வியாழன், 13 மார்ச், 2025

ஹோலியை முன்னிட்டு தார்பாய்களால் மூடப்படும் மசூதிகள் : வட மாநிலங்களில் அட்டாவடி

 மின்னம்பலம் - Kavi : ஹோலி பண்டிகையை முன்னிட்டு உத்தரப் பிரதேசத்தில் மசூதிகள் தார்பாய்களால் மூடப்பட்டு வருகின்றன. Mosques covered with tarpaulins
நாடு முழுவதும் குறிப்பாக வட மாநிலங்களில் நாளை ஹோலி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. ரமலான் மாதத்தின் இரண்டாம் வெள்ளிக் கிழமை அன்று ஹோலி பண்டிகை வருகிறது.
அதாவது ஹோலியும், முஸ்லீம்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகையான ரமலான் வெள்ளி தொழுகையும் ஒரே நாளில் வருகிறது.


ஹோலி பண்டிகைக்கு வண்ணங்களை ஒருவர் மீது ஒருவர் பூசி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழகம். எனவே இந்த ஆண்டு வண்ணங்கள் பூசும் போது முஸ்லீம்கள் மீது படக்கூடாது என்றால் அவர்கள் வீட்டை விட்டே வெளியே வரவேண்டாம் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முதல் பாஜக எம்.எல்.ஏ. வரை பலரும் கூறி வருகின்றனர்.

உத்தரப் பிரதேசம் சம்பல் காவல் நிலைய அதிகாரி அனுஜ் குமார் சவுத்ரி, “ஹோலியை ஆண்டுக்கு ஒருமுறை தான் கொண்டாடுகிறோம். அதனால் முஸ்லீம்கள் அன்றைய தினம் வீட்டுக்குள்ளேயே இருங்கள்” என்று கூறினார்

இதைத்தொடர்ந்து பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், “ஹோலி பண்டிகை ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வருகிறது. ஆனால் வருடத்தின் 52 வெள்ளிக்கிழமையும் தொழுகை நடக்கிறது. அதனால் தொழுகை சமயத்தில் கொண்டாட்ட மனநிலையில், மற்றவர்கள் வண்ணங்களை பூச வாய்ப்புள்ளதால் முஸ்லீம்கள் கொண்டாட்டம் முடியும் வரை வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்” என்று உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

உபி தொழிலாளர்கள் துறை அமைச்சர் ரகுராஜ் சிங் கூறுகையில், “இந்த வெள்ளிக்கிழமை தொழுகைக்காக மசூதி செல்லும் முஸ்லீம் ஆண்கள் தங்கள் மீது வண்ணங்கள் படக்கூடாது  என்று நினைத்தால் அவர்கள் தார்பாய்களை அணிந்து செல்லுங்கள்” என்று கூறினார்.

பாஜகவினரின் பேச்சுக்கு நாடு முழுவதிலும் இருந்து கண்டனங்கள் எழுந்த நிலையில், இன்று உத்தரப் பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் மசூதிகள் தார்ப்பாய்களால் மூடப்பட்டு வருகிறது.

உத்தரப் பிரதேசத்தின் சாம்பல் பகுதியில் உள்ள ஜாமா மசூதி உள்பட10 மசூதிகளை திரையிட்டு மூட காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். இதனால் ஹோலி ஊர்வலம் செல்லும் பகுதிகளில் உள்ள ஷாகி ஜமா மசூதி, லடானியா வாலி மசூதி, தானே வாலி மசூதி, ஏக ராத் மசூதி, குருத்வாரா சாலை மசூதி, கோல் மசூதி, கஜூர் வாலி மசூதி, அனார் வாலி மசூதி ஆகிய மசூதிகள் தார்பாய்களால் மூடப்பட்டு வருகின்றன.

அதோடு தொழுகை நேரமும் மாற்றி அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அயோத்தியில் உள்ள சென்ட்ரல் மசூதியின் தலைமை மத குரு முகமது ஹனீப் கூறுகையில், “ஹோலி கொண்டாட்டங்களுக்கு ஏற்றவாறு ஜூமா தொழுகை நேரம் மாற்றப்படுகிறது. அனைத்து மசூதிகளும் பிற்பகல் 2 மணிக்கு பிறகு ஜூமா தொழுகை நடத்த உத்தரவிடப்படுகிறது.

ஹோலி பண்டிகையின் போது முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த அனைவரும் பொறுமையாகவும், தாராள மனப்பான்மையுடனும் இருக்க வேண்டும். உங்கள் மீது யாரேனும் வண்ணங்களை பூச வந்தால் புன்னகையுடன் பதிலளித்து அன்பையும், மரியாதையையும் வெளிப்படுத்துங்கள். ஹோலி வாழ்த்துகளை கூறுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

சாம்பல் நகரிலும் மதியம் 2.30 மணிக்கும் ஜூமா தொழுகையை நடத்துவதற்கு முஸ்லிம்கள் முடிவு செய்துள்ளனர்.
பாதுகாப்பு அதிகரிப்பு Mosques covered with tarpaulins

உபி காவல்துறை இயக்குநர் ஜெனரல் (டிஜிபி) பிரசாந்த் குமார், அனைத்து மாவட்ட காவல்துறைத் தலைவர்கள், ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பதற்றம் நிறைந்த இடங்களில் காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையை அதிக அளவில் நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

சாம்பல் துணைப்பிரிவு நீதிபதி வந்தனா மிஸ்ரா, கலவரத்தையும் தடுக்கும் பொருட்டு சுமார் 1,015 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் மட்டுமா? Mosques covered with tarpaulins

உத்தரப் பிரதேசத்தில் மட்டுமல்ல… பிகார் மாநில பா.ஜ.க எம்.எல்.ஏ ஹரிபூசன் தாக்கூரும், முஸ்லீம்கள் ஹோலி பண்டிகையை முன்னிட்டு வெளியே வரக்கூடாது என்று கூறியிருந்தார். இதற்கு ஆர்.ஜே.டி தலைவர் தேஜஸ்வி யாதவ் கண்டனம் தெரிவித்திருந்தார்.

எனினும், பீகாரிலும் பதற்றம் நிறைந்த பகுதிகளில் தார்பாய்களை கொண்டு மசூதிகள் மூடப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், “கடந்த 10 ஆண்டுகளில் நான்கு முறை ஹோலி பண்டிகை வெள்ளிக்கிழமை அன்று வந்துள்ளது. மார்ச் 18, 2022 அன்று, ஹோலி வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது, ஆனால் எந்த சர்ச்சையும் எழவில்லை. இது, தேர்தல் ஆண்டு என்பதால் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுகிறார்கள்.

இந்தியா ஒரு மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக நாடு, அங்கு அனைத்து சாதிகள் மற்றும் மதங்களைச் சேர்ந்தவர்களும் தங்கள் நம்பிக்கையைப் பின்பற்ற உரிமை உண்டு. இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்வது நிர்வாகத்தின் பொறுப்பாகும்” என்று ஜனதா தள தலைவர் அபிஷேக் ஜா கூறியுள்ளார்.

அதுபோன்று மதசார்பின்மையை சீர்குலைக்கும் நோக்கில் பாஜக அரசு செயல்படுவதாகவும், மதங்களைக் கடந்து கொண்டாடப்பட்டு வரும் ஹோலி பண்டிகையை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்றும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

மசூதிகள் மூடப்படுவதால் இஸ்லாமியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். Mosques covered with tarpaulins

கருத்துகள் இல்லை: