திங்கள், 27 ஆகஸ்ட், 2018

மேற்குத் தொடர்ச்சி மலை ... தவிர்க்கக் கூடாத தமிழ் சினிமா!!

Ravi Palette " தொடர்ச்சி மலை திரைப்படம் பார்த்து இரண்டு நாளாகிவிட்டது.
இன்னும் அதன் தாக்கத்திலிருந்து மீள முடியாமல் அதன் காட்சியமைப்புகளும், நுணுக்கமாகச் செதுக்கப்பட்ட கதாபாத்திரச் சித்தரிப்புகளும், நுண்ணிய உணர்வுகளும், அற்புதமான நிலக்காட்சிகளும், மனிதச் சூழலின் நிதர்சனமும் என்னைச் சுழற்றியடித்துக்கொண்டேயிருக்கிறது.
மிகையுணர்வற்ற அசலான தமிழ்த் திரைப்படம் தந்த லெனின் பாரதி திரைத்துறைக்குக் கிடைத்த புத்தொளி.
பேருணர்வொன்றின் ரசவாதத்தை உணர்ந்து அனுபவிக்கவும், பிரச்சாரமற்ற நுண்ணிய அரசியல் திரைப்படத்தைக் கொண்டாடி, ஒரு நல்ல கலைப்படைப்புக்கு மரியாதை செய்யுங்கள். ஆகச்சிறந்த மேற்குத் தொடர்ச்சி மலையைத் தவறவிடாதீர்கள்.

NDTV :"ஏந்தம்பி, எப்பிடி இந்த மலைல தினமும் ஏறி எறங்குறீங்க?"

"என்னணே பண்றது எங்க பொழப்பு அப்பிடி!" இந்த வசனமும், படத்தின் முக்கியமான இடத்தில் வரும் அந்தரத்தில் தொங்குதம்மா பாடலும் போதும் படம் எதை சொல்ல வருகிறது எனப் புரிந்துகொள்ள. படத்தின் இறுதியில் உலகமெங்கும் குறுக்கும் நெடுக்குமாக விரவிக்கிடக்கும் நிலமற்ற உழைக்கும் மக்களுக்கு சமர்ப்பணம் செய்யப்படுகிறது படம். ஆரம்பத்திலிருந்து அது காட்ட நினைப்பதும், சொல்லப் பதைபதைப்பதும் அதைத்தான். முதலில் நன்றி சொல்ல வேண்டியது, இப்படத்தை தயாரிக்க மனமுவந்து வந்த விஜய் சேதுபதிக்குதான். தமிழில் மிக முக்கியமான சினிமாவைத் தயாரித்ததற்கு, வாழ்த்துகளும் அன்பும்.


ரங்கு, வனகாளி, சாக்கோ, பொன்னம்மா, கங்காணி, கிறுக்குக் கிழவி, கேத்ரா, ஈஸ்வரி, ரவி, ஊத்து ராசா, அடிவாரம் பாக்கியம், சுருளி என படம் முழுக்க எத்தனை எத்தனை முகங்கள், அவர்களுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் கதைகள் எல்லாமும் நம்மையும் கைபிடித்து மேற்குத் தொடர்ச்சி மலையின் உச்சிக்கும், அடிவாரத்திற்குமாய் பயணிக்கச் செய்கிறது. வழக்கமான படமாக இருந்தால் இன்னது கதை, இன்னது திரைக்கதை, இன்னது வேலைக்காகவில்லை என எதையாவது சொல்ல வேண்டியிருக்கும். இது அப்படியல்ல என்பது மிகப் பெரிய இளைப்பாறலாக இருக்கிறது. அப்படியான படம் ஒன்றை பார்ப்பது, பார்ப்பது மட்டுமல்ல நல்ல சினிமாவுடனான சந்திப்பு என்றுதான் சொல்வேன். ரங்கசாமிக்கு (ஆண்டனி) தான் வசிக்கும் ஊரில் தனக்கு என சொந்தமாக இடம்வேண்டும் என்பதற்காக உழைக்கிறான், எங்ககாலத்துல இந்நேரத்துக்கு நாலு நட போயிட்டு வந்திருப்போம்டா என சுமை தூக்கிச் செல்லும் வனகாளி (பாண்டி) கதாபாத்திரம் அத்தனை சுவாரஸ்யமான ஒன்று. அவர் சொல்லும் ஒரு கதையில் இருக்கும் பெருமிதம், பின்பு ஓரிடத்தில் "எல்லாப்பயலும் மல மாதிரி நம்புனேன், மல மாதிரி நம்புனேன்னு சொல்லுவாய்ங்க, நான் இந்த மலயதான நம்புனேன். என்னையவே ஏச்சுப்புட்டீள்ல" எனக் கலங்குவதுமாக மனதில் நின்றுவிடுகிறார். சகாவு சாக்கோ (அபு வளயாங்குலம்) பேசும் உரிமைகள், அதைத் தட்டிப் பறிக்க நினைக்கும் ரவியின் (ஆறுபாலா) அதிகாரம், நன்றியாய் இருப்பது மாதிரியே மக்களை சுரண்டும் லோகு, அப்பனுக்கு பட்ட கடனை மகனிடமாவது அளித்து நன்றிகாட்ட நினைக்கும் மீரான் என எத்தனை வித மனிதர்கள்.

ரங்கு என்கிற ரங்கசாமியின் கதாபாத்திரத்தை மையமாக வைத்துப் பார்த்தால் ஒரு கதை பிடிபட வாய்ப்பு உண்டு. ஆனால், படம் சொல்ல நினைப்பது எந்த கதையையும் அல்ல. ஏற்ற, இறக்கத்தில் தோளிலும், சமவெளியில் தலையிலும் காலம் முழுக்க வாழ்க்கையிலும் அவர்கள் தூக்கி சுமந்தே ஆகவேண்டிய சுமைகள் பற்றியும், அவர்களின் அறியாமை, சுற்றி நடக்கும் வியாபாரம், அரசியல் பேச நினைக்கிறது படம்.  நாங்க எல்லாம் எவ்வளவு பாவம் தெரியுமா என்பதாக இல்லாமல், விளிம்பு நிலை மனிதர்கள், கடைநிலை தொழிலாளி என தடிமனான வார்த்தை ஏதும் இல்லாமலே அவற்றைப் புரிய வைப்பது சவாலானது. அவர்களின் இயல்புக்கு நுழைய முற்பட்டதும், சந்தோஷம், சேட்டைகள், எல்லாவற்றையும் கலந்தே சொன்னதும் படத்தின் வலிமை. எளிமையான வசனங்கள் மூலம் அந்த வழக்கு சொற்களையும் அனுமதித்தது யாரின் ஏற்பாடு எனத் தெரியவில்லை. ஊருக்கு ஒருஎட்டு போய் வந்தது போல உணர்வைத் தருகிறது அவர்களின் உரையாடல். வசனகர்த்தா ராசி தங்கதுரைக்கு வாழ்த்துகள்.

படத்தின் நிறைய கதாபாத்திரங்கள் அந்த மண்ணுக்குறியவர்களே என்பதின் அழுத்தம் கதைக்குப் பெரும் வலிமை. எல்லா கதாபாத்திரங்களும் தங்கள் பங்கை நிறைவாக செய்திருக்கிறார்கள். எப்போதும் மென்சோகம் படிந்த முகத்துடன் வந்து, "அந்தா தெரியிது பார் அதான்டா நம்ம நிலம்" என சொல்லும் போது ரங்குவாக நடித்திருக்கும் ஆண்டனியின் முகத்தில் காணும் ஒளியை நல்ல நடிப்பு என்று மட்டும் சொல்லி குறுக்கிவிட முடியாது. அது போலவேதான் ஆறுபாலாவோ, காயத்ரி கிருஷ்ணனோ, வனகாளியாக வந்து மிரட்டும் பாண்டியோ, இப்போ என்னை கிண்டல் பண்ணுங்கடா என்று கெஞ்சும் கங்காணியோ எல்லோரின் நடிப்பும்.

மலையின் எழுச்சியோ, மழையின் வீழ்ச்சியோ, அந்த மனிதர்களின் வாழ்வியலும் அதோடு சார்ந்ததாகத்தான் இருந்தது. அது போலவே தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு உள்ளுக்குள் கலந்திருந்ததை உணர முடிந்தது. அவர்களின் குதூகலமும், வாழ்க்கை பிரட்டும் துன்பமும், நம்பிக்கையும் இசையாக வெளிப்பட்டதில், பல இடங்களில் மௌனத்தை ஒலிக்கவிட்டதில் என கதையுடன் ஒன்றியிருக்கிறது இளையராஜாவின் இசை. குறிப்பாய் அந்தரத்தில் தொங்குதம்மா பாடல் ஒலிக்கும் இடம் வேறுவகை உணர்வு. தேங்கல் ஏதும் இல்லாமல் காசிவிஸ்வநாதனின் படத்தொகுப்பும், படத்தின் உள்ளே எந்த துருத்தலும் இல்லாத ஜெயசந்திரனின் கலை இயக்கமும் வியப்புதான்.

எந்த விதத்திலும் வணிக காரணிகளை உள்ளே சேர்க்காமல், எடுத்துக் கொண்டதை மட்டுமே சொல்லத் துணிந்த இயக்குநர் லெனின் பாரதிக்கு பெரிய நன்றிகளும், வாழ்த்துகளும். பார்த்துக் கொண்டிருப்பதை உணர வைப்பது எல்லோருக்கும் கை கூடிவிடாது. இதில் அது நிகழ்கிறது. நிலத்துக்காக போராடும் ரங்கு முடிவில் சென்று சேரும் இடம், மலையே வாழ்க்கை என வாழும் வனகாளியின் முடிவும் மனதுக்குள் கனம் சேர்க்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் சங்கிலித் தொடர் போன்ற பகுதிகள் எல்லாவற்றுக்குமான பிணைப்பு மனிதர்கள். மேம்போக்கான பார்வையில் இடைவேளைக்குப் பிறகான காட்சிகளில் படம் எங்கோ தொடங்கி விலகுவதாக தோன்றலாம், அந்த வாழ்வியல் அந்நியமாகக் கூட படலாம்.

ஆனால், அவர்களின் உலகை, அவர்களின் பாதிப்புகளை, வாழ்வது உச்சியே என்றாலும் கால் நழுவும் பள்ளத்திற்கு அருகான ஜீவிதம்தான் அவர்களது எனக் காட்டுவதே படம். யாருடைய வாழ்வு என்ன ஆகிறது என எதையும் கணக்கில் கொள்ளாத முரட்டுத்தனமான திட்டங்கள் எதற்கு?, மக்களின் வாழ்வாதாரத்தையே பறிப்பது எப்படி மேம்பாடாகும்? எனவும் கேள்வியை முன் வைக்கிறது படம். சுருக்கமாக சொல்வதென்றால் தவிர்க்கக் கூடாத தமிழ் சினிமா இது

கருத்துகள் இல்லை: