நக்கீரன் : கடந்த மே மாதம் நடைபெற்ற கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை தனித்து நின்று தேர்தலை சந்தித்தன.
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.
அதனைத் தொடர்ந்து முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே. சிவகுமாரும் பதவி ஏற்றுக் கொண்டனர்.
இதையடுத்து அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில் முதல்வர் சித்தராமையா தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது.
சமீபத்தில் நடைபெற்ற கர்நாடக மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் நிபந்தனைகள் இன்றி அனைவரையும் சென்றடையும் வகையில் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா செய்தியாளர்களிடம் பேசுகையில், "மாநில பள்ளிக் கல்விப் பாடத்திட்டத்தில் இந்தாண்டே திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்று முதல்வர் சித்தராமையா விருப்பம் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சியில் பள்ளி பாடத்தில் சில பாடங்களை நீக்கி தேசிய கல்விக் கொள்கைக்கு வழி வகை செய்தது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் மாணவர்களின் விருப்பத்துக்கு ஏற்றார் போன்று பள்ளிப் பாடத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று வாக்குறுதி அளித்து இருந்தோம். எப்படி இலவச வாக்குறுதிகளை அமல்படுத்துகிறோமோ அதேபோன்று பள்ளிக்கல்வித்துறை ரீதியான மாற்றங்களையும் நிறைவேற்றுவோம்.
இந்தாண்டே பள்ளி பாடங்களில் உரிய திருத்தம் மேற்கொள்ளப்பட்டு மாணவர்களுக்கு துணை நூலாக வழங்குவோம். இதனால் மாணவர்களுக்கு எவ்வித சுமையும் கிடையாது. இன்னும் பள்ளிகளில் பாடத் திட்டப்படி வகுப்புகள் தொடங்கவில்லை. எனவே அதற்கான நேரம் இருக்கிறது. எந்த பாடம் எடுக்க வேண்டும். எது வேண்டாம் என்று ஆசிரியர்களுக்கு உரிய முறையில் அறிவுறுத்தப்படும். இந்த வழிமுறைகள் நிறைவடைந்ததும் முதல்வரின் வழிகாட்டுதலின்படி அமைச்சரவை கூட்டத்தில் வைத்து தீர்மானம் நிறைவேற்றப்படும். மேலும் ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் பலிராம் ஹெக்டேவார் பாடம் நீக்கப்படும்" என்று தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக