புதன், 24 டிசம்பர், 2014

காஷ்மீரில் மெஹபூபா ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு! குலாம் நபி ஆசாத் அறிவிப்பு


ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் அடுத்து ஆட்சியை அமைக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பாஜ, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பிடிபிக்கு ஆதரவு அளிக்க தயாராக இருப்பதால் மெகபூபா முப்தி தலைமையில் ஆட்சி அமையுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஜார்கண்டில் பாஜ தலைவர் ரகுபர்தாஸ் முதல்வர் ரேசில் முந்துகிறார்.ஜம்மு- காஷ்மீரில் மொத்தமுள்ள 87 சட்ட மன்ற தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்த தேர்தலில் பிடிபி கட்சிக்கு 28, பாஜவுக்கு 25, ஆளும் தேசிய மாநாட்டு கட்சிக்கு 15, காங்கிரசுக்கு 12 மற்றவர்கள் 7 இடங்களையும் கைப்பற்றியுள்ளனர். காஷ்மீரில் பிடிபி ஆட்சி அமைக்க விரும்பினால் ஆதரவு அளிக்க தயாராக இருக்கிறோம் என காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார். காஷ்மீரில் பாஜ ஆட்சி அமைக்கும் என ராஜ்நாத்சிங்கும், அமித்ஷாவும் நம்பிக்கை தெரிவித்திருந்தனர். இதன் மூலம் பிடிபி கட்சிக்கு பாஜ ஆதரவு அளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


இந்நிலையில் காஷ்மீரில் நிலையான ஆட்சி அமைவதற்கே மக்கள் ஜனநாயக கட்சி ஆதரவு அளிக்கும். இந்த விவகாரத்தில் எந்த அவசரமும் காட்டப் போவதில்லை. நிதானமாக ஆலோசித்து முடிவு செய்ய உள்ளோம். இதற்கென்று எந்த காலகெடுவும் வைத்துக் கொள்ளவில்லை என அதன் தலைவர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். இதற்கிடையில் ஜம்முகாஷ்மீர் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பாஜ மேலிடம் இன்று டெல்லியில் கூடி முடிவெடுக்க உள்ளது. இதற்கிடையில் பிடிபி கட்சிக்கு தேசிய மாநாட்டு கட்சியும் ஆதரவு அளிக்கும் என்று தெரிகிறது. எனவே இம்முறை பிடிபி கட்சி ஆட்சி அமர வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதே நேரத்தில் பிடிபி கட்சியின் செய்தி தொடர்பாளர் நயீம் அக்தர் கூறுகையில், இம்முறை ஜம்மு நலன்களை கருத்தில் கொண்டு எங்களுடைய கட்சியில் கூட்டணியை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.

எங்களுடைய கட்சியில் கூட்டணிக்கான கதவுகள் திறந்தே உள்ளன என்றார். இது மறைமுகமாக பாஜவுக்கு விடுக்கும் அழைப்பாகவே கருதப்படுகிறது. இருந்த போதிலும் காங்கிரஸ், பாஜ உள்ளிட்ட கட்சிகள் எதுவும் இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் தொங்கு சட்டசபை ஏற்படும் நிலையே உள்ளது. யாருடன் கூட்டணி என்ற பேச்சு வார்த்தையும் நீண்டு செல்ல வாய்ப்புள்ளது. இதனால் காஷ்மீரில் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து குழப்ப நிலையே நீடித்து வருகிறது.ஜார்கண்டில் 5 கட்டங்களாக நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 42 இடங்களை பாஜ கூட்டணி கைப்பற்றியது.

ஆட்சி அமைக்க தேவையான மெஜாரிட்டி பலத்தை பெற்றுள்ளது. இதில் பாஜவுக்கு தனியாக 37 இடங்களும், அதன் கூட்டணி கட்சியான ஜார்கண்ட் மாணவர் கூட்டமைப்புக்கு 6 இடங்களும் கிடைத்துள்ளன. காங்கிரஸ் வெறும் 8 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. முதல்வர் ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 19 இடங்களை பிடித்து தோல்வியை தழுவியது. இதனையடுத்து நேற்று கவர்னர் சையது அகமதுவை ராஜ்பவனில் சந்தித்து தனது ராஜினாமாவை கொடுத்தார் ஹேமந்த் சோரன்.இதனையடுத்து ஜார்கண்டில் அடுத்த ஆட்சி அமைப்பதற்கு பாஜ தயாராகி வருகிறது. முன்னாள் முதல்வரும், பாஜ மாநில தலைவருமான அர்ஜூன் முண்டா தோல்வியை தழுவினார். இதனால் அவர் முதல்வர் ரேசில் இல்லை என தெரிகிறது.

அதற்கு பதிலான துணை தலைவர் ரகுபர் தாஸூக்கு முதல்வர் பதவி அளிக்க வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் கருதுகின்றன.  சுமார் 32 சதவீதம் பழங்குடியினர் வசிக்கும் ஜார்கண்டில் முதன்முறையாக பழங்குடியினத்தை சேராத ஒருவர் முதல்வராக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து ரகுபர் தாஸ் கூறுகையில், இந்த விவகாரத்தில் மேலிடத்தின் முடிவுதான் இறுதியானது. பாஜவை பொறுத்த அளவில் நிலையான ஆட்சி, உறுதியான வளர்ச்சி என்ற கொள்கைக்கு முன்னுரிமை அளித்து அடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.

ஜார்கண்டில் பாஜ வெற்றி குறித்து கட்சியின் செய்தி தொடர்பாளரும் மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜாவேத்கர் கூறுகையில், வாஜ்பாயின் கனவை நிறைவேற்றும் வகையில் ஜார்கண்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல பாஜ முயற்சி எடுக்கும் என்றார்.மகாராஷ்டிரா, ஹரியானாவைத் தொடர்ந்து தற்போது ஜார்கண்டில் அமோக வெற்றி பெற்றுள்ளது. காஷ்மீரில் கணிசமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் வாயிலாக வருங்காலத்தில் மாநிலங்களவையில் பாஜவின் பலம் அதிகரிக்கும் என்பது குறப்பிடத்தக்கது. - tamilmurasu.org

கருத்துகள் இல்லை: