லண்டன்:இங்கிலாந்தில் இந்திய பல் டாக்டர் ஒருவர், சுகாதார துறை
அதிகாரிகள் கொடுத்த நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொண்டது அம்பலமாகி உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.இங்கிலாந்தின் யார்க்ஷயர் பகுதியில் வசித்தவர் ஆனந்த் காமத் (42). இவரது மனைவி ரஜினிபிரசாத். இருவரும் பல் டாக்டர்கள். யார்க்ஷயர் அருகே லீட் என்ற பகுதியில் உள்ள ரோத்வெல் டெண்டல் சர்ஜரி மருத்துவமனையில் பணியாற்றினர். இந்த மருத்துவமனை இங்கிலாந்தின் தேசிய மருத்துவ சேவை துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. லீட் பகுதியிலேயே பல் டாக்டர்கள் இல்லை என்று கூறப்படுகிறது. எனவே, ரோத்வெல் மருத்துவமனையில் பணியாற்றிய ஆனந்த், ரஜினி பிரசாத்துக்கு பணிச்சுமை அதிகரித்தது.
சராசரியாக மற்ற டாக்டர்கள் பார்ப்பதை விட 4 மடங்கு நோயாளிகளுக்கு தினமும் சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இதனால் இந்த பகுதியில் ஆனந்த் காமத் மிகவும் பிரபலம் அடைந்தார். மேலும் சிகிச்சை கட்டணமும் மிக குறைவாக வசூலித்துள்ளார். மேலும், கணவன் மனைவி இருவரும் இந்த பகுதியில் சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான நோயாளிகளுக்கு சிகிச்சை கொடுத்துள்ளனர். இது பல் டாக்டர்களின் சாதனையாக பதிவாகி உள்ளது. இதனால் இங்கிலாந்து சுகாதார துறை அதிகாரிகளுக்கு இவர் மீது பொறாமை ஏற்பட்டதாக தெரிகிறது.
இவரது வளர்ச்சியை பொறுக்காத தேசிய சுகாதார துறை அதிகாரிகள் ஆனந்துக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக ஏற்கனவே 2 முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்நிலையில் நிர்வாக ரீதியாக சரியான தகவல்களை பதிவு செய்யவில்லை, நோயாளிகள் குறித்த முறையான அறிக்கைகளை அனுப்பவில்லை என்று தேவையில்லாத குற்றச்சாட்டுகளை சுமத்தி ஆனந்துக்கு சுகாதார துறை அதிகாரிகள் நெருக்கடி கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் ஆனந்த் காமத் சம்பவத்தன்று தனது கை நரம்பை அறுத்து கொண்டு படுக்கையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். கணவன் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரஜினி பிரசாத், அதிகாரிகளின் டார்ச்சர் தாங்க முடியாமல்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றார். இதுகுறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என இங்கிலாந்து பல் டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இந்த சம்பவம் இங்கிலாந்திலும், இந்தியாவிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..tamilmurasu.org
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக