திங்கள், 31 டிசம்பர், 2018

குணமா சொல்லோணும் Vs சங்கம் முக்கியமில்லை சாப்பாடுதான் முக்கியம் ... 2018 டாப் டிரெண்ட் விடியோக்கள்


டாப் டிரெண்ட் 2018: ஹிட் அடித்த வீடியோக்கள்!மின்னம்பலம் : சமூக வலைதளங்களின் ஆதிக்கம் அதிகமான பின் ஒவ்வொரு ஆண்டும் சமூக, அரசியல் பிரச்சினைகளை மக்கள் நினைவில் வைத்துக்கொள்வது அந்தப் பிரச்சினையை ஒட்டி வெளியான மீம்ஸ், ட்ரோல் வீடியோக்கள் மூலமாகத் தான். அதோடு முகம் தெரியாத பல மனிதர்களின் வீடியோக்களும் ஒரே நாளில் விவாதத்தைக் கிளப்பின. அந்த வகையில் இந்த ஆண்டு டிரெண்ட் ஆன சில வீடியோக்களைப் பற்றிப் பார்க்கலாம்.
அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரின் பாடல்கள், ராகுல் காந்தியின் கட்டிப்பிடி வைத்தியம், தமிழிசையின் வெற்றிகரமான தோல்வி, எச்.ராஜாவின் ஹைகோர்ட் மேட்டர் என பல விஷயங்கள் டிரெண்ட் ஆகியிருந்தது. இருப்பினும் ஏற்கெனவே புகழ்பெற்ற இவர்களை விடுத்துப் புகழ் வெளிச்சம் அதிகம் விழாத நபர்களைக் கணக்கில் கொள்ளலாம்.

பிரியா வாரியர்
மலையாளத்தில் வெளியாக உள்ள ஒரு அடார் லவ் படத்தின் ஒரு பாடலில் பிரியா வாரியர் என்ற அறிமுக நடிகை கண் அடித்த வீடியோ ஒன்று ஒரே நாளில் டிரெண்ட் ஆனது. மொத்த இந்தியத் திரையுலகத்தையே யார் இந்த பொண்ணு என ஆச்சர்யமாகப் பார்க்க வைத்தார் பிரியா வாரியர்.

பிஜிலி ரமேஷ்
யூ டியூப் சேனல் ஒன்றிற்காகச் சாலையில் சென்று கொண்டிருந்த பிஜிலி ரமேஷ் என்பவரைப் பிடித்து அவரது வெகுளித்தனமான செய்கைகளையும் உடல்மொழியையும் வைத்து நகைச்சுவை என்ற பெயரில் வீடியோ எடுத்தது சமூகவலைதளங்களில் அதிகமாகப் பரவியது. தனி மனித சுதந்திரத்திற்கு எதிரானது என அது குறித்து விமர்சனங்களும் வந்தன. தன்னை ரஜினி ரசிகன் என்று அடையாளப்படுத்திக் கொண்ட பிஜிலி ரமேஷை அதைத் தொடர்ந்து பல ஊடகங்கள் நேர்காணல் செய்தன. நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தின் புரொமோஷன் பாடலில் அவர் நடிக்கவும் செய்தார்.
குணமா சொல்லச் சொன்ன குழந்தை
நான்கு வயது மதிக்கத்தக்க சிறுமி அவரது அம்மாவிடம் பேசும் வீடியோ மூலம் ‘குணமா வாயில சொல்லணும்’ என்ற வார்த்தை பிரபலமானது. ‘தப்பு பண்ணா அடிக்காம குணமா வாயில சொல்லணும்’ என்று கை அசைவுகளுடன் அழுகையை அடக்கிய படி அந்த சிறுமி பேசிய வீடியோ அதிகமாகப் பரவியது.
விஜய்யின் போர்ப்படை தளபதி?
சர்கார் படத்திற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்ததும் அதன்பின் காட்சிகள் சில நீக்கப்பட்டதும் நடந்துகொண்டிருக்கும் போதே விஜய் ரசிகர் எனத் தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட ஒரு சிறுவன் விஜய்யின் அருமை, பெருமைகளைப் பட்டியலிட்டதோடு ஆபாச வார்த்தைகளால் பலரை திட்டும் வீடியோ வைரலானது. இதே விவகாரத்தில் அரிவாளைக் காட்டி மிரட்டிய இருவர் மேல் நடவடிக்கை எடுத்தது போல் இந்தச் சிறுவன் மேல் நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை.
‘மெட்டி ஒலி’ கோபி
சமூக வலைதளங்களைப் பொறுத்தவரை ஒரு விஷயம் தற்போது எதற்காகப் பிரபலமாகிறது என்ற காரணத்தை பல நேரங்களில் உறுதியாகக் கூற முடியாது. சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் தொடர் நிறைவடைந்து பல மாதங்கள் ஆன நிலையில் திடீரென அந்த தொடரில் திருமுருகன் நடித்த காட்சி பிரபலமானது. “அவன் கேட்டபடி கையெழுத்துப் போட்டு தான் ஆகணும்” என்று சோகமாக திருமுருகன் பேசுவதும் திடீரென “போடக் கூடாது. கையெழுத்துப் போடக்கூடாது.. நல்லா இருந்த குடும்பம் இது” என மாற்றிப் பேசுவதும் வைரலானது. அந்தக் காட்சி டப் மேஷ், டிக் டாக், மீம்ஸ் என இப்போதும் ஹிட் அடித்து வருகிறது.
சங்கம் வேணாம் சாப்பாடு வேணும்
2018ஆம் ஆண்டு நிறைவடையும் போது சாப்பாடு தான் முக்கியம் என ஒரு குழந்தை டிரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. சங்கத்தில் சேர்ந்துகொள்ள அப்பாவிடம் போய் ரெண்டாயிரம் வாங்கி வரச் செல்லும் குழந்தை சங்கம் முக்கியமா சாப்பாடு முக்கியமா என்று கேட்கும் போது சாப்பாடு தான் முக்கியம் என அழுகையை அடக்கிக் கொண்டு சொல்லும் அந்த வீடியோ தற்போது ஃபேஸ்புக், ட்விட்டர் டைம்லைன்களில் வரிசையாக வந்து செல்கிறது.

கருத்துகள் இல்லை: