vikatan.com -sahayaraj-m":`33 பட்ட மேற்படிப்புகள் அரசு வேலைவாய்ப்புக்கான தகுதியற்றவை எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் ஒரு லட்சத்துக்கும் கூடுதலான மாணவர்கள் இப்படிப்புகளைப் படித்து பட்டம் பெற்றிருப்பவர்கள் பாதிக்கப்படுவார்கள்'' என்று பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி கவலை தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் இந்த நடவடிக்கை அபத்தமானது. பல்கலைக்கழகங்கள் செய்த தவற்றுக்காக அவற்றில் படித்த மாணவர்களுக்குத் தண்டனை வழங்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. 33 வகையான புதியப் படிப்புகளுக்கு பாடத்திட்டத்தை வகுத்தது பல்கலைக்கழகங்கள்தான். இதற்காகவே, அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பாடத்திட்டக் குழுக்கள் உள்ளன. அவை வகுத்துக் கொடுக்கும் பாடத்திட்டத்தைக் கல்வி நிலைக்குழுக்கள் ஆய்வு செய்து ஒப்புதல் அளித்த பிறகுதான் புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும். பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டக் குழுவும், கல்வி நிலைக்குழுவும்தான் புதிய படிப்புக்கான பாடத்திட்டம் உரிய வகையில் தயாரிக்கப்படுவதை உறுதி செய்திருக்க வேண்டும். அக்குழுக்கள் தங்கள் பணியை சரியாகச் செய்யாததின் விளைவுதான் 33 பட்ட மேற்படிப்புகள் அரசு வேலைவாய்ப்புக்கான தகுதியற்றவை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பல்கலைக்கழகங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்.
பல்கலைக்கழகங்கள் அறிமுகப்படுத்திய படிப்புகளில் சேர்ந்ததைத் தவிர வேறு எந்தத் தவற்றையும் மாணவர்கள் செய்யவில்லை. அரசு பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் அப்படிப்புகளை வழங்கும்போது அவற்றில் மாணவர்கள் சேருவது இயல்பான ஒன்றுதான். இந்தப் படிப்புகளில் ஒவ்வோர் ஆண்டும் குறைந்தது 25,000 மாணவர்கள் சேருகின்றனர். இதுவரை ஒரு லட்சத்துக்கும் கூடுதலான மாணவர்கள் இப்படிப்புகளைப் படித்து பட்டம் பெற்றிருப்பார்கள். இத்தகைய சூழலில் இந்தப் படிப்புகள் அரசுப் பணிக்கு தகுதியற்றவை என்று அறிவித்திருப்பது மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி ஆகும். இப்படிப்புகள் அரசுப் பணிக்கு தகுதியற்றவை என்று அறிவிக்கப்பட்டிருப்பதால், அதையே காரணம் காட்டி தனியார் நிறுவனங்களும் இப்படிப்பு முடித்தவர்களை நிராகரிக்கக்கூடும். இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுவர்.
எனவே, 2018-19-ம் கல்வியாண்டு வரை இப்படிப்புகளில் சேர்ந்த மாணவர்கள் பெற்ற பட்டங்கள் எம்.எஸ்ஸி கணினி அறிவியல், எம்.காம் ஆகியவற்றுக்கு இணையானவை; அரசு வேலைக்குத் தகுதியானவை என்று அறிவிக்க வேண்டும். அடுத்த கல்வியாண்டு முதல் இப்படிப்புகளைத் தடை செய்ய வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக