புதன், 7 ஜனவரி, 2026

பாஜக ஆட்சி அமைய எடப்பாடி பாடுபடுகிறார் : முதல்வர் ஸ்டாலின் - அமித்ஷா செய்த நல்ல காரியம் : நன்றி சொன்ன முதல்வர் ஸ்டாலின்

 மின்னம்பலம் -Kavi : திண்டுக்கல் மாவட்டம், வேலுநாச்சியார் வளாகத்தில் இன்று (ஜனவரி 7) நடைபெற்ற அரசு விழாவில்  முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார். 
அப்போது முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 
அமைச்சர்களுக்கு பாராட்டு
பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர்,  “எங்களைப் பொறுத்தவரையில், இது ‘ஐ.பி.’ மாவட்டம். திண்டுக்கல் பூட்டு எவ்வளவு உறுதியானதோ, அதே அளவிற்கு உறுதியுடன் இந்த மாவட்டத்தை கட்டிக் காத்து, வளர்ச்சியை நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார் நம்முடைய  அமைச்சர் ஐ.பி.



அதேபோல, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதனால்தான் தொடர் வெற்றிக்கு சொந்தக்காரராக இருக்கிறார்” என்று பாராட்டினர்.

அமித் ஷாவா? அவதூறு ஷாவா?

பின்னர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கி பொங்கல் பணம், அரசு ஊழியர்களுக்கான டாப்ஸ் திட்டம், மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கியது என அரசின் திட்டங்களை பட்டியல் போட்டு பேசிய ஸ்டாலின், “ நம்முடைய விடியல் ஆட்சியில், ஏதாவது ஒரு திட்டத்தில் எப்படியாவது எல்லோருக்கும் பயன் கிடைத்துவிடுகிறது! மக்கள் நலனுக்காக நாம் செயல்படுத்தும் திட்டங்களை குறை சொல்ல முடியாதவர்கள், இல்லாத பிரச்சினைகளை எல்லாம் உருவாக்கி குளிர் காயலாமா? என்று நினைக்கிறார்கள்! 

அண்மையில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வந்தார். செய்திகளில் பார்த்திருப்பீர்கள். அவர் பேசியதெல்லாம் பார்த்தபோது, அவர் “அமித் ஷா”-வா? இல்லை, “அவதூறு ஷா”-வா? என்று சந்தேகம் வருகிறது! அந்தளவிற்கு உண்மைக்குப் புறம்பாக பேசிவிட்டு சென்றிருக்கிறார். 

தமிழ்நாட்டில் இந்து சமய நம்பிக்கைகள், வழிபாட்டு உரிமைகளுக்கு முடிவுகட்டும் வகையில், நம்முடைய தமிழ்நாடு செயல்படுவதாக அமித்ஷா பேசிவிட்டு சென்றிருக்கிறார். இதற்காக என்னுடைய கடுமையான கண்டனத்தை உங்கள் மூலமாக, இந்த விழாவின் மூலமாக, இந்த நிகழ்ச்சியின் மூலமாக தெரிவித்துக்கொள்கிறேன். அவருக்கு தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை போல! 

நம்முடைய அரசு பொறுப்பேற்றதிலிருந்து இப்போது வரை சுமார்
4 ஆயிரம் திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு அதாவது, அவருக்கு புரியும் மொழியில் சொல்ல வேண்டும் என்றால், கும்பாபிஷேகம் நடத்தியிருக்கிறோம்! இப்படியொரு சாதனையை நீங்கள் ஆளுகின்ற பாஜக மாநிலங்களில் செய்திருக்கிறீர்களா? கண்டிப்பாக இருக்காது. 

அதுமட்டுமல்ல, 997 திருக்கோயில்களுக்கு சொந்தமான 7 ஆயிரத்து 701 கோடி ரூபாய் மதிப்பிலான 7 ஆயிரத்து 655 ஏக்கர் நிலங்களை  மீட்டிருக்கிறோம். உண்மையான பக்தர்கள் நம்முடைய அரசைப் பாராட்டுகிறார்கள். 

தலைமைச் செயலகத்தில் வாரத்தில் எப்படியாவது இரண்டு நாட்கள் இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த பணிகளை நான் தொடங்கி வைத்து அந்த விழாவில் பங்கேற்றேன். நம்முடைய ஆட்சியில், இந்து சமயம் சார்ந்து என்னென்ன செய்திருக்கிறோம் என்று ஒரு நாள் முழுவதும் பேசுகின்ற அளவிற்கு சாதனைகள் பெரிய பட்டியலே இருக்கிறது. அதனால் தான் பக்தர்கள் விரும்பும் ஆட்சியாகதான் திராவிட மாடல் ஆட்சி இருக்கிறது, ஆன்மீகப் பெரியவர்கள் விரும்பும் ஆட்சியாக இருக்கிறது. அனைத்து சமயத்தவர்களின் நம்பிக்கைக்கும் மதிப்பளித்து, அவர்களின் மத உரிமைகளை காப்பாற்றும் ஆட்சியை நடத்திக் கொண்டு வருகிறோம். 

இப்படிப்பட்ட நம்முடைய தமிழ்நாட்டில் இந்துக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக துளியும் உண்மையில்லாத குற்றச்சாட்டை உள்துறை அமைச்சர் சொல்வது அவருடைய பதவிக்கு கண்ணியமல்ல. உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், கலவரம் செய்யவும், பிளவு ஏற்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்களின் எண்ணம்தான் தமிழ்நாட்டில் ஈடேறவில்லை! அது இனியும் நடக்காது! நடக்கவும் விடமாட்டோம்! இந்த ஸ்டாலின் இருக்கின்றவரை அது நடக்கவே நடக்காது!  வெளிப்படையாக சொல்லவேண்டும் என்றால், ஒரு சிலர், இங்கு இப்படி பேசி, வடமாநிலங்களில் வெறுப்பு பிரசாரம் செய்யலாமா என்பதுதான் அவர்களின் எண்ணம்! 

தமிழ்நாடு வந்த உள்துறை அமைச்சர் அவதூறு மட்டும் பரப்பிவிட்டு செல்லவில்லை. ஒரு நல்ல காரியத்தையும் செய்துவிட்டு சென்றிருக்கிறார். நாம் கேட்க வேண்டிய கேள்வியை அவரே கேட்டுவிட்டார். நம்முடைய வேலையை அவர் இன்னும் ஈசியாக்கிவிட்டார்! அதற்காக நான் அவருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். 

“தமிழ்நாட்டில் மோடி ஆட்சி அமைய வேண்டுமா… வேண்டாமா?” என்று மக்களைப் பார்த்து அமித் ஷா கேட்டிருக்கிறார். ஐயா, இதையேதான் நாங்களும் சொல்கிறோம்! 2026 தேர்தல் என்பது, “தமிழ்நாட்டை நாங்கள் ஆளவேண்டுமா? இல்லை, எங்கேயோ டெல்லியில் இருந்து, நமக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் ஆள வேண்டுமா? என்று முடிவு செய்வதற்கான தேர்தல்! இது தமிழர்களின் சுயமரியாதைக்கு விடப்பட்டிருக்கக்கூடிய சவால்!” 

பா.ஜ.க.வின் ‘ப்ராக்சி’ ஆட்சி

“அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்தால், பா.ஜ.க.தான் தமிழ்நாட்டை ஆளும்” என்று நாங்கள் சொல்லி புரிய வைக்க வேண்டிய அவசியமில்லை, அமித் ஷா நேரடியாகவே ஒப்புதல் வாக்குமூலமாக தந்திருக்கிறார்! 

நீட்-ஐ விடாப்பிடியாக திணிக்கும் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை விடுவிக்காமல், தேசிய கல்விக் கொள்கையை திணிக்கும், தொகுதி மறுவரையறை என்கிற பெயரில் தமிழ்நாட்டின் ஜனநாயக வலிமையை குறைக்கும், வட மாநிலங்களில் தமிழர்களை கொச்சைப்படுத்தும், BJP ஆட்சி அமையதான் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பாடுபடுகிறார்! 

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் ‘ப்ராக்சி’ ஆட்சி நடந்தது! கடந்த 5 ஆண்டுகளாகதான் அதில் இருந்து தமிழ்நாடு மீண்டு தலைநிமிர ஆரம்பித்திருக்கிறோம். இப்போது நேரடியாகவே பா.ஜ.க. ஆட்சி என்று சொல்லிகொண்டு வருகிறார்கள்! 

11 ஆண்டுகளாக ஒன்றியத்தில் நடைபெறுகின்ற N.D.A. ஆட்சியில் தமிழ்நாட்டிற்காக ஒரு துரும்பை கூட கிள்ளிப் போடாத உங்களை தமிழ்நாட்டு மக்கள் நம்பத் தயாராக இல்லை! 

2019, 2021, 2024-என்று கடந்த மூன்று பொதுத் தேர்தல்களிலும் படுதோல்வியை பரிசாக தந்ததும் உங்களுக்கு அது புரியவில்லையா? தமிழ்நாட்டிற்கு ஓரவஞ்சனை செய்வதை நீங்கள் மாற்றிக்கொள்ளாதபோது, தமிழர்கள் மட்டும் தங்களுடைய முடிவை மட்டும் எப்படி மாற்றிக் கொள்வார்கள்? 

மக்கள் எப்போதும் நம்முடைய அரசு பக்கம் தான் இருக்கிறார்கள்! மறுபடியும் நாங்கள்தான் வருவோம்! நல்லாட்சியைத் தொடர்வோம்! எதிலும் நம்பர் ஒன், அனைத்துத் துறையிலும் ஏற்றம் என்று இதுவரை காணாத வளர்ச்சியை நோக்கி தமிழ்நாட்டை கொண்டு செல்வோம். திராவிட மாடல் 2.0-வில் இன்னும் பெரிய சாதனைகளைப் படைப்போம்” என்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பல

கருத்துகள் இல்லை: