செவ்வாய், 28 ஏப்ரல், 2015

சொத்துக் குவிப்பு வழக்கு – இறுகும் கயிறு.savukkuonline

28TH_JAYA-5P9_2129324f
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் பவானி சிங்கின் நியமனம் சரியா இல்லையா என்பதை முடிவு செய்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, பவானி சிங்கின் நியமனம் செல்லாது என்று தீர்ப்பளித்துள்ளது.   அந்தத் தீர்ப்பிலேயே, இந்த வழக்கை தொடுத்த திமுக பொதுச் செயலர் பேராசிரியர் அன்பழகனின் எழுத்து பூர்வமான வாதங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும், உத்தரவிட்ள்ளது.     அந்த வாதங்களை கணக்கில் கொண்டு, நன்கு பரிசீலித்த பிறகே தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு.

இந்த உத்தரவின்படி, இன்று கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளர் முன்பாக, அன்பழகன் சார்பில், இன்று எழுத்துபூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன.  அதன் சாராம்சம் பின்வருமாறு.
இந்த வழக்கில் ஜெயலலிதா மற்றும் அவரது தரப்பு வாதங்களாக பின்வருபவை எடுத்து வைக்கப்பட்டன.
1) வளரப்பு மகன் திருமண செலவுகள் சரி வர கணக்கிடப்படவில்லை.
2)    கட்டுமான செலவுகள் மிகைப்படுத்திக் காட்டப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

3) குற்றவாளிகளுக்கும், நிறுவனங்களுக்கும் சம்பந்தம் இல்லை.  அந்த நிறுவனங்கள் தனியானவை.
4)  நமது எம்.ஜி ஆர் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட தொகைகள் அனைத்தும், நமது எம்ஜிஆர் நாளேடு வாங்குவதற்காக தொடங்கப்பட்ட திட்டத்தின்படி செலுத்தப்பட்டவை.  அந்தத் தொகைக்கும் குற்றவாளிகளுக்கும் தொடர்பில்லை.
5)  குற்றவாளிகள் தாக்கல் செய்துள்ள வருமான வரிக் கணக்கை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
6) குற்றவாளிகள் இடையே கூட்டுச் சதி என்பது நீரூபிக்கப்படவில்லை.
anbalagan
திருமணம்
திருமணத்துக்காக 94 லட்ச ரூபாய் தன்னுடைய கணக்கிலிருந்து செலவு செய்ததாக, ஒரு பாஸ்புக்கின் ஜெராக்ஸ்  நகலை பெண்ணுடைய அண்ணன் ராம்குமார் தாக்கல் செய்துள்ளார்.   அந்த நகலில் வங்கியின் கிளை கூட இல்லை. மேலும், அந்த ஜெராக்ஸ் நகல் நீதிமன்றத்தில் சான்றாக கருத முடியாது.   அதன் அசல் ஆவணத்தை அவர் இறுதி வரை சமர்ப்பிக்கவேயில்லை.  புலனாய்வு அதிகாரியால் மூன்று முறை விசாரிக்கப்பட்டும், ராம்குமார் அசல் வங்கிக் கணக்குப் புத்தகத்தை சமர்ப்பிக்கவில்லை என்பதை ஒப்புக் கொண்டுள்ளார். விசாரணை நீதிபதி, இந்த ஆவணத்தையும், ராம்குமாரின் சாட்சியத்தையும் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார்.   ராம்குமாரின் வங்கி கணக்கில் இருந்ததாக சொல்லப்படும் 94 லட்சமும் எப்படி வந்தது என்பதற்கான விளக்கத்தை அளிக்க ராம்குமார் தவறி விட்டார்.
மேலும், திருமணத்துக்கான செலவை பெண் வீட்டார் ஏற்றுக் கொண்டனர் என்ற கூற்றே, ஜெயலலிதா தாக்கல் செய்த வருமான வரிக் கணக்கில் அடிபட்டுப் போகிறது.  ஜெயலலிதா தனது வருமான வரிக் கணக்கில் ரூபாய் 29, 92, 761/- திருமணச் செலவுக்காக செலவு செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.   திருமணத்துக்கு நாங்கள் எங்கள் பங்குக்காக செலவு செய்தோம் என்று ஏராளமான அதிமுகவினர் கொடுத்துள்ள வாக்குமூலத்துக்கும், ராம்குமாரின் வாக்குமூலத்துக்கும் ஏராளமான முரண்பாடுகள் உள்ளன.   ஜெயலலிதாவின் உதவிச் செயலராக இருந்த அரசு சாட்சியான ஜவஹர், திருமணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார்.    இந்த ஏற்பாடுகளை செய்த அவர் ஒரு இடத்தில் கூட, செலவுகளை ராம்குமார் ஏற்றுக் கொண்டார் என்று கூறவில்லை.
மேலும் திருமணத்துக்கான அழைப்பிதழ்கள் அனைத்தும் ஜெயலலிதாவால் அனுப்பப்பட்டுள்ளது.    முக்கிய பிரமுகர்கள் அனைவருக்கும், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்கும் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.   ஆனால் ராம்குமார் எந்த இடத்திலும், திருமணத்துக்கான அழைப்பிதழ் வழங்கும் வேலையையோ, தங்கும் இடம் தொடர்பான வேலையையோ செய்தேன் என்று கூறவில்லை.
வளர்ப்பு மகன் திருமணம் குறித்து, நீதிபதி குன்ஹா தனது தீர்ப்பில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.  “அதிமுக தொண்டர்களில் பலர் இந்நீதிமன்றத்தின் முன் வந்து, திருமணத்துக்கான அவர்கள்  60 லட்சம் செலவு செய்ததாகவும், 30 ஆயிரம் தொண்டர்களுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்ததாகவும் கூறுகின்றனர்.  அரசு தரப்பு இத்திருமணத்துக்காக 6.45 கோடி செலவு செய்ததாக கூறுகிறது.  இதில் 5.21 கோடி, திருமண ஏற்பாடுகளுக்காக மட்டும் செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தத் தொகை மிக அதிகமாக தெரிந்லும், ஏறக்குறைய 50 ஆயிரம் பேர் இத்திருமணத்திற்கு வந்துள்ளனர்.    பந்தலுக்காக மட்டும் 60 லட்சம் செலவிடப்பட்டது என்பதை ஏற்றுக் கொண்டாலும், குறைந்தது அது போல மூன்று மடங்கு செலவிடப்பட்டிருக்க வேண்டும். ஏராளமான சமையல்காரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.    உணவுக்காக மட்டும் குறைந்தது 40 முதல் 50 லட்சம் வரை செலவிடப்பட்டிருக்கும் திருமணத்துக்கு வந்தவர்கள் அமர நாற்காலிகள், முக்கிய பிரமுகர்கள் அமர சிறப்பு நாற்காலிகள், பட்டாசுகள், கேரளாவிலிருந்து வரவழைக்கப்பட்ட யானைகள், திருமணத்துக்குப் பின் நாளிதழ்களில் நன்றி அறிவிப்பு விளம்பரங்கள், இவை அனைத்தையும் கணக்கிடுகையில், குறைந்தது 3 கோடி ரூபாய் இத்திருமணத்துக்காக செலவிடப்பட்டிருக்கும் என்று தெரிய வருகிறது.    இதன் காரணமாக, இந்த 3 கோடி ரூபாயை ஜெயலலிதாவே செய்ததாக முடிவு செய்யப்படகிறது.” இவ்வாறு நீதிபதி குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டி, திருமணம் தொடர்பாக குற்றவாளிகள் வாதிட்டது அனைத்தும் உண்மைக்கு மாறானவை என்று கூறியுள்ளார் அன்பழகன்.
கட்டுமானச் செலவுகள்
கட்டுமானச் செலவுகளை பொருத்தவரை, லஞ்ச ஒழிப்புத் துறை சொல்வதை விசாரணை நீதிபதி ஏற்றுக் கொள்ளாமல், அவராக ஒரு கணக்குக்கு வந்துள்ளார் என்ற வாதிட்டனர்.   மேலும், இந்த வழக்கின் காலமான மே 1991க்கு முன்னதாகவே பல கட்டிடங்கள் இருந்தன.  அவை, குற்ற காலத்தில் கட்டப்படவில்லை என்று வாதிட்டனர் குற்றவாளிகள்.    புதிய கட்டுமானங்கள் அனைத்தும் குற்ற காலத்தில்தான் நடந்தன என்பதை நிரூபிக்கும் விதமாக, கட்டிடங்களுக்கு ஒப்புதல் வாங்கிய ஆவணங்கள் அரசுத் தரப்பால் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குற்றவாளிகள் தரப்பில், இந்த கட்டுமானங்களின் மதிப்பீடு அதிகம் என்று கூறினார்களே ஒழியா, எந்த இடத்திலும், கட்டுமானத்துக்கு எவ்வளவு செலவானது என்பதை கூறவேயில்லை. விசாரணை நீதிபதி, குற்றவாளிகள் சார்பான வாதத்தை சரியாகவே நிராகரித்துள்ளார். கட்டுமானத்தை செய்தவர்கள்தான் எவ்வளவு செலவு ஆனது என்பதை கூறியிருக்க வேண்டும்.  ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யத் தவறினர்.    இந்த கட்டுமானங்கள் நடந்தபொழுது, வாங்கப்பட்ட கட்டுமான பொருட்களுக்கான அசல் ரசீதுகளை நீதிமன்றத்தின் முன் சமர்ப்பித்து, எளிதாக குற்றவாளிகள் தரப்பு செலவு எவ்வளவு ஆயிற்று என்பதை நிரூபித்திருக்க முடியும்.  ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யத் தவறியுள்ளனர். இது குறித்து, தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள நீதிபதி குன்ஹா, குற்றவாளிகள் தரப்பு சாட்சியாக சாட்சியமளித்தவர், கட்டிடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள பளிங்கு கற்களுக்கான ரசீதுகளை சமர்ப்பித்துள்ளார்.  ஆனால் அந்த ரசீதுகள் 1999ம் ஆண்டுக்கானவை.  ஆனால் கட்டிடங்கள் கட்டப்பட்டதோ 1994 மற்றும் 1995ல்.   லஞ்ச ஒழிப்புத் துறையும், பளிங்கு கற்களுக்கான விலை குறித்து எந்த ஆவணத்தையும் சமர்ப்பிக்கவில்லை.  ஆகையால், லஞ்ச ஒழிப்புத் துறை செய்த மதிப்பீட்டிலிருந்து 20 சதவிகிதத்தை குறைத்து, கட்டுமான செலவுகள் மட்டும் 22 கோடியே 53 லட்சத்து, 92 ஆயிரத்து 344 ரூபாய் என முடிவு செய்கிறேன் என்று கூறியுள்ளார்.
இந்த காரணத்தினாலும், குற்றவாளிகள் இது குறித்து எடுத்து வைத்துள்ள வாதங்கள் ஏற்கத்தக்கவை அல்ல.    
தனியார் நிறுவனங்களுக்கும் குற்றவாளிகளுக்கும் சம்பந்தம் இல்லை
லஞ்சம் வாங்கிச் சேர்த்த கருப்புப் பணத்தை வெள்ளையாக்குவதற்காகவே, குற்றவாளிகள் 34க்கும் மேற்பட்ட நிறுவனத்தை தொடங்கியுள்ளனர்.   செயல்படாமல் நெடுநாட்களாக இருக்கும் பல நிறுவனங்களை வாங்கி, அதற்காக 100க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை திறந்துள்ளனர்.  இவ்வழக்கில் பெரும்பாலான சொத்துக்கள், ரிவர்வே அக்ரோ ப்ராடக்டஸ், மீடோ அக்ரோ ஃபார்ம்ஸ், லெக்ஸ் ப்ராப்பர்டி டெவலப்மென்ட், ராம்ராஜ் ஆக்ரோ மில், இந்தோ தோஹா கெமிக்கல்ஸ் மற்றும் சினோரா என்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்களின் பெயரிலேயே வாங்கப்பட்டுள்ளன. இந்நிறுவனங்கள் அனைத்தும் சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசியின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன. இதில் இந்தோ தோஹா கெமிக்கல்ஸ் நிறுவனத்தைத் தவிர மற்ற அனைத்து நிறுவனங்களின் உரிமையாளர்களும், தாங்கள் முதலீடு செய்த பணத்தை திரும்ப பெற்றுக் கொண்டு, நிறுவனத்தை விட்டு வெளியேறியதாக கூறியுள்ளனர். இந்த நிறுவனங்களின் பெயரில் 3000த்துககும் அதிகமான ஏக்கர்கள் சொத்து வாங்கப்பட்டுள்ளன.   இந்த நிறுவனங்களையும், குற்றவாளிகளையும் இணைக்கும் முக்கியமான தொடர்பு என்னவென்றால், இந்த நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளுக்கு, வந்த பணம் அனைத்தும், நமது எம்ஜிஆர் மற்றும் ஜெயா பப்ளிகேசன்ஸ் நிறுவனத்தின் கணக்கிலிருந்து வந்துள்ளன. இந்நிறுவனங்கள் பெயரில் வாங்கப்பட்ட சொத்துக்களுக்குகான பணம் அனைத்தும் ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் வங்கி கணக்கில் இருந்தோ, அல்லது அவர்கள் நிறுவனங்களின் கணக்குகளில் இருந்தோ வந்துள்ளன.  இந்த நிறுவனங்களில் ஒன்று கூட கம்பெனிகள் பதிவாளரிடமோ, வருமான வரித்துறையிடமோ, சொத்து வாங்கியது தொடர்பாக அறிக்கைகள் தாக்கல் செய்யவில்லை.   இந்த கம்பெனிகளின் பெயர்கள் மட்டுமே சொத்துக்கள் வாங்குவதற்காக பயன்படுத்தப்பட்டுளன.
இளவரசி மற்றும் சசிகலா
இளவரசி மற்றும் சசிகலா
இந்த சொத்துக்களில் பலவற்றை பதிவு செய்த, பதிவாளர், ஜெயலலிதாவை திருப்தி செய்வதற்காகவே, பல ஆவணங்களில் வாங்குபவரின் பெயர் கூட இல்லாமல் ஆவணங்களை பதிவு செய்து தந்துள்ளார். சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தை சேர்த்து வைப்பதற்காக மட்டுமே, இந்த நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது தெள்ளத் தெளிவாகிறது. 💥💥💥
நமது எம்ஜிஆர் நாளேட்டுக்கான சந்தா திட்டம்.
நமது எம்ஜிஆர் நாளேட்டை வாங்குவதற்காக உருவாக்கப்பட்ட சந்தா திட்டத்தின் அடிப்படையில், நமது எம்ஜிஆர் வங்கிக் கணக்கில் ஏராளமான தொகைகள் செலுத்தப்பட்டுள்ளன.  அவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று குற்றவாளிகள் தரப்பில் வாதிடப்பட்டது. அந்த சந்தாக்களை யார் செலுத்தினார்கள் என்பது எதிரித் தரப்பால் நிரூபிக்கப்படவில்லை.   வருமான வரித்துறையில், நமது எம்.ஜி.ஆரின் லாப நஷ்டக் கணக்கை சமர்ப்பித்ததையே எதிரி தரப்பில் சான்றாக காட்டுகிறார்கள்.  இது தொடர்பாக குற்றவாளிகள் சார்பாக சாட்சியம் அளித்த ஆடிட்டர்கள், அந்த காலகட்டத்தில் இந்த கணக்குகளை கையாளவில்லை.   குற்ற காலகட்டத்தில், வந்த கணக்கில்லாத பணத்தை சரிக்கட்டவே, லாப நட்டக் கணக்கு  வருமான வரித்துறையின் முன்பாக பொய்யாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எந்த வகையில் வருமானம் வந்தது என்பதை குறிப்பிடாமல், வருமான வரி மட்டும் செலுத்துவதால் அந்த வருமானம் சட்டபூர்வமான வருமானம் ஆகி விடாது. நமது எம்.ஜி.ஆர் கணக்கில் பணத்தை செலுத்தியது ராம் விஜயன் மற்றும் ஜெயராமன் ஆகிய இருவர்.  இவர்கள் இருவரும் ஜெயலலிதாவிடம் பணியாற்றுகிறார்கள்.
இதில் ஜெயராமன், சசிகலா சொல்லியே அனைத்து டெப்பாசிட்டுகளையும் சசிகலா சொல்லியே செய்ததாகவும், ஒவ்வொரு முறையும் எந்த வங்கியில் செலுத்த வேண்டும், இந்தியன் வங்கி அபிராமபுரம் கிளையிலா, கனரா வங்கி மைலாப்பூர் கிளையிலா என்பதையும், ஒவ்வொரு முறையும் பணத்தை ஐபிஎன் சூட்கேஸ்கள் அல்லது, பையில் கொடுத்தனுப்புவார் என்றும் சாட்சியம் அளித்துள்ளார். இது தொடர்பாக சாட்சியம் அளித்த வங்கி மேலாளர்கள் பெரும்பாலான டெபாசிட்டுகளை செய்தவர் விஜயன் என்று கூறியுள்ளனர்.  இந்த குற்ற காலத்தில், குற்றவாளிகளோ, அல்லது அவர்கள் நடத்திய நிறுவனங்களோ, எவ்விதமான டெப்பாசிட்டுகளையும் இந்த கணக்குகளில் செய்யவில்லை.  மாறாக, நமது எம்ஜிஆர் மற்றும் ஜெயா பப்ளிகேசன்ஸ் கணக்குகளில் இருந்து குற்றவாளிகளின் கணக்குகளுக்கு பல முறை பணம் மாற்றப்பட்டுள்ளது.    நமது எம்ஜிஆர் சந்தா திட்டம் என்பதே, 1998ம் ஆண்டு, இவ்வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த பிறகே உருவாக்கப்படுகிறது.
எதிரி தரப்பு சாட்சியான சவுந்தரவேலன் ஒரு ஆடிட்டர்.  குற்ற காலத்தில் இவர் ஜெயலலிதாவின் கணக்குகளையோ, ஜெயா பப்ளிகேசன்ஸ் கணக்குகளையோ, நமது எம்ஜிஆர் கணக்குகளையோ கையாண்டதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.    ஜெயலலிதா மற்றும் இதர குற்றவாளிகள் அனைவரும், நமது எம்ஜிஆர் ஆவணங்கள் அனைத்தும் லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறி வந்துள்ளனர். ஆனால், ஆடிட்டர் சவுந்தரவேலனோ, வருமான வரித்துறையில் கணக்கு தாக்கல் செய்கையில், நமது எம்ஜிஆர் சந்தா தொடர்பான அனைத்து ஆவணங்களையும், தானே வருமான வரி அதிகாரிகளிடம் தாக்கல் செய்துள்ளதாக கூறியுள்ளார்.  இது குறித்து தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள குன்ஹா, ஒரு ரூபாய் உள்ள ஒரு நாளிதழுக்காக, 10 ஆயிரம் 15 ஆயிரம் போன்ற தொகைகளை செலுத்தி, எதற்காக ஒருவர் 5 நகல்களை வாங்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதனால், நமது எம்ஜிஆர் நாளிழ் சந்தா என்ற திட்டமே, குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு உருவான பொய்யா திட்டம் என்று கூறியுள்ளார் அன்பழகன்.
குற்றவாளிகளின் வருமான வரிக்கணக்கை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இவ்வழக்கில் குற்ற காலமான 1991 முதல் 1996 வரை, இந்த சொத்துக்களை வாங்குவதற்கு, குற்றவாளிகளுக்கு போதுமான சட்டபூர்வமான வருமானம் இல்லை என்பது தெளிவாகிறது.   இந்த காலகட்டத்தில் தங்களுக்கு வருமானம் இருந்ததாக காண்பிப்பதற்காக கூடுதலாக வருமானம் இருந்தது போல வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.   1991 முதல் 1996 வரையிலான காலகட்டத்துக்கான வருமான வரி கணக்கு 1997ம் ஆண்டுதான் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.   இந்த ஊழல் வழக்கிலிருந்து தப்பிப்பதற்காகவே, இந்த வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.   இந்த காலகட்டத்தில் வந்த வருமானத்துக்கான வருமான வரியை செலுத்தினால் கூட,     அதை ஏற்றுக் கொள்ள முடியாது.  வருமான வரித்துறை என்பது வரி வசூலிக்கும் துறையே தவிர, ஊழல் தடுப்பு தீர்ப்பாயம் அல்ல.
வருமான வரித்துறையினர் அந்த வருமானம் எப்படி வந்தது என்பதை ஆராய்வது கிடையாது.  ஆனால் இவ்வழக்கில் லஞ்ச ஒழிப்புச் சட்டம் பிரிவு 13ன் படி, இவை அனைத்தும் எப்படி வந்தன என்றும், சட்டபூர்வமானவை என்றும் நிரூபிக்க வேண்டியது, ஜெயலலிதாவின் பொறுப்பு.  இந்த நிறுவனங்கள் சார்பாகவும், ஜெயலலிதா மற்றும் சசிகலா சார்பாகவும் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி ஆவணங்களையே, எதிரித் தரப்பு முழுமையாக நம்புகிறது. இது தொடர்பாக வாக்குமூலம் அளித்த ஆடிட்டர்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் ஜெயலலிதாவின் கணக்குகளையோ, அவர் நிறுவனங்களின் கணக்குகளையோ கையாண்டவர்கள் கிடையாது.   இந்த நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ள லட்சக்கணக்கான பணத்தை கணக்கு காண்பிப்பதற்காகவே வருமான வரி செலுத்தப்பட்டுள்ளது. அதற்கு ஆடிட்டர்களும் உதவியுள்ளார்கள்.
வருமான வரித்துறையில் வரி செலுத்தினால் அதை அப்படியே ஏற்றுக் கொண்டால், அது சட்டபூர்வமான வருமானம் என்ற கூற்றை ஏற்றுக் கொள்ளத் தொடங்கினால் அது மிக மிக ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்.    ஊழலில் ஈடுபடும் பொது ஊழியர்கள் அனைவரும், தங்களுக்கு வேண்டப்பட்டவர்களின் பெயரில் சொத்துக்களை வாங்கிக் குவித்து, அதன் பிறகு அவர்கள் பெயரில் வருமான வரி செலுத்தி தப்பிக்க அது உதவும் என்ற ஒரு உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி, ஜெயலலிதாவின் தந்திரத்தை அம்பலப்படுத்தியுள்ளார் பேராசிரியர் அன்பழகன்.
கூட்டுச்சதி நிரூபிக்கப்படவில்லை
இந்த வழக்கின் புலனாய்வில், குற்றவாளிகள் மற்றும் அவர்களது நிறுவனங்களின்  பெயர்களில் மொத்தம் 107 வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான சொத்துக்கள் பணத்தின் மூலமாகவோ, இந்நிறுவனங்களின் பெயரில் உள்ள காசோலைகள் அல்லது வரைவோலைகள் மூலமாகவே வாங்கப்பட்டுள்ளது, என்பதே, குற்றவாளிகளுக்கும், இந்த சொத்துக்களுக்கும் எத்தனை நேரடியான தொடர்பகள் உண்டு என்பது நிரூபணமாகிறது.
மேலும், ஜெயலலிதாவின் பணத்தின் மூலமாக, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் பெயரிலும், பல்வேறு நிறுவனங்களின் பெயரிலும், இத்தனை சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளது என்பதே, இது கூட்டுச்சதியின் மூலமாகத்தான் என்பது தெள்ளத் தெளிவாக நிரூபணம் ஆகிறது என்று அன்பழகன் தனது எழுத்துபூர்வமான வாதங்களை எடுத்து வைத்துள்ளார்.
இன்று பவானி சிங் நியமனம் குறித்து தீர்ப்பளித்த மூன்று நீதிபதிகளின் அமர்வு, அன்பழகன் மற்றும் கர்நாடக அரசு தாக்கல் செய்யும் எழுத்துபூர்வமான வாதங்கள், நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பில் தெரிய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது என்ற காரணத்தால், அன்பழகனின் வாதம் மிகுந்த முக்கியத்துவம் அடைகிறது.
ஜெயலலிதாவுக்கு எதிரான இந்த சொத்துக் குவிப்பு வழக்கு இன்று உயிரோடு இருக்கிறதென்றால், அது திமுக மற்றும் பேராசிரியர் அன்பழகன் எடுத்த முயற்சியின் காரணமாகவே.     இந்த வழக்கில் புகார்தாரராக இருந்த சுப்ரமணியன் சுவாமி, இந்த வழக்கு குழிதோண்டி புதைக்கப்படும் சூழலில் ஜெயலலிதாவோடு கூட்டணியில் இருந்தார்.     தனக்கு வாதிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றால், உடனடியாக உச்சநீதிமன்றத்தை அணுகும் சுப்ரமணியன் சுவாமி, இந்த வழக்கில், பெங்களுரு உயர்நீதிமன்றம் இவருக்கு வாதாட வாய்ப்பு மறுக்கப்பட்டபோது, உச்சநீதிமன்றம் செல்லவேயில்லை.  மேலும், எழுத்துபூர்வமான வாதத்தையும், மிக மிக சுருக்கமாக முடித்துக் கொண்டார். 😓
karunanidhi_1113689f
இந்த வழக்கில் திமுக மற்றும், பேராசிரியர் அன்பழகனின் பங்கு மிக மிக முக்கியமானது.       அவர்களுக்கு சவுக்கு சார்பாக வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை: