மின்னம்பலம் -christopher : அங்கித் திவாரி மீதான லஞ்ச வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு சிறையில் முதல் வகுப்பு வழங்க திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் லஞ்சம் வாங்கியதாக, மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அன்கித் திவாரியை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கடந்த 1ஆம் தேதி கைது செய்தனர்.
இந்தநிலையில், மதுரை மத்திய சிறையில் இருக்கும் அங்கித் திவாரிக்கு முதல் வகுப்பு கேட்டு அவரது தரப்பில் திண்டுக்கல் மாவட்ட முதன்மை நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 12ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி மோகனா முன்னிலையில் நேற்று (டிசம்பர் 15) விசாரணைக்கு வந்தது. அப்போது அங்கித் திவாரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் செல்வம்,
”அவர் மத்திய அரசில் பணிபுரியும் அதிகாரி, முறையாக வருமான வரி தாக்கல் செய்பவர்” போன்ற காரணங்களை அடுக்கி அன்கித் திவாரிக்கு சிறையில் முதல் வகுப்பு வழங்க வேண்டும் என்று வாதிட்டார்.
அரசு வழக்கறிஞர் அனுராதா, அவருக்கு முதல் வகுப்பு வழங்கவே கூடாது என்று வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மோகனா, அங்கித் திவாரிக்கு சிறையில் முதல் வகுப்பு வழங்குமாறு உத்தரவிட்டார்.
இதனையடுத்து மதுரை மத்திய சிறையில் இருக்கும் அங்கித் திவாரி இன்று முதல் வகுப்புக்கு மாற்றப்பட உள்ளார்.
அங்கு அவருக்கு வழக்கமான உணவுடன் கூடுதலாக சப்பாத்தி வழங்கப்படும். வாரத்தில் மூன்று நாட்கள் இறைச்சி வழங்கப்படும்.
தங்கும் அறையில் மின்விசிறி, கட்டில், மெத்தை, நாற்காலி, மேஜை, கொசுவலை, நாளிதழ்கள், தொலைக்காட்சி போன்ற வசதிகளையும் அங்கித் பெறுவார்.
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!
இதற்கிடையே நேற்று அங்கித் திவாரியின் வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனுவை மதுரை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்தது.
மேலும், “அமலாக்கத் துறை அதிகாரியை கைது செய்த தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையின் நடவடிக்கை சட்டரீதியானதுதான். லஞ்சம் வாங்கும் அமலாக்கத் துறை அதிகாரியை கைது செய்யவும், அவரிடம் விசாரணை நடத்தவும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு முழு அதிகாரம் உண்டு என்றும் உத்தரவிட்டது.
இந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அங்கித் திவாரி தரப்பு தயாராகி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக