![]() |
![]() |
“என்னை ஏமாற்றிவிட்டார் ஜெயலலிதா!” - வருந்தி பேசிய ஸ்ரீதர்
புகழ் வெளிச்சத்திலிருந்து ஒதுங்கிய கையோடு வழக்கம் போலவே சினிமா உலகம் டைரக்டர் ஸ்ரீதரை மறந்துவிட்டது. கமல்ஹாசனின் ‘அவ்வை சண்முகி’ பட பூஜைக்கு இரண்டு பக்கமும் ஆட்கள் கைத்தாங்கலாகப் பிடித்து வர, டைரக்டர் ஸ்ரீதர் வந்திருந்தார்.
ஒன்றரை வருடங்களுக்கு முன்பு, ஒரு நாள் காலையில் படுக்கையை விட்டு எழ முயன்றபோது ஸ்ரீதரின் உடல் இடதுபக்கம் இயக்கமின்றிப் போயி ருந்தது. அன்று தொடங்கி இன்றுவரை பிசியோ தெரபியும் வேறுபல சிகிச்சைகளும் தொடர்ந்தபடியே இருக்கின்றன. தி.நகர் வெங்கட்ராமன் தெருவில், ஸ்ரீதரின் வீட்டில் அவரைச் சந்தித்தபோது, அடக்க முடியாத உணர்ச்சிக் கொந்தளிப்புடன் பேசினார்…
“என் உடம்பு நிலைமை இப்படி ஆகிப்போச்சுனு தெரிஞ்சதும், நான் எதிர்பார்த்த முக்கால்வாசிப்பேர் வந்து எனக்கு ஆறுதலும் தேறுதலும் சொல்லிவிட்டுப் போனாங்க. முந்தாநாள் ரஜினி வந்து ரொம்ப நேரம் பேசிட்டுப் போனார். ஆனா, அஞ்சு வருஷம் முதலமைச்சரா இருந்த ஜெயலலிதா போன்லகூட ‘என்ன’னு ஒரு வார்த்தை விசாரிக்கலே!
‘வெண்ணிற ஆடை’ படத்துக்காக நிர்மலாவையும் ஜெயலலிதாவையும் ஃபிக்ஸ் பண்ணிட்டோம். கடைசி நேரத்தில், ஜெயலலிதா அந்த ரோலுக்கு சரிப் படாதுன்னு நான் ஒதுக்கிட்டேன். அவங்க அம்மா சந்தியா ஓடிவந்து என்கிட்டே எப்படியெல்லாம் மன்றாடினாங்கனு பசுமையா நினைவிருக்கு! ‘வெண் ணிற ஆடை’ படத்துல ஜெயலலிதாவை நான் அறி முகப்படுத்தியது அவங்களுக்கு ஒரு திருப்புமுனை. அப்புறம்தான் வரிசையான சினிமா வாய்ப்புகள், எம்.ஜி.ஆர். அறிமுகம், அரசியல் வாழ்க்கை எல்லாம் வந்தது!” – தடித்த தனது மூக்குக் கண்ணாடியைக் கழற்றிவிட்டுத் துடைத்துக் கொண்டார் ஸ்ரீதர்.
“தெரிஞ்சவங்களுக்கு உடல்நலக் குறைவுன்னா நேர்ல போய் விசாரிப்பது எல்லோருக்கும் தெரிஞ்ச நாகரிகம். இதை ஜெயலலிதாகிட்டே எதிர்பார்த்தேன். ஏமாற்றிவிட்டார். ‘கான்வென்ட்’ படிப்பு அவங்களுக்கு இவ்வளவுதான் சொல்லிக் கொடுத்திருக்குபோல!
தன்னோட வளர்ப்பு மகன் கல்யாணம் நடந்த போது அவங்க எத்தனையோ பழைய நண்பர்களை எல்லாம் நினைப்பு வெச்சுக்கிட்டு அழைப்பிதழ் அனுப்பினாங்க. அப்பவும் எதிர்பார்த்தேன், நமக்கும் பத்திரிகை வரும்னு. ஏமாந்துட்டேன். சிவாஜி சார் வீட்டுலேர்ந்து பத்திரிகை வந்தது.
இருந்தாலும், அந்தக் கல்யாணத்துக்குப் போக என் மனசு ஒப்புக்கலே!
கடைசியா நான் படிச்ச அவங்களோட ஒரு பேட்டியில், ஏதோ ஒரு கன்னடப் படத்தில்தான் அவங்க அறிமுகம் ஆன மாதிரி சொல்லியிருக்காங்க. அந்தக் கன்னடப் படத்தோட அப்படியே விட்டிருந்தா, தமிழ்நாட்டு முதல்வர் பதவி வரை வந்திருப்பாங்களா? ‘வெண்ணிற ஆடை’ படம் பற்றியோ, என்னைப் பற்றியோ அவங்க எங்கேயும் சொல்லலை! அப்படிச் சொல்லணும்னு நானும் எதிர்பார்க்கலை. ஆனா, இப்படிப்பட்ட நாகரிகம் உள்ள ஒருத்தரைத்தான் நாம அறிமுகப்படுத்தினோம்னு நினைக்கறப்ப கஷ்டமா இருக்கு!”
விடைபெறும்போது ஸ்ரீதர் அழுத்தமாகச் சொன்னார்: “என்மேல் அனுதாபப்படற மாதிரி எதுவும் எழுதிடாதீங்க. நான் தன்னம்பிக்கையோட தைரியமாத்தான் இருக்கேன்!”
இணையத்தில் இருந்து எடுத்தது
இந்த கட்டுரையை உண்மையில் யார் எழுதியவர் என்றே தெரியவில்லை.
பல காப்பி பேஸ்ட் எழுத்தாளர்களின் கைவண்ணத்தில் இதன் மூல பதிவரின் பெயரே மறைந்து விட்டது.
நானும் பலவிதங்களில் தேடிப்பார்த்தேன். கண்டுபிடிக்க முடியவில்லை
யாரவது தெரிந்தால் கூறுங்கள்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக