சனி, 11 மே, 2024

பாட்டுக்கு மெட்டா மெட்டுக்குப் பாட்டா? மன்னிப்புக் கேட்ட இசை மேதை!

May be an image of 2 people
Gauthaman Munusamy :   பாட்டுக்கு மெட்டா மெட்டுக்குப் பாட்டா? மன்னிப்புக் கேட்ட இசை மேதை!
“பாடலாசிரியர் எழுதித் தரும் வார்த்தைகளுக்குள்ளேயே இசை ஒளிந்து
கொண்டிருக்கிறது. அதைத் தேடிக் கண்டுபிடித்து வெளியே கொண்டு வர வேண்டியது தான் இசையமைப்பாளர் செய்ய வேண்டிய வேலை” – இது மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் சாட்சியம்! இந்தப் பணியைச் சிறப்பாகச் செய்து காட்டியவர் திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன்.
பாடலாசிரியர் எழுதித்தரும் பாடலுக்குத்தான் அவர் இசையமைப்பார். எழுதப்பட்ட வரிகள் மெட்டுக்குள் அடங்காமல் முட்டி மோதினால் அவற்றை விருத்தமாக அமைத்து விட்டு அடுத்த வரியை இசைக்குள் கச்சிதமாக அடக்கிவிடுவார்.
கேட்கும்போது இசைக்குள் அடங்காத வார்த்தையின் அழகு தனியாக மிளிரும். 90% அவரது படைப்புகள் இந்தக் கட்டுக்குள் தான் இருந்தன. அவரது மெட்டு ஒன்று தயாரிப்பாளரால் நிராகரிக்கப்பட்டு விடுமானால், புன்னகையுடன் மெட்டை மாற்றிக் கொடுப்பார் கே.வி.மகாதேவன்.
பல தருணங்களில் பாடலாசிரியர்களோடு உரசல்களும் உண்டு. ‘அபலை அஞ்சுகம்’ என்கிற படத்துக்குப் பாடல் எழுத உவமைக் கவிஞர் சுரதா வந்தார்.
“வெண்ணிலா குடைபிடிக்க வெள்ளி மீன் அலை அடிக்க
விழி வாசல் வழி வந்து இதயம் பேசுது”
எனப் பல்லவி நன்றாகவே வந்து விட்டது. ஆனால், சரணங்கள் சரிவர அமையாமல் இருவருக்குமிடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சுரதாவுக்குச் சுருக்கென்று கோபம் வந்து விட்டது. சடக்கென்று எழுந்து போய் விட்டார். மறுநாள் உடுமலை நாராயண கவி வந்து:
“கொல்லாமல் கொல்லுகிறாய் கோமளமே விழியாலே
சொல்லாமல் சொல்லுகிறாய் சுத்தத் தமிழ் மொழியாலே” என்று அன்றைக்குச் சொற்களின் அடுக்கில் இயற்கையாக வந்தமரும் இசையுடன் எழுதிப் பாடலை முடித்துக் கொடுத்துவிட்டார்.
‘நீங்காத நினைவு’ என்றொரு படம். கே.வி. மகாதேவன் இசை. முதல் முதலாக அவரது இசையில் பாடல் எழுத வந்தார் கவிஞர் வாலி. “என்ன இது? வாலி தோலின்னு ஊர் பேர் தெரியாத புதியவர்களையெல்லாம் பாட்டெழுதக் கூட்டிண்டு வந்திருக்கேள்.” சட் டென்று வார்த்தைகள் தெறித்து விழுந்தன பெரியவரிடமிருந்து.
அவரைச் சமாதானப்படுத்திய தயாரிப்பாளர், இரண்டு பாடல்களை வாலியைக் கொண்டே எழுதவைத்து விட்டார். இளைஞர் வாலிக்கோ மனதுக்குள் குமைச்சல். “இனி அவரோடு பணிபுரியமாட்டேன்” என்று முடிவெடுத்த வாலி,
பின்னாளில் எம்.ஜி.ஆருக்காகத் தனது பிடிவாதத்தைச் சற்று தளர்த்திக் கொண்டார்.
வாலி எழுதிய பாடல்களை கே.வி.மகாதேவனிடம் எம்.ஜி.ஆர். கொண்டு வந்து கொடுக்க வாலியின் வரிகளில் இசை ஏற்கெனவே சம்மனமிட்டு அமர்ந்திருந்ததைத் தனது இசைக் கற்பனையின் வழியாகக் கண்டு கொண்டார் திரையிசைத் திலகம். அந்தக் கணமே அவரது மனதுக்குள் ஓர் உறுத்தல்.
“இது சரியில்லையே... இந்த வாலி எழுதற பாட்டெல்லாம் அருமையாகத் தானே இருக்கு. இரண்டு பேரும் கலந்து பேசிண்டு வேலை செய்தால் இன்னும் சிறப்பா வருமே. அன்றைக்கு ஏதோ ஆதங்கத்துலே பேசிட்டோம். நாம செய்த தப்பை நாமே சரி பண்ணிடுவோம்.” என்று தீர்மானித்தவர், மறுநாள் காலை கொஞ்சமும் கௌரவம் பார்க்காமல் நேராக வாலியின் வீட்டுக்கே வந்து அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ள..
தன்னைவிட வயதில் பெரிய வரும் இசைச் சாதனையாளருமான கே.வி.எம்மின் செயலால் வாலியின் பிடிவாதம் தளர்ந்து, நா.. தழுதழுக்க.. ‘‘அண்ணா..” என்று கதறிவிட்டார். இந்த எதிர்பாரா சந்திப்பின் விளைவு.. வாலி – கே.வி.மகாதேவன் இணைவில் காலத்தைக் கடந்து நிற்கும் பாடல்கள் திரை இசையின் பொன்னேடுகளை நிரப்பிச் சென்றுவிட்டன.
‘சங்கராபரணம்’ – கே.வி.மகாதேவ னின் மகத்தான இசைக்கு மாபெரும் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்தது. அந்த இமாலய வெற்றியை அந்தப் பெரியவர் எப்படி எடுத்துக் கொண்டார்? அந்தப் படத்தில் பாடி தேசிய விருதைப் பெற்ற எஸ்.பி. பாலசுப்ரமணியத்திடம் இப்படிச் சொன்னார் அவர்:
“மணி.. ‘சங்கராபரணம்’ படத்துலே நாம வேலை செய்தோம். அவ்வளவுதான். ஆஹா ஓஹோ.. அப்படி.. இப்படீன்னு பிரஸ்தாபம் பேசிக்கொண்டு இருக்கக் கூடாது.. பத்திரமா இருக்கணும்டா” என்று தனக்குக் கிடைத்த அந்த இமாலய வெற்றியின் கனத்தைத் தலைக்கு ஏற்றிக் கொள்ளாமல் சர்வ சாதாரணமாகக் கடந்து சென்றார்.
- பி.ஜி.எஸ்.மணியன்; pgs.melody@gmail.com
நன்றி: இந்து தமிழ் திசை
Via Kandasamy R

TSounthar Sounthar :  Gauthaman Munusamy kvm ஐ விட எண்ணிக்கையில் இளையராஜா விதம்விதமான பாடல்கள் தந்துள்ளார். நடுநிலை மாறாமல் தான் சொல்லியுள்ளேன்.

Gauthaman Munusamy  : TSounthar Sounthar  KVM ன் தமிழ்ப்பாடல்கள் மட்டுமல்ல தெலுகு பாடல்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு இசையமைப்பாளரின் காலம், சமூகச் சூழ்நிலை, அப்போதிருந்த technology, available resouras, திரைப்படங்களின் தேவைகள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்ட ஆராய்ச்சி தேவை...
விதம் விதமான பாடல்கள் என்று எடுத்துக் கொண்டால், MSV ஐ மிஞ்ச யாருமில்லை..
இளையராஜா ஒரு திறமைசாலி, ஜாம்பவான் தான்.... ஆனால், அவர் ஒருவரே தான் என்ற எண்ணம் வேண்டாம்

கருத்துகள் இல்லை: