வியாழன், 13 நவம்பர், 2025

தமிழகத்தில் 78 சதவிகிதம் SIR படிவங்கள் விநியோகம்

 மின்னம்பலம் - Pandeeswari Gurusamy : தமிழகத்தில் 78 சதவிகிதம் SIR படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டு விட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. 
பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதைபோல் தமிழகத்திலும் நடைபெறும் என்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.



இந்நிலையில் தேர்தல் ஆணையம் தமிழகம் உள்ளிட்ட 9 மாநிலங்களிலும் 3 யூனியன் பிரதேசங்களிலும் நவம்பர் 4ம் தேதி SIR பணிகளை தொடங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் சுமார் 5 கோடி பேருக்கு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழகத்தில் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில் சுமார் 5 கோடி பேருக்கு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுவரை 78.09 சதவிகிதம் SIR ஆர் படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

லட்சத்தீவில் முழுமையாக SIR படிவங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் கோவாவில் 99.99 சதவிகிதமும், அந்தமான் நிக்கோபாரில் 89.22 சதவிகிதமும் படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

சத்தீஸ்கரில் 63.75 சதவிகிதமும், குஜராத்தில் 88.08 சதவிகிதமும், கேரளாவில் 49.55 சதவிகிதமும், மத்தியபிரதேசத்தில் 53.83 சதவிகிதமும், புதுச்சேரியில் 93.04 சதவிகிதமும், ராஜஸ்தானில் 70.94 சதவிகிதமும், உத்தரபிரதேசத்தில் 69.95 சதவிகிதமும், மேற்கு வங்கத்தில் 88.8 சதவிகிதமும் SIR படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நிலவரம் என்ன?

தமிழ்நாட்டில் 6,41,14,587 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 6,41,14,582 கணக்கெடுப்பு படிவங்கள் அச்சிடப்பட்டு 5,00,67,045 படிவங்கள் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 68,467 வாக்குச் சாவடி அலுவலர்களும் 2,11,445 வாக்குச்சாவடி முகவர்களும் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் அதிக வாக்குச்சாவடி முகவர்களை நியமிக்குமாறு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: