செவ்வாய், 8 ஆகஸ்ட், 2023

கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. ஹரிபத்மனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க பரிந்துரை! பின்னணி

tamil.oneindia.com  -Nantha Kumar R  : சென்னை: சென்னை கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைதான பேராசிரியர் ஹரிபத்மனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற ஓய்வு நீதிபதி கண்ணன் தலைமையிலான விசாரணை குழு அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் நாட்டியக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள் எழுந்தன.
உதவி பேராசிரியர் ஹரிபத்மன், உதவியாளர்கள் சாய்கிருஷ்ணன், சஞ்ஜித் லால், ஸ்ரீநாத் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். தேசிய மகளிர் ஆணையம், மாநில மகளிர் ஆணையம் விசாரணையை தொடங்கியது. ஹரிபத்மன் உள்ளிட்டவர்கள் தலைமறைவாகினர்.

இதுகுறித்த புகாரில் ஹரிபத்மன் உள்ளிட்டவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஹரிபத்மனை தனிப்படை போலீசார் அதிரடியாக கைதும் செய்தனர். இந்த கைது நடவடிக்கை கடந்த ஏப்ரல் மாதம் 3ம் தேதி மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு கடந்த ஜூன் மாதம் அவருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

கலாஷேத்ரா வளாகத்தில் சாலை அமைப்பதை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் கலாஷேத்ரா வளாகத்தில் சாலை அமைப்பதை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்

மேலும் சம்பவம் குறித்து மாணவிகளிடம் போலீஸ் சார்பில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. மாணவிகள் கூறிய விஷயம் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டது. மேலும் 250 பக்க குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்திரிகை மீது விசாரணை தொடங்க உள்ளது. இதுஒருபுறம் இருக்க ஹரிபத்மனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க விசாரணை குழு பரிந்துரைத்துள்ளது.

மாணவிகள் நடத்திய தொடர் போராட்டத்தின் காரணமாக கலாஷேத்ரா சார்பில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கண்ணன் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவும் மாணவிகளிடம் விசாரணை நடத்தியது. இந்த விசாரணை பற்றிய விபரங்கள் 58 பக்க அறிக்கையாக கலாஷேத்ரா அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதில் அறக்கட்டளை தலைவர் ராமதுரைக்கு பல்வேறு பரிந்துரைகளை விசாரணை குழு வழங்கியது.

அதில் ஹரிபத்மனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவும் அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளது. அறிக்கையின் அம்சங்களை பொதுவெளியில் வெளியிட வேண்டாம் என்றும் விசாரணை குழு அறிவுறுத்தியுள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

English summary

The inquiry committee led by retired High Court Judge Kannan has recommended in the report that Professor Haripadman, who was arrested in the case of sexual harassment of female students in Chennai Kalashetra, should be given maximum punishment.
 

கருத்துகள் இல்லை: