வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

வாழ்க்கை முழுதும் கட்சிகள் மாறிய பண்ருட்டி ! எந்தக் கட்சியில் பதவி கிடைக்கிறதோ அதை அனுபவித்துவிட்டு அடுத்த கட்சிக்கு


உடல்நிலை காரணமாக 2 மாதங்களுக்கு முன் அரசியலிலிருந்து முற்றிலுமாக ஓய்வுபெறப்போவதாக அறிவித்து தே.மு.தி.க.வின் அனைத்துப் பொறுப்புகளிலும் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன், நேற்று (வியாழக்கிழமை) ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்.
76 வயதில் அ.தி.மு.க.வின் வெற்றிக்கு உழைக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
தமிழக அரசியல்வாதிகளில் சிலர் கடைசி வரை ஒரே கட்சியில் இருப்பதுண்டு. சிலரோ எந்தக் கட்சியில் பதவி கிடைக்கிறதோ அதை அனுபவித்துவிட்டு அடுத்த கட்சிக்கு தாவுவதுமுண்டு. இதிலே இரண்டாவது ரகம்தான் முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன்.

பி.இ. பட்டதாரியான இவர் தமிழ்நாடு மின்வாரியத்தில் பொறியாளராகப் பணியாற்றி, அண்ணா, தி.மு.க.வை தொடங்கியபோது கட்சியில் இணைந்து தனது அரசியல் வாழ்வைத் தொடங்கினார். தி.மு.க.வில் கருணாநிதி அமைச்சரவையில் பதவி வகித்த இவர், அ.தி.மு.க.வுக்கு தாவி எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் 10 ஆண்டுகளாக பதவி வகித்தார்.
எம்.ஜி.ஆர். இருந்த காலத்தில், தி.மு.க.வையும், அ.தி.மு.க.வை இணைக்க பிஜு பட்நாயக் ஒரு முயற்சி மேற்கொண்டார் என்பது, இப்போது எத்தனை பேருக்கு தெரியுமோ, தெரியாது. அப்போது அந்த முயற்சி, கிட்டத்தட்ட வெற்றி என்ற நிலை ஏற்பட்டது.
திடீரென, இணைப்பு முயற்சியில் இருந்து பின்வாங்கி விட்டார் எம்.ஜி.ஆர்.
அப்போது, “எம்.ஜி.ஆர். மனதை மாற்றி, தி.மு.க. – அ.தி.மு.க. இணைப்பு முயற்சியை கெடுத்து விட்டார் பண்ருட்டியார்” என கருணாநிதியால் குற்றம்சாட்டப்பட்டவர் இவர்.
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் ஜெயலலிதா அணி, ஜானகி அணி என பிரிந்தபோது ஜெயலலிதா அணியில் இருந்தார். பின்னர் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நெடுஞ்செழியன், அரங்கநாயகம், திருநாவுக்கரசு ஆகியோரோடு இவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
இவர்கள் 4 பேரும் சேர்ந்து உருவாக்கியதுதான் ‘அ.தி.மு.க. நால்வர் அணி’. அப்போது இவர்கள் 4 பேரையும் ஜெயலலிதா, “உதிர்ந்த முடிகள்” என விமர்சித்தார்.
அதற்குப் பின் நால்வர் அணி நீடிக்காமல் ஆளுக்கொரு திசையில் பிய்த்துக்கொண்டுபோக, பண்ருட்டியாரோ பாட்டாளி மக்கள் கட்சியில் சேர்ந்து அக்கட்சியின் முதல் எம்.எல்.ஏ.வானார். இவர் வன்னியர் என்பதால் ராமதாசோடு இணைந்து செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2 ஆண்டுகளுக்குப் பின் (மாம்பழம் புளித்துப்போகவே) அக்கட்சியிலிருந்து விலகினார்.
அதன்பின், தனியாக ஒரு அமைப்பையும், வார இதழ் ஒன்றையும் நடத்தியதில், இரண்டுமே போணியாகவில்லை.
இந்த முயற்சியை மூட்டைகட்டி வைத்துவிட்டு, முன்னாள் அமைச்சர்களான எஸ்.டி. சோமசுந்தரம், ராஜாராம் ஆகியோரோடு இணைந்து ‘மக்கள் நல உரிமைக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கினார். அதுவும் சரிப்பட்டு வராமல் போகவே தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
கொஞ்சக் காலம் அமைதியாக இருந்த பண்ருட்டியார், விஜயகாந்த் தே.மு.தி.க. தொடங்கியபோது அவருக்கு அரசியல் ஆலோசகராக போய் சேர்ந்து கொண்டார். விஜயகாந்த் மதுரையில் நடத்திய மாநாட்டுக்கான விழா மலருக்கு முன்னுரை எழுதிக் கொடுத்தார்.
அதற்குப் பின் தே.மு.தி.க.வில் இணைந்தார்.
விஜயகாந்த்தை ராமதாஸ் எதிரியாக கருதி வந்த நிலையில், வன்னியரான பண்ருட்டியார் கட்சியில் சேர்ந்ததன் மூலம் தான் வன்னியர்களுக்கு எதிரானவன் இல்லை என்பதை விஜயகாந்த் காட்டிக்கொள்ள இவரை அவைத் தலைவராக்கினார், அவர்.
அதோடு நின்றுவிடவில்லை, 2011-ம் ஆண்டு, ஆலங்குடி தொகுதியில் போட்டியிட வைத்து எம்.எல்.ஏ.வாக்கினார்.
ஆனால், விஜயகாந்த்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் பண்ருட்டியார் கட்சியிலிருந்து விலகிவிடுவார் என அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், அதை தொடர்ந்து மறுத்து வந்தார்.
என்னதான் மறுத்து வந்தாலும், மீண்டும் அ.தி.அ.தி.மு.க.வுக்கு போகும்போது தம்முடன் எடுத்துச் செல்ல ‘முக்கிய வஸ்து’ ஒன்றை தமது பீரோவில் தயாராக வைத்திருந்தார், பண்ருட்டியார்…!
சட்டமன்றத்தில் தே.மு.தி.க.வினர் வெளிநடப்பு செய்தபோது, பண்ருட்டியார் அவர்களுடன் வெளியே செல்லவில்லை. ஒரு முறை முதல்வர் ஜெயலலிதாவை வாழ்த்தியும் பேசினார். இதனால், விஜயகாந்த்தின் அதிருப்திக்கு உள்ளானார்.
அதேநேரத்தில், பல பிரச்னைகளில் கட்சித் தலைமை தன்னைக் கலந்தாலோசிக்காமலேயே முடிவெடுத்ததாக தனது நண்பர்களிடம் கூறி வந்தார்.
இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் உடல்நிலை சரியில்லாததால் மருத்துவர்களின் ஆலோசனையில் பேரில் முற்றிலுமாக அரசியலிலிருந்தே ஓய்வுபெறுவதாகக் கூறி தே.மு.தி.க.வின் அவைத்தலைவர் உள்ளிட்ட அனைத்துக் கட்சிப் பொறுப்புக்களிலிருந்தும், எம்.எல்.ஏ. பதவியிலிருந்தும் விலகுவதாகவும் கூறினார்.
தே.மு.தி.க.வில் இருந்து விலகிய பண்ருட்டியாருக்கு (விசுவாசமாக நடந்துகொண்டதற்காக?) பொங்கல் பரிசாக, தமிழக அரசு சார்பில் அண்ணா விருதை வழங்கி ஜெயலலிதா கவுரவப்படுத்தினார். விருதைப் பெற்ற சூடு தணிவதற்குள் பண்ருட்டியாரும் அதற்குக் கைமாறாக வரும் தேர்தலில் அ.தி.மு.க.வுக்காகப் பிரசாரம் செய்வேன் என முழங்கினார்.
கட்சிகள் பல கண்டு, கரை போட்டி வேட்டிகள் பலவற்றை மாற்றி மாற்றிக் கட்டிய பண்ருட்டியார், தே.மு.தி.க. கட்சியோடு தமது அரசியல் வாழ்வை முடித்துக்கொள்ள முடியுமா? அப்படி முடித்துக்கொண்டால், அவரது பீரோவில் வைத்திருக்கும் அ.தி.மு.க. கரை வேட்டிகளை என்ன செய்வது?
‘மக்கள் நல உரிமைக் கழகம்’ தொடங்கியபோது, பொருட்களின் ‘மறு சுழற்சி’ (அட, Recycling தானுங்க) பற்றியெல்லாம் பேசியவர், நம்ம பண்ருட்டியார்!
அப்படியான சமூக கண்ணோட்டம் கொண்ட அவர், தமது பீரோவில் இருந்த அ.தி.மு.க. கரை வேட்டிகளை, கொல்லைப்புறத்தில் வெட்டி புதைப்பாரா? ஒருபோதும் இல்லை. இதோ, அ.தி.மு.க. கரை வேட்டிகளை  Recycling செய்ய முன்வந்துள்ளார்.
அ.தி.மு.க.வில் இணைந்தே விட்டார், அவர் மட்டுமின்றி தனது முழு குடும்பத்தினரோடு ஐயக்கியமாகிவிட்டார். அரசியல் பீனிக்ஸ் பறவைபோல மீண்டும் எழுந்து வந்தவிட்டார்.
கடந்த மாதம் உடல்நிலை சரியில்லாததால் மருத்துவர்களின் ஆலோசனையில் பேரில் முற்றிலுமாக அரசியலிலிருந்தே ஓய்வுபெறுவதாக கூறியிருந்த பண்ருட்டியார், கடந்த சில வாரங்களில் என்ன சிகிச்சை எடுத்தாரோ தெரியவில்லை, அவரது உடல் நிலை ‘தீவிர அரசியலிலும் குதிக்கலாம்’ என மருத்துவர்கள் சர்டிபிகேட் கொடுக்கும் அளவுக்கு தேறிவிட்டது!
இது ஒரு மெடிகல் மிராக்கிள்தான்!
இந்த மருத்துவ அதிசயம் நடந்ததை அடுத்து, நேற்று ஜெயலலிதா முன்னிலையில், மனைவி சாந்தி, தனது வருங்கால அரசியல் வாரிசான மகன் சம்பத்குமாரோடு அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார்.
வழக்கமாக ஒரு கட்சியில் சேர்ந்த பின்னர்தான் அந்தக் கட்சியின் கரை போட்ட போட்ட வேட்டியை அணிவதுண்டு. ஆனால், பண்ருட்டியாரோ ஒருபடி மேலே சென்று தானும், தனது வாரிசும் அ.தி.மு.க. கரை போட்ட வேட்டியை கட்டிக்கொண்டு போயஸ் தோட்டத்துக்கு வந்திருந்தனர்.
ஆனால், இதற்காக நம் பண்ருட்டியார், அ.தி.மு.க.வுக்கு முன்னுரிமை கொடுக்கிறார் என யாரும் தப்பாக எடுத்துக் கொள்ள கூடாது. அவர் எந்தக் கட்சிக்கு போக விரும்பினாலும், அந்தக் கட்சியின் கரை போட்ட வேட்டிகள் அவரது பீரோவில் பத்திரமாக உள்ளன (வயதான காலத்தில், வேட்டி மாறி கட்டாவிட்டால் சரி).
அ.தி.மு.க.வில் இணைந்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டியார் “எல்லோரும் ஓய்வு பெற்றுவிட்டால் சொந்த வீட்டிற்குத் தான் திரும்பிப் போவார்கள். நானும் ஓய்வு பெற்றுவிட்டேன். எனது சொந்த வீடு, தாய்வீடு அ.தி.மு.க.தான். நானும் ஓய்வுபெற்ற பின் சொந்த வீட்டிற்குத் திரும்பியுள்ளேன்” என்றார்.
பண்ருட்டியார் சொல்வது ஒரு வகையில் உண்மைதான்.
பல கட்சிகளுக்கு தாவிச் சென்று பழம் தின்னு கொட்டை போட்ட பின் ஓய்வு பெறும்போது அ.தி.மு.க.வுக்கு (சொந்த வீட்டுக்கே) திரும்பிவிட்டார். அதற்குக் காரணம் உண்டு என விஷயமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
ஓய்வு பெற்றபின் சொந்த வீட்டில் ஈஸிசேரில் சாய்ந்தபடி, தமது வேலையை, மகன் தொடர்வதை பார்க்கும் ஆவலில் வந்துள்ளாராம்!
மகனுக்காக, எம்.பி. சீட் கோரிக்கை ஒன்று வைத்துவிட்டு ‘சொந்த வீட்டுக்கு’ வந்திருக்கிறார் என்று தெரிகிறது.
பல ஆண்டுகளாக பீரோவில் அ.தி.மு.க. வேட்டியை ரகசியமாக வைத்து பாதுகாத்து (இந்த விஷயம் கேப்டனுக்கு தெரிந்திருந்தால், முதுகில் கும்மியிருப்பார்), இப்போது கட்டி வந்த இந்த உதிரிப் பூக்களுக்கு (அம்மா சொன்ன ‘உதிர்ந்த முடிகளை’ லேசாக modify பண்ணியிருக்கிறோம்) என்ன பரிசு கிடைக்கப் போகி
viruvirupu.com 

கருத்துகள் இல்லை: