சனி, 4 மே, 2019

ஓடிஷா ..10 ஆயிரம் கிராமங்கள் அடியோடு பாதிப்பு .. சூறையாடியது ‘பானி’ புயல்

ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன 10 ஆயிரம் கிராமங்கள் அடியோடு பாதிப்பு ஒடிசாவை சூறையாடியது ‘பானி’ புயல்தினத்தந்தி : ‘பானி’ புயல் நேற்று ஒடிசாவை சூறையாடியது. புயல் கரையை கடந்த போது பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன. கடலோர மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. புவனேசுவரம், சென்னை அருகே வங்க கடலில் உருவாகி, தமிழ்நாட்டை தாக்கும் என்ற பதற்றத்தை ஏற்படுத்திய ‘பானி’ புயல் திடீரென பாதை மாறியது. அது தீவிர புயலாக மாறி, வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து ஒடிசா நோக்கி சென்றது. இந்த புயல் நேற்று முன்தினம் ஆந்திராவில் கடலோர மாவட்டங்களில் பலத்த மழையை கொடுத்தது. பெரும் சூறாவளி காற்றும் வீசியது. நேற்றும் இது தொடர்ந்தது. ஸ்ரீகாகுளத்தில் அபாய எச்சரிக்கை (‘ரெட் அலர்ட்’) விடப்பட்டது. அங்கு 20 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு, 126 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர் 2014-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவை தாக்க வந்த புயல்களில், இது தீவிரமானது என வகைப்படுத்தப்பட்டது. ஒடிசா நோக்கி சென்ற ‘பானி’ புயலால் நேற்று அங்கு பலத்த மழை பெய்தது. பூரி, குர்தா, புவனேசுவரம், ஜெகத்சிங்பூர் என மாநிலம் முழுவதும் இடைவிடாது கன மழை பெய்தது. கடலோர மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.


மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் வீசிய பேய்க்காற்றால் ஆயிரக் கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல்லாயிரக்கணக் கான மின் கம்பங்கள் விழுந்தன. இதனால் மின் வினியோகம் பாதித்தது. வீடுகள் இருளில் மூழ்கின. சாலை போக்குவரத்து கடுமையாக பாதித்தது. 147 ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து புவனேசுவரத்தில் விமான சேவை நிறுத்தப்பட்டது.

வடக்கு, வட கிழக்கு நோக்கி நகர்ந்த ‘பானி’ புயல் கோபால்பூர்-சந்த்பாலி இடையே நேற்று காலை 8.30 மணி அளவில் கரையை கடந்தது.

14 மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்தன. சாலைகள், பாலங்கள், குடிசை வீடுகள் பலத்த சேதம் அடைந்தன. வீடுகளின் மேற்கூரைகள், தண்ணீர் தொட்டிகள் சூறாவளி காற்றில் பறந்தன. தகவல் தொடர்பு சேவைகள் முடங்கின.

புவனேசுவரத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானங்கள் காற்றோடு காற்றாக பறந்தன. இருப்பினும் அங்கு நோயாளிகள், ஊழியர்கள், மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

நலபானா பறவைகள் சரணாலயம், பாலுகந்தா வனவிலங்கு புகலிடம், நந்தன் கனன் உயிரியல் பூங்கா, பிடாரகனிகா வனவிலங்கு புகலிடம் ஆகியவையும் பானி புயலால் சின்னாபின்னமாகின.

கொட்டித்தீர்த்த கனமழையால் கடலோர மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

கஜபதி, கஞ்சம், குர்தா, பூரி, நய்கார், கட்டாக், ஜெகத்சிங்பூர், கேந்திரப்பாரா, ஜாஜ்பூர், பாத்ராக், பாலசோர், மயூர்பாஞ்ச், தேன்கனாய், கியோன்ஜார் நகரங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தன. இந்த நகரங்கள் அனைத்தும் வெள்ளத்தின் பிடியில் சிக்கின.

குறிப்பாக 9 மாவட்டங்களில் 10 ஆயிரம் கிராமங்களிலும், 52 நகரங்களிலும் ‘பானி’ புயல் ருத்ரதாண்டவமாடி விட்டது. அங்கு அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் மூடிக்கிடந்தன. கடைகளும் மூடப்பட்டிருந்தன. இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதித்தது.

ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வந்தார். நிவாரண பணிகளை முடுக்கி விட்டார்.

பூரி மாவட்டத்தில் ஒரு இளைஞர் மரம் விழுந்து பலி ஆனார். நயகார் மாவட்டத்தில் ஒரு பெண் தண்ணீர் எடுக்கச்சென்றபோது பறந்து வந்த வீட்டின் கூரை விழுந்து உயிரிழந்தார். கேந்திரப்பாரா மாவட்டத்தில் 65 வயதான மூதாட்டி புயல் நிவாரண தங்கும் இடத்தில் இருந்தபோது மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

ஒடிசாவில் புயல் மழைக்கு மொத்தம் 8 பேர் பலியாகி உள்ளனர்.

புயல் தொடர்பான சம்பவங்களில் சிக்கி படுகாயம் அடைந்த பலரும் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

மீட்புப்பணியில் தேசிய பேரிடர் மீட்புப்படையின் 28 குழுக்கள், தேசிய பேரிடர் மீட்பு அதிரடி படையின் 20 குழுக்கள், மாநில தீயணைப்பு படையின் 525 குழுக்கள் மீட்பு, நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டன.

நேற்று முன்தினம் காலை தொடங்கி நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் 11½ லட்சம் மக்கள் ‘பானி’ புயல் ஆபத்து பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்கள் அரசின் பல்நோக்கு தங்கும் இடங்களில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டனர். அவர்களுக்காக 5 ஆயிரம் தற்காலிக சமை யலறைகள் உருவாக்கப்பட்டு, உணவு சமைத்து பரிமாறப்பட்டது.

ஒடிசாவில் கரையை கடந்த ‘பானி’ புயல் வங்காள தேசத்தை நோக்கி சென்றது. நள்ளிரவில் இருந்து அங்கு மழை பெய்ய தொடங்கி உள்ளது. சூறாவளி காற்றும் வீசி வருகிறது.

மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி 48 மணி நேரத்துக்கு தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்துள்ளார். கொல்கத்தா விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. கொல்கத்தா-சென்னை மார்க்கத்தில் 220-க்கும் மேற்பட்ட ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தாவில் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அலுவலகங்களில் இருந்தவர்கள் பிற் பகலில் வீடு திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

ராஜஸ்தானில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, “இந்த நாடும், மத்திய அரசும் உங்களுடன் இருக்கும் என்ற உறுதியை தருகிறேன்” என உருக்கமுடன் குறிப்பிட்டார்.

புயல் பாதித்த மாநிலங்களில் நிவாரண பணிகளுக்காக ரூ.1,000 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

‘பானி’ என்றால் படமெடுத்து ஆடும் பாம்பு

புயல்களுக்கு பெயர் சூட்டப்படுவது வழக்கம். அந்த வகையில் வங்க கடலில் உருவாகி நேற்று காலை ஒடிசாவை தாக்கிய புயலுக்கு ‘பானி’ என்று பெயர் சூட்டப்பட்டு இருந்தது. இது இந்தியாவின் அண்டை நாடான வங்காள தேசம் சூட்டிய பெயர் ஆகும்.

அந்த நாட்டு மொழியில் (வங்காளி) ‘பானி’ என்றால் படமெடுத்து ஆடும் பாம்பு என்று அர்த்தம்.

நல்ல பாம்பு படமெடுத்து ஆடுவது போன்றே, ‘பானி’ புயல் ஒடிசாவில் ருத்ரதாண்டவம் ஆடி பலத்த சேதத்தை ஏற்படுத்திவிட்டது

கருத்துகள் இல்லை: