சனி, 9 ஆகஸ்ட், 2025

11- ஆம் வகுப்பு நுழைவுத் தேர்வு அனுமதி ரத்து! தமிழக அரசு புதிய கல்விக்கொள்கை

 கலைஞர் லெனின் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (8.8.2025) சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், “தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025-பள்ளிக்கல்வி”யை வெளியிட்டார். 
மேலும், முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் மடிக்கணினிகளை வழங்கி வாழ்த்தினார்.



“தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025 – பள்ளிக் கல்வி” செயற்கை நுண்ணறிவிலிருந்து காலநிலை அறிவியல் வரை பள்ளிக் கல்விக் கொள்கை-2025, எதிர்காலத்திற்கு ஆதாரமாக உள்ள கல்வியாகும். பள்ளிக்கல்வி செயல்பாடுகளில் ரோபோடிக்ஸ், தரவு அறிவு மற்றும் நிதித் திட்டமிடுதல் ஆகியவற்றை இணைக்கும் போது மாணவர்களுக்கு எதிர்கால வேலைவாய்ப்புகளுக்குத் தேவையான திறன்களைப் பெறுவதுடன் இன்றைய சவால்களையும் எதிர்கொள்ள இயலும். பல்வேறு பாடங்களை ஒருங்கிணைத்துக் கற்றல், கூர்ச்சிந்தனை, புதியன புனைதல், மின்னணு அறிவு போன்றவற்றை மேம்படுத்துகின்றன.

இப்புதிய பள்ளிக்கல்வி கொள்கையானது, எதிர்காலத்திற்கு தேவையான திறன்களைக் கொண்ட கற்போர்களை வளர்த்தல், தமிழ்நாட்டின் புதிய கலைத் திட்டம் மனப்பாடம் என்ற முறையிலிருந்து விடுபட்டு கற்பதில் ஆர்வம், படைப்பாற்றல் மற்றும் பண்பாட்டுப் பெருமை ஆகியவற்றால் மாற்றியமைத்து, மாணவர்களை வினாக்கள் கேட்கவும், கண்டறியவும், புதுமையாக சிந்திக்கவும் ஊக்குவிப்பதோடு, பாடங்கள் தமிழ்நாட்டின் வளமான இலக்கிய மரபு, சமூக இயக்கங்கள் போன்றவற்றை சிறப்பிக்கும் வகையில் அமைத்தல், TN - SPARK செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ் ஆகிய எதிர்காலத்திற்குத் தேவையான திறன்களை வளர்க்கும் கல்வியைக் கற்பித்து இளம் மனங்களை வளரும் தொழில்நுட்பத்துடள் தூண்டச் செய்தல், கலைக் கல்வி பராம்பரிய முறையிலான தெருக்கூத்து மற்றும் கரகாட்டம் ஆகிவற்றைக் கொண்டு பண்பாடு மற்றும் படைப்பாற்றல் குறித்த வகுப்பறைக்கு அப்பாற்பட்ட கல்வி, உடற்கல்வியானது பாடம் சாரா செயல்பாடாக அமையாமல் அடிப்படையானதாக அமைத்தல்;

அபரிதமான தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் வளர்ந்து வரும் சிக்கலான அமைப்புமுறை ஆகியவற்றை கொண்டுள்ள மாறிவரும் உலகத்திற்கான வாழ்வியல் திறன்கள், மத்திய இடைநிலைப்பள்ளி வாரியம், இந்திய இடைநிலைக்கல்வி குழுமம் மற்றும் பன்னாட்டுப் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களும்

10-ஆம் வகுப்பு வரை தமிழ் மொழி கற்பதை உறுதி செய்தல், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிகளில் சரளத்தன்மையை ஏற்படுத்துதல், மூன்றாம் வகுப்பிற்குள் ஒவ்வொரு குழந்தையும் புரிதலுடன் வாசித்தல் மற்றும் அடிப்படை கணிதச் செயல்பாடுகளை மேற்கொள்ளுதல், ஒவ்வொரு கல்வி வட்டத்திலும், உத்தம வளங்கள், பயிற்சியளிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களைத் தூண்டும் தொலைநோக்குடன் செயல்படும் முன்னோடி பள்ளிகளை உருவாக்குதல், மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகள் திறனும் விருப்பமுள்ள ஆனால் பின்தங்கிய பின்னணியிலிருந்து வரும் மாணவர்களுக்கான வாய்ப்பு மையங்களாக உருவாக்குதல்;

கல்வி தொலைக்காட்சி மூலமாக மாணவர்களுக்கு தரமான கற்பித்தல் நிகழ்ச்சிகளையும் மணற்கேணி செயலி மூலமாக வினாடி-வினா, அனிமேஷன்கள் மற்றும் விளக்க வீடியோக்கள் வழியாக மாணவர்களுக்கு தனிப்பயன் கற்றலுக்கான வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இவ்விரண்டையும் இணைத்து ஒருங்கிணைந்த டிஜிட்டல் கல்வி சூழலை உருவாக்கி, “ஒவ்வொரு வீடும் ஒரு வகுப்பறை” எனும் கொள்கை நோக்கத்தை நடைமுறைப்படுத்துதல், அனைவரும் நுழையக்கூடிய வசதியான வளாகங்கள் (accessible infrastructure), அனைத்து வகை மாணவர்களும் இணைந்து கற்கும் வகுப்பறைகள் (inclusive classrooms), ஆதரவான தொழில்நுட்பங்கள் (assistive technologies), கல்விச் சமத்துவத்தை மதிப்பீடு செய்யும் பங்குத் தணிக்கைகள் (Equity Audits) போன்ற முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்;

மதிப்பெண்களிலிருந்து திறன்மிக்க கற்றலுக்கு பயணத்திடும் வகையில் திறனடிப்படையிலான வளர்ச்சி சார்ந்த மதிப்பீடுகளை முன்னிறுத்திடும் வகையில் திட்டங்கள் (projects), வாய்மொழி தேர்வுகள் (oral tests), சகமாணவர்களின் கருத்தளிக்கைகள் (peer feedback), மாணவர் வளர்ச்சி கோவைகள் (portfolios) போன்ற பல்வேறு முறைகள் மூலம் மதிப்பீடுகளை மேற்கொள்ளுதல், பள்ளிகளை வெறும் கல்விக் கட்டிடங்களாக மட்டும் அல்லாமல், பசுமைசார்ந்த ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் மாணவர் நட்பு சூழலுடன் கூடிய கற்றல் வளங்களாக மாற்றுதல், “நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் தொழில் மட்டுமின்றி வாழ்க்கைக்கு வழிகாட்டிடும் வகையில் 9-ஆம் வகுப்பிலிருந்தே, அனைத்து மாணவர்களுக்கும் தொழில் வழிகாட்டல், ஆர்வங்கள், திறன்கள் மற்றும் வாய்ப்புகளைத் தேடும் பயணங்களை ஒருங்கிணைத்தல் போன்றவற்றை வலியுறுத்திடும் வகையிலும், தமிழும் – ஆங்கிலமும் என்கின்ற இருமொழிக் கொள்கையை அடிப்படையாக கொண்டு தமிழ்நாடு மாநில பள்ளிக் கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: