tamil.oneindia.com - Yogeshwaran Moorthi : சென்னை: அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜகவுக்கு 20 தொகுதிகள் வரை ஒதுக்க எடப்பாடி பழனிசாமி முன் வந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
40 தொகுதிகளுக்கான பட்டியல் அதிமுக தரப்பில் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் இருந்து 20 தொகுதிகளை பாஜக தேர்வு செய்ய அறிவுறுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், ஏப்ரல் மாதமே அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டது.
இதன்பின் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை சந்திப்போம்.. தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
தற்போது தென் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமியின் கவனம் திரும்பி இருக்கிறது.
எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்திற்கு பாஜகவினர் ஆதரவு அதிகமாக இருந்து வருகிறது. பாஜக சார்பாக தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர்கள், அதிமுக ஆதரவு இல்லாமல் வெல்ல முடியாது என்பதை உணர்ந்து எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே டிசம்பர் மாதத்திற்குள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சியை இறுதி செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் மற்ற கட்சிகளின் கூட்டணி உறுதியாவதற்கு முன்பாக அதிமுகவிடம் இருந்து தாங்கள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையை இறுதி செய்வதில் பாஜக தீவிரமாக உள்ளது. அண்மையில் டெல்லி சென்ற தமிழக பாஜக தலைவர்களிடம் இதுதொடர்பாக அமித்ஷா பேசி இருப்பதாக கூறப்படுகிறது. பாஜக தரப்பில் 50 தொகுதிகள் வரை பாஜக கேட்பதாக தகவல் கிடைத்துள்ளது.
2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட்டு 4ல் மட்டுமே வென்றது. ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு 18 சதவிகித வாக்குகள் இருப்பதால், இம்முறை கூடுதல் தொகுதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. இதனால் மாவட்டத்திற்கு ஒரு தொகுதியாவது பெற வேண்டும் என்பதில் பாஜக ஆர்வமாக உள்ளது.
Recommended For You
நான் சொன்னதை எடப்பாடி செய்யவில்லை என்றால்.. என் பிளான் இதுதான்.. செங்கோட்டையன் சொன்ன மேஜர் திட்டம்
ஆனால் எடப்பாடி பழனிசாமியோ 20 தொகுதிகள் மட்டுமே அளிக்கப்படும் என்று கூறி இருக்கிறார். அதிமுக சார்பாக 40 தொகுதிகளின் பட்டியல் அளிக்கப்படும் என்றும், அதில் இருந்து பாஜக 20 தொகுதிகளை தேர்வு செய்து கொள்ளலாம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். இதனால் பாஜக தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே பாஜக 20க்கும் அதிகமான தொகுதிகளில் போட்டியிட்டது. இதனால் குறைந்தது 35 தொகுதிகளையாவது அதிமுகவிடம் இருந்து பெற வேண்டும் என்று பாஜக நிர்வாகிகள் தலைமையிடம் அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி இறங்கி வருவாரா என்பது கேள்விக்குறி தான்.
ஆனால் அமித்ஷா தரப்பில் தொகுதிகள் குறைந்தாலும், இம்முறை அதிக எம்எல்ஏ-க்களை பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அதனால் வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள தொகுதிகளை கேட்டுப் பெற வேண்டும் என்றும், தொகுதிகள் இறுதியான பின் பாஜகவினர் தீவிரமாக அரசியல் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று கூறியதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக