புதுடெல்லி,
ராஜீவ் காந்தி கொலை கைதிகளுக்கு தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டது
பற்றி எனக்கு மகிழ்ச்சியா? இல்லையா? என்பது பற்றி கூற வேண்டியது இல்லை
என்று ப.சிதம்பரம் கூறினார்.
துக்கம் நீடிக்கும்முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை கைதிகளுக்கு தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறியதாவது:–
ராஜீவ் காந்தியை இழந்த துக்கம் எனக்கு எப்போதும் இருக்கும். சுப்ரீம் கோர்ட்டு 3 பேரையும் நிரபராதிகள் என்று கூறவில்லை. அது ஒரு முக்கிய அம்சம். அவர்கள் விடுதலை செய்யப்பட்டால், 20, 25 ஆண்டுகள் சுதந்திரமாக நடமாடுவார்கள்.
அதுதான் அவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனை என்று சுப்ரீம் கோர்ட்டு கருதினால், அப்படியே ஆகட்டும். இதில் எனக்கு மகிழ்ச்சியா? மகிழ்ச்சி இல்லையா? என்று நான் கூற வேண்டியது இல்லை.
ஏற்க முடியாது
தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்கு, கருணை மனு மீதான தாமதமே போதும் என்ற நிலைப்பாட்டை ஏற்பது எனக்கு அசவுகரியமாக இருக்கிறது. தாமதம் ஏற்பட்டதால்தான், அவர்களுக்கு உயிர் பிச்சை கிடைத்துள்ளது.
தாமதம் ஏற்பட்டு இருக்காவிட்டால், இந்த பிரச்சினையே எழுந்து இருக்காது. எனவே, இந்த தீர்ப்புக்கு கோர்ட்டு அளித்த காரணம் பற்றி விவாதம் நடத்தப்படும்.
கருணை மனு
அதே நேரம், தாமதம் ஏற்பட்டதா என்பதும் கேள்விக்குரியது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருந்தபோதுதான், கடந்த 2000–ம் ஆண்டு கருணை மனு சமர்ப்பிக்கப்பட்டது. அதன் மீது 4 ஆண்டுகளாக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பிறகு, 2005–ம் ஆண்டுதான் முதல்முறையாக கருணை மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, அப்போதைய ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஜனாதிபதியிடம் அது 5 ஆண்டுகளாக இருந்தது.
நான் மத்திய உள்துறை மந்திரியாக ஆன பிறகு, நிலுவையில் இருந்த எல்லா கருணை மனுக்களும் என்னிடம் திரும்பி வந்தன. அவற்றை ஒன்றன்பின் ஒன்றாகத்தான் அணுக வேண்டி இருந்தது. எனவே, வெறும் தாமதத்துக்காக, மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கலாம் என்பது, கடுமையான சட்ட பிரச்சினையை எழுப்பி உள்ளது. இது சரிதானா என்று நாம் ஆய்வு செய்ய வேண்டும் என்று கருதுகிறேன்.
இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.
கபில் சிபல்
மத்திய சட்ட மந்திரி கபில் சிபல் கூறியதாவது:–
ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்களுக்கு மன்னிப்பு அளிக்கக்கூடாது. இதுதான் அட்டர்னி ஜெனரலின் நிலைப்பாடு. அதன்பிறகும், இந்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ளது. இந்த தீர்ப்புக்கு நாம் இயல்பாகவே கட்டுப்பட வேண்டும். எங்களுக்கு இதில் உடன்பாடு இருக்கலாம், இல்லாமல் போகலாம். ஆனால், நாம் கட்டுப்பட வேண்டும்.
அதே சமயத்தில், பாராளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சல் குருவை தூக்கில் போட வேண்டும் என்று கூக்குரலிட்ட பா.ஜனதா, இந்த தீர்ப்பு பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. இது ஏன் என்று அக்கட்சி விளக்கம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு கபில் சிபல் கூறினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக