊதிய திட்டம்
13. நிலக்கரி மற்றும் மைகா சுரங்கங்கள் வருங்கால வைப்புநிதி திட்டம்
14. தொழிலாளர் சேமநல நிதி
15. தொழில்நுட்ப பயிற்சி திட்டம் மற்றும் திறன் தொழிலாளர்கள் திட்டம்
16. மகப்பேறு நலச் சட்டம்
17. கிராக்கிப்படி
18. தொழிற்சாலை தொழிலாளர் சம்பளத்துடன் கூடிய விடுமுறை நாட்கள்
19. தொழிற்துறை ஊழியர்களுக்கான சுகாதார காப்பீடு
20. சட்டப்பூர்வ வேலைநிறுத்தம்
21. வருங்கால வைப்புநிதி சட்டம்
22. ஊழியர் சம்பள உயர்வு மீளாய்வு செய்தல்
23. இந்திய தொழிற்சாலை சட்டம்
24. இந்திய தேயிலை கட்டுப்பாடு மசோதா,
25. இந்திய தொழிற்சாலைப் பணியாளார்களுக்கான வீட்டு வசதித் திட்டம்,
26. மோட்டார் வாகனங்கள் (ஓட்டுனர்) மசோதா
27. தொழிலாளர்கள் மறுவாழ்வுத் திட்டம்
28. தொழிலாளர் இழப்பீடு (திருத்த) மசோதா
இந்தியாவில் வருடாவருடம் மே 1 தொழிலாளர் தினத்தை அனுசரிக்கிறோம். ஆனால் ஏனோ தெரியவில்லை தொழிலாளர் உரிமைகளை வென்றெடுக்க இவ்வளவு நன்மைகளை செய்த நவீன இந்தியாவின் தந்தை பாபாசாஹிப் டாக்டர் பிஆர். அம்பேத்கர் அவர்களை மட்டும் தொழிலாளர் தினத்தன்று நினைவுகூற மறந்துவிடுகிறோம்
இது மறதியா அல்லது இருட்டடிப்பா என்று நமக்கு நாமே நேர்மையாக சுயபரிசோதனை செய்துகொள்ளுதல் அவசியம்
இந்தியாவில் பல கட்சிகள் வெற்றிகரமாக நிலைத்திருப்பதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்திருப்பது அந்த கட்சிகள் நடத்தும் தொழிற்சங்கங்கள் தான். அந்த தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் அந்த கட்சிகளின் நிரந்தர ஆதரவாளர்களாக இருப்பதே அந்த கட்சிகளின் பலம். அந்த கட்சிகளின் தொழிற்சங்கங்கள் நிலைத்திருப்பதற்கு காரணம் அம்பேத்கர் அவர்கள் ஏற்படுத்தி கொடுத்த தொழிலாளர் நல சட்டங்கள் மூலம் தொழிலாளர் உரிமைகளை வென்றெடுக்க அந்த தொழிற்சங்கங்கள் முற்படுவதால்.
ஆனால் ஏனோ தெரியவில்லை, தொழிற்சங்கங்களும் அதன் தாய் கட்சிகளும் அம்பேத்கரை மே தினத்தன்று கொண்டாடுவதில்லை. குறைந்தபட்சம் நினைவுகூறுவதுகூட இல்லை.
தொழிலாளர்களை பெரும்பான்மையாகக் கொண்ட அட்டவணை சமூகத்தில் பிறந்த காரணத்திற்காகவே அம்பேத்கர் கொண்டாடப்படுவதில்லை என்பதே கசப்பான உண்மை
காரணம் பெரும்பாலான தொழிற்சங்க தலைவர்களும், அதன் தாய் கட்சிகளின் தலைமைகளும் பார்ப்பனர்களாகவும் சூத்திரர்களாகவும் இருப்பதே காரணமாக இருக்கலாம்.
“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு”
இந்த குறள் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, இந்த விடயத்தில் பாபாசாஹிப் அம்பேத்கர் அவர்களை கொண்டாட மறந்த நமக்கு பொருந்தும்
மே 1 தொழிலாளர் தினத்தை கொண்டாடுவோம்
அம்பேத்கர் அவர்களை நினைவு கூறுவோம்

கருத்துகள் இல்லை: