ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

புதிய பிரதமராக யாரை நியமிப்பது

புதிய பிரதமராக யாரை நியமிப்பது என்பது தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் ஜனாதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  அமைச்சர்களான தி.மு. ஜயரத்ன, மைத்திரிபால சிறிசேன மற்றும் பசில் ராஜ பக்ஷ ஆகியோரில் ஒருவரையே பிரதமராக நியமிக்க வேண்டுமென்று கட்சியின் முக்கியஸ்தர்கள் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் நம்பகமான செய்திகள் தெரிவிக்கின்றன.
கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற பசில் ராஜ பக்ஷவை பிரதமராக நியமிக்க வேண்டு மென இந்தக் கட்சியின் முக்கியஸ்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அவ்வாறு வழங்கப்படாவிடின் வெளி விவகார அமைச்சுப் போன்ற முக்கிய அமைச்சுப் பொறுப்பு ஒன்றினை அவருக்கு வழங்க வேண்டுமென்றும் அவரகள் கேட்டுக் கொண்டதாகவும் அந்த வட் டாரங்கள் தெரிவித்தன.
கம்பஹா மாவட்டத்தில் 4,25,861 அதி கூடிய விருப்பு வாக்குகளை பசில் ராஜபக்ஷ பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளர்களில் அதி கூடிய விருப்பு வாக்குளைப் பெற்றவர் என்ற பெருமையும் இவரையே சாரும்.
1994 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் இதே மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க 4,64,588 வாக்குகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் மீண்டும் இவ்வாரம் ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, புதிய அமைச்சரவை நியமிப்பது தொடர்பில் நேற்று முன்தினம் கட்சி முக்கியஸ்தர்களுடன் ஜனாதிபதி மந்திராலோசனை நடத்தியுள்ளார்.
இந்த வாரம் புத்தாண்டு விடுமுறைக்குப் பின்னர் மீண்டும் கூடி இது குறித்து ஆலோசித்து, அமைச்சரவைப் பெயர் பட்டியலைத் தயாரிக்கவுள்ளதாகக் கூட்டமைப்பின் முக்கியஸ்தரொருவர் தெரிவித்தார். அமைச்சுகளை நிரல்படுத்தி, அவற்றினை  இணைத்து குறைந்த எண்ணிக்கையிலானோரை அமைச்சரவைக்கு நியமிப்பது குறித்தும் இந்த வாரம் ஆராயப்படவுள்ளது.

உதாரணமாக தபால்துறைக்கு ஓர் அமைச்சு, தொலைத்தொடர்புக்கு என்றொரு அமைச்சு, ஊடகத்துறைக்கென பிறிதொரு அமைச்சு என்றில்லாமல் இவை அனைத்தினையும் ஒன்று படுத்தி தபால், தொலைத்தொடர்புகள் தகவல், ஊடகத்துறை அமைச்சு என்று ஓர் அமைச்சினையே உருவாக்கும் சாத்தியமே பெரும்பாலும் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, டக்ளஸ் தேவானந்தா, ஆறுகம் தொண்டமான் றிசாட் பதியுதீன், ஏ.எல். எம். அதாவுல்லா, ஏ.எச்.எம். பௌஸி, விநாயகர்த்தி முரளிதரன் (தேசியப்பட்டியல்) ஆகியோருக்கு அமைச்சரவையில் மீண்டும் இடமளிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.    மேலும், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் தேசியப் பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஷான் சண்கநாதன், ஆகியோருக்கு பிரதியமைச்சர் பதவிகள் வழங்கப்படலா மெனவும் நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை: