சனி, 25 நவம்பர், 2023

உத்தராகண்ட் சுரங்கப்பாதை: பசி, பதற்றம், மாயை - சிக்கியவர்கள் சந்திக்கும் ஆபத்துகள் என்ன?

BBC News , பைசல் முகமது அலி  :  உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதைக்குள் சிக்கியிருக்கும் 41 தொழிலாளர்களை மீட்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தத் தொழிலாளர்கள் கடந்த 12 நாட்களாக சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளதால், அவர்களது உடல்நிலை குறித்த கவலைகள் எழுந்துள்ளன.
தொழிலாளர்கள் சுரங்கப்பாதையில் இருந்து மீட்கப்பட்ட பிறகு அவர்களின் உடல்நிலை குறித்து என்ன செய்ய வேண்டும் மற்றும் அவர்கள் உடல் மற்றும் மனரீதியாக என்ன பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பிபிசி ஹிந்தி சேவை வல்லுநர்களிடம் பேசியது.
'சிக்கியிருப்பவர்கள் இடையே விரக்தி ஏற்பட வாய்ப்புள்ளது'
சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள பணியாளர்கள் இடையே விரக்தி முதல் குழப்பம் வரையிலான சூழ்நிலை உருவாகலாம்.



எனவே அவர்களை வெளியே மீட்ட பிறகு, வருங்காலத்தில் மனரீதியாக எந்த பிரச்னையும் அவர்களுக்கு ஏற்டாத வகையில் அவர்களுக்கு விரிவான உளவியல் மதிப்பீடு செய்ய வேண்டும் என்கிறார் ராஞ்சியில் உள்ள மத்திய மனநல மருத்துவக் கழகத்தின் இணைப் பேராசிரியர் டாக்டர் சஞ்சய் குமார் முண்டா.

அவர் கூறுகையில், “இத்தகைய சூழ்நிலைகளில் பாதிக்கப்படுபவர்கள் கேட்பது, வாசனை அல்லது பார்ப்பது போன்ற பல வகையான புலன்களை இழக்கத் தொடங்குவார்கள்.

இதன் முதல் விளைவு ஆழ்ந்த கவலை. அதன்பிறகு அமைதியின்மை படிப்படியாக அதிகரிக்கும். சுரங்கத்திற்குள் சிக்கியிருப்பவர்களோடு மீட்புப் பணியில் ஈடுபடுபர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள். அது ஒரு நல்ல விஷயம்,” எனத் தெரிவித்தார்.

"உணர்வு இழப்பு, ஆழ்ந்த பதற்றம் ஆகியவை வரும்பட்சத்தில் அவர்களிடையே விரக்தி உணர்வும் ஏற்பட வாய்ப்புள்ளது.

சுரங்கப்பாதையில் இருந்து தங்களை வெளியே கொண்டு வர எடுக்கப்படும் முயற்சிகள் முழுமையாக வெற்றி பெறவில்லை என்பதை அவர்கள் அறிந்திருப்பார்கள்.

இது அவர்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதை நினைக்கவே கடினமாக உள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.

டாக்டர் சஞ்சய் கூறும்போது, ​​"சிக்கியுள்ள தொழிலாளர்கள் மத்தியில் நம்பிக்கையை தக்கவைக்க மீட்புக் குழுவினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் கவலை மற்றும் விரக்தியைவிட மோசமானது என்னவெனில், இதுபோன்ற சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் மனக் குழப்பம்.

அது உள்ளிருந்து எழும். இல்லாத விஷயங்களைப் பார்ப்பது அல்லது ஒலிகளைக் கேட்பது போன்ற மாயை (Hallucination) ஏற்படும். இதை மயக்க நிலை என்றும் கூறலாம்."
உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து

"அப்படிப்பட்ட சூழ்நிலையில், யாராவது ஒரு குடும்ப உறுப்பினர் அல்லது நண்பர் அவர்களை அழைக்கும் குரல் கேட்கலாம். பயமுறுத்தும் வடிவங்கள் அல்லது குரல்கள் மூளையில் எதிரொலிக்கலாம். இது அனைவருக்கும் நடக்கும் என்று அவசியமில்லை. ஆனால் சிலருக்கு இது நடக்கும்."

“இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்படும்போது உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படுவதால் இது நிகழ்கிறது. ஒரு நபர் தன்னுடைய பாதுகாப்பு உணர்வை முற்றிலுமாகக் கைவிடும்போது சிந்தனை முற்றிலும் கட்டுப்பாடற்றதாகிவிடும்,” என மருத்துவர் சஞ்சய் தெரிவித்தார்.

மீட்கப்பட்ட பிறகு ஏற்படும் மனநல பாதிப்பு

தொழிலாளர்கள் மீட்கப்பட்ட பிறகும் இந்த அறிகுறிகள் இருக்குமா என்ற கேள்விக்குப் பதிலளித்த பேராசிரியர் சஞ்சய், “நான் இதுவரை உங்களிடம் கூறியது குறுகிய கால எதிர்வினைதான். ஆனால் உள்ளே சிக்கியிருக்கும் அதிர்ச்சி நீங்கியவுடன், இரண்டு நீண்டகால அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும். இதை உளவியல் நிபுணர்கள் பிந்தைய மன உளைச்சல் சீர்கேடு (Post Traumatic Stress Disorder) என்று அழைக்கிறார்கள்."

சுரங்கப் பாதையில் சிக்கியிருப்பவர்கள் உணர்வு இழப்பு, ஆழ்ந்த பதற்றம் ஆகியவற்றை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.

"இதில் பாதிக்கப்பட்ட நபர் ஃப்ளாஷ்பேக்கிற்கு செல்கிறார். சுரங்கப் பாதையில் சிக்கியதைப் போன்ற அதே சூழ்நிலையை அவர் உணர்வார். அவரைச் சுற்றி இருக்கும் சூழல் சாதரணமாக இருந்தாலும் அவர் அந்த சுரங்கப்பாதையில் நிலவிய சூழ்நிலையை மீண்டும் அனுபவிக்கத் தொடங்கும் போது, ​​அவர் மிகவும் பதற்றமடைவார்,” என அவர் தெரிவித்தார்.

இதற்கான சிகிச்சை குறித்துக் கூறிய அவர், "PTSDஐ கண்டுபிடிக்க ஒரு விரிவான உளவியல் மதிப்பீடு இருக்க வேண்டும். இது ஒரு நபரின் மூளை இந்த நிகழ்வு அல்லது எந்த நிகழ்வால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை மதிப்பீடு செய்வதாகும்.

இத்தகைய நிலைமைகள் வெவ்வேறு நபர்களுக்கு வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே, அதன் மதிப்பீட்டிற்குப் பிறகு, எந்த சிகிச்சை முறை மற்றும் யாருடன் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என்பதைத் தீர்மானிக்க முடியும்," எனத் தெரிவித்தார்.

உடல்ரீதியாக என்ன பாதிப்பு ஏற்படும்?
உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து

அவர்கள் வெளியில் வந்ததும் முதலில் அவர்களின் சிறுநீர், ரத்தம், ரத்த அழுத்தம் போன்றவற்றைப் பரிசோதிப்பார்கள் என்கிறார் அரசு நிறுவனத்தின் சுரங்கத் துறை மருத்துவர் டாக்டர் மனோஜ்குமார்.

அவர் கூறுகையில், “உள்ளே சிக்கியவர்கள் ஏற்கெனவே சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற சில நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம். அப்படிப்பட்ட நிலையில், அடிக்கடி உட்கொள்ளும் மருந்துகள் இந்த நோய்களுக்குப் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால், அவர்களுக்கு நோய் அதிகரிக்கலாம். செரிமான சக்தியை பாதிக்கலாம்.

உள்ளே சிக்கியவர்களுக்கு சரியான உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் போனால் மயக்கம் மற்றும் சிறுநீர் கழித்தல் குறையும். அது சிறுநீரகத்தையும் பாதிக்கலாம். உணவின் பற்றாக்குறை உடலை வலுவிழக்கச் செய்யலாம், இது நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும்," என அவர் தெரிவித்தார்.

'பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் மனநிலை பற்றி நாம் யோசிப்பதில்லை'

இந்த மாதிரியான சூழலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களின் மனம் மற்றும் உடல்நலம் குறித்துப் பெரும்பாலும் நாம் யோசிப்பதில்லை என பேராசிரியர் முண்டா தெரிவித்தார்.

சுரங்கப்பாதையில் சிக்கியவர்கள் தூக்கத்தில் சிக்கல்களை எதிர்கொள்ளலாம் அல்லது அவர்களின் மனநிலை பாதிக்கப்படலாம். அத்தகைய சூழ்நிலையில், இந்த பிரச்னைகள் அவர்களின் உறவுகளையும் பாதிக்குமா என்ற கேள்விக்கு டாக்டர் மனோஜ் குமார் பதிலளித்தார்.

​​“சுரங்கப்பாதையிலோ அல்லது சுரங்கப்பாதை போன்ற சூழல் நிலவும் பகுதியிலோ மக்கள் சிக்கிக் கொள்ளும்போது, ​​மூச்சுத் திணறல்தான் மிகப்பெரிய உணர்வு. இதனால் பதற்றம் மற்றும் அமைதியின்மை ஏற்பட்டு, இறுதியில் உடல்நிலை பாதிக்கப்படுகிறது. தூக்கமின்மை பிரச்னை, பசியின்மை பிரச்னைகள் வரலாம்."

மேலும், "நீங்கள் சிக்கிக்கொண்ட இடம் தூசி நிறைந்த இடமாக இருந்தால், ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. இது சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும். இது ஆரம்ப அறிகுறிகள். வெவ்வேறு சூழ்நிலைகள் வெவ்வேறு வழிகளில் மக்களைப் பாதிக்கும்,” என்று டாக்டர் மனோஜ் குமார் கூறினார்.

மேலும், மாட்டிக்கொள்ளும் நேரத்தில் அந்த இடத்தில் ஈரப்பதம் இருந்தால் சுவாசப் பிரச்னை ஏற்படும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

"குளிர்ச்சியால் உடல் உஷ்ணம் குறையத் தொடங்குகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் நுரையீரல் பாதிக்கப்படும். சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும்.

அது இதயத்தையும் பாதித்து படிப்படியாக மற்ற உறுப்புகளும் பாதிக்கப்படும். தாழ்வுநிலையில் ரத்த ஓட்டம் குறைவதால் மூளையின் செயல்பாட்டைப் பாதிக்கலாம்," என மருத்துவர் மனோஜ் தெரிவித்தார்.
 

கருத்துகள் இல்லை: