திங்கள், 19 டிசம்பர், 2016

இதயதெய்வம் புரட்சி சின்னம்மா அவர்கள் பொதுச் செயலாளராகவும், முதலமைச்சராகவும்...எடப்பாடி+செங்க்ஸ்....

மின்னம்பலம்.காம்: அதிமுக பொதுச் செயலாளராகவும் தமிழக முதலமைச்சராகவும் சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று பல்வேறு மாவட்ட அதிமுக செயலாளர்கள், நிர்வாகிகள், தமிழ் அமைப்பு பிரதிநிதிகள், கேரளா மாநில அதிமுக நிர்வாகிகள் ஆகியோர் சசிகலாவை இன்று நேரில் சந்தித்து தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பிறகு, அதிமுக பொதுச் செயலாளராக வேண்டும் என்று கூறிவந்த அதிமுக நிர்வாகிகள் தற்போது, அதிமுக பொதுச் செயலாளராக மட்டுமின்றி, தமிழக முதலமைச்சராகவும் சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று அதிமுக-வின் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் அமைச்சர்களும் தங்கள் ஆதரவைத் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றிய நகலை அவரிடம் வழங்கி வருகின்றனர்.

இதையடுத்து, இன்று காலை சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதியில் பல்வேறு மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் ஆயிரக்கணக்கான அதிமுக-வினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அப்போது, சேலம் புறநகர் மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்துப் பேசியபோது கூறுகையில், ‘புரட்சித் தலைவி ஜெயலலிதா தமிழகத்தில் 6 முறை முதல்வராகப் பொறுப்பேற்று, தமிழகத்தில் திறமையாக ஆட்சி செய்து கோடானுகோடி மக்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்தவர். அவரது மறைவு தமிழகத்துக்கு ஏற்பட்ட பேரிப்பழாகும். இந்தச் சூழ்நிலையில், தமிழகத்தை கட்டிக் காத்திடவும் கழகத்தைக் காப்பாற்றிடவும் பெருமதிப்புக்குரிய சின்னம்மா கழகத்தின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்க வேண்டும். மேலும் முதல்வர் ஜெயலலிதா விட்டுச்சென்ற பணிகளை சிறப்பாகச் செய்திடவும் தமிழகத்தை முன்னேற்றி, நல்லாட்சி தந்திடவும் தமிழகத்தின் முதல்வராக சின்னம்மா பொறுப்பேற்க வேண்டும் என்று, சேலம் மாவட்டத்தின் சார்பிலும், சேலம் புறநகர் மாவட்டத்தின் சார்பிலும் தீர்மானம் நிறைவேற்றி அதைக் கொண்டுவந்துள்ளோம். அதை ஜெயலலிதா சமாதியில் வைத்து வணங்கி எடுத்துச் சென்று சின்னம்மாவிடம் வழங்கவிருப்பதாக அவர் கூறினார்.
அதைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘கடந்த 1998ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று வாஜ்பாயை அரியணையில் அமர்த்திய புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் தோழியாக, சகோதரியாக இருந்து கழகத்தின் நடவடிக்கையைக் கவனித்துவந்த சின்னம்மா, ஜெயலலிதாவுக்குப் பிறகு, கழகத்தை காப்பாற்றுவதற்காக கழகத்தின் பொதுச் செயலாளராகவும், தமிழகத்தையும் தமிழக மக்களைக் காப்பாற்றவும் அவர் முதலமைச்சராகவும் பதவியேற்க வேண்டும்’ என்று கூறினார்.
விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளரும் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி பேசியபோது, மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மாவின் நெருங்கிய தோழியுமாகவும், அவருக்குத் தாயாகவும் இருந்து கண்ணின் இமைபோல் இதயதெய்வம் அம்மாவை கவனித்துவந்த சின்னம்மா அவர்கள், 1 1/2 கோடி அதிமுக உறுப்பினர்களின் நெஞ்சங்களில் குடிகொண்டுள்ள அவர், கழகத்தை கட்டிக் காப்பாற்றுவதற்காக கழகத்தின் பொதுச் செயலாளராகவும், தமிழகத்தின் முதல்வராகவும் பொறுப்பேற்க வேண்டும்’ என்றார்.
திருவள்ளூர் மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான சிறுணியம் பலராமன் கூறுகையில், ‘புரட்சித்தலைவி அம்மாவின் நம்பிக்கைக்குரியவராகவும், உற்ற தோழியாகவும் இருந்த பெருமதிப்புக்குரிய சின்னம்மா கழகத்தின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்க வேண்டும். மேலும் முதல்வர் ஜெயலலிதா விட்டுச்சென்ற சிறப்பான பணிகளை தொடர்ந்து செய்திடவும், தமிழகத்தின் முதல்வராக சின்னம்மா பொறுப்பேற்க வேண்டும்’ என்றார்.
கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான சம்பத் பேசியதாவது, ‘அதிமுக-வின் நிரந்தர பொதுச் செயலாளராக இருந்த புரட்சித்தலைவியின் மறைவுக்குப் பிறகு, கழகத்தை கட்டிக் காப்பாற்றிடவும் 1 1/2 கோடி அதிமுக உறுப்பினர்களை பாதுகாக்கவும் வேண்டி சின்னம்மா அவர்கள் கழகத்தின் பொதுச் செயலாளராகவும், தமிழகத்தின் முதலமைச்சராகவும் பொறுப்பேற்க வேண்டும்’ என்று கூறினார்.
தர்மபுரி மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான கே.பி.அன்பழகன் கூறுகையில், ‘புரட்சித்தலைவி அம்மா முதல்வர் ஜெயலலிதா விட்டுச் சென்ற சிறப்பான பணிகளை தொடர்ந்து செய்திட கழகத்தின் பொதுச் செயலாளராகவும் தமிழகத்தின் முதல்வராகவும் சின்னம்மா பொறுப்பேற்க வேண்டும்’ என்று கூறினார்.
மேலும் திண்டுக்கல் மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசன், சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாஜலம் எம்.எல்.ஏ., ஈரோடு புறநகர் மாவட்டச் செயலாளர் கருப்பண்ணன் ஆகியோர் ஜெயலலிதா சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு போயஸ் தோட்டத்துக்குச் சென்று அதிமுக பொதுச் செயலாளராகவும், தமிழக முதலமைச்சராகவும் சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று ஆதரவு தெரிவித்தனர்.
அதிமுக வழக்கறிஞர் அணியின் சார்பில் நவநீதம் கிருஷ்ணன் எம்.பி., கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் அருண்மொழித்தேவன் எம்.பி., தமிழ் ஹிந்து நாளிதழின் ஆசிரியர் அசோகன், ராணுவ பி.ஆர்.ஓ. ஏசுதேவன், நியூஸ் 18 நிர்வாகி குணசேகரன், சத்யம் டி.வி. நிர்வாக இயக்குநர் ஐசக் லிவிங்ஸ்டன், 37 தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த பல்வேறு பிரதிநிதிகள், கேரள மாநில அதிமுக நிர்வாகிகள், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் உள்பட 12 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பதிவாளர்கள் மற்றும் திருச்சி, வேலூர் மறை மாவட்ட அதிபர்கள் ஆகியோரும் அதிமுக பொதுச் செயலாளராகவும் தமிழக முதலமைச்சராகவும் சின்னம்மா பொறுப்பேற்க வேண்டும் என்று தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை: