வெள்ளி, 26 ஆகஸ்ட், 2022

விஜயகாந்த் - கலைஞரை வீழ்த்த ஜெயலலிதா, வைகோ திருமா கம்யூனிஸ்டுகளின் .. யூஸ் அன்ட் த்ரோவான நல்ல மனிதர்

 Pugalendhi Dhanaraj : சில நடிகர்கள் ஷூட்டிங், டப்பிங் சமயங்களில் ஓரிரு டேக்கிற்கு மேல் போய்விட்டால் டென்ஷனாகி விடுவார்கள்,
அதிலும் பப்ளிக்கில் நடக்கும் ஷூட்டிங் என்றால் அவ்வளவு தான்,
அதெல்லாம் டேக் ஓகே தான் நெக்ஸ்ட் ஷாட்டிற்கு போயிடலாம் என இயக்குநரை கட்டாயப் படுத்துவார்கள்,
உண்மையில் அந்த ஷாட் நன்றாகவே வந்திருக்காது, காரணம் பொதுமக்கள் தனக்கு நடிக்கத் தெரியாது என நினைத்து விடுவார்களாம்? டப்பிங் தியேட்டரிலயே இயக்குநரிடம் ஈகோ பார்ப்பார்கள்.
ஆனால் விஜயகாந்த் அப்படியில்லை, இன்டோரோ, அவுட்டோரோ, டப்பிங்கோ எத்தனை டேக் என்றாலும் இயக்குநர் திருப்தியாகி ஓகே சொல்லும் வரை திரும்ப, திரும்ப செய்து கொண்டே இருப்பார்.
ஷுட்டிங் ஸ்பாட் வந்து விட்டால் ஒவ்வொரு ஷாட்டிற்கும் கேரா வேனுக்குள் புகுந்து கொள்ளும் பழக்கமெல்லாம் இல்லை, ஒரு ப்ளாஸ்டிக் சேரை எடுத்துப் போட்டுக் கொண்டு அங்கயே உட்கார்ந்து விடுவார்.


அவருக்கு ஷாட் இல்லையென்றால் கையில் ஒரு குச்சியை எடுத்துக் கொண்டு க்ரவ்ட் கிளியர் பண்ண இறங்கி விடுவார்.
கூட்டம் அதிகமாகி தூசு கிளம்புகிறது என ஷுட்டிங் கேன்ஷல் பண்ணிய நடிகர்களை எல்லாம் நான் பார்த்துள்ளேன்.
நடிகர்களுக்கே உரிய போலித்தன்மை சற்றுமில்லாத யதார்த்த மனிதர்.
சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவில் முதலீடு பண்ணிவிடாதே என,  ஆலோசனை சொல்லும் ரஜினிகாந்த் போல் அல்லாமல் ஏராளமான படங்களை தயாரித்தவர் விஜயகாந்த்.
கமலும் படங்கள் தயாரித்திருந்தாலும், விஜயகாந்த் போல அதிகப் படியான புதுமுக இயக்குநர்களை அறிமுகப் படுத்திய ஹீரோக்கள் யாருமே இல்லை.
இன்றைய மாடர்ன் சினிமாக்களின் முன்னோடி படங்களான ஊமைவிழிகள், கேப்டன் பிரபாகரனின் ஹீரோ விஜயகாந்த் தான்.
அம்பிகா, ராதா, பானுப்ரியா, வடிவுக்கரசி, ஜெயப்பிரதா என சக நடிகர்கள் முதன்முதலாக சொந்தப்படம் தயாரிக்கும் போதெல்லாம் விஜயகாந்தை ஹீரோவாக வைத்தே சொந்தப்படம் தயாரித்தார்கள்,
கேட்ட நண்பர்களுக்கெல்லாம் கால்ஷீட் கொடுப்பார் விஜயகாந்த்.
ரஜினி,கமல் எல்லாம் கால்சீட் கொடுப்பதற்கு தங்களுக்கென சில சட்டதிட்டங்களை வைத்திருந்தனர்.
தொடர்ச்சியாக இருபது படங்களுக்கு மேல் தோல்வியடைந்த போதும், எந்த படமும் தயாரிப்பாளரின் கையை கடித்ததில்லை.
அவருக்கான மார்க்கெட் கொஞ்சம் கூட சரிந்ததில்லை ஏறுமுகத்திலயே இருந்தது, அவரின் சமகால நடிகர்களான மோகன், சத்யராஜ், பிரபு, ராமராஜன், ராஜ்கிரண் போன்றோர்களுக்கெல்லாம் இந்த கொடுப்பினை இல்லை.
ஒருகாலகட்டத்தில் ரஜினி, கமலுக்கு இணையான ரசிகர் கூட்டம் விஜயகாந்திற்கும் இருந்தது, அங்கு தான் அவருக்கு பிரச்சனையும் ஆரம்பமானது.
சினிமாவில் ரியல் ஹீரோவாயிருந்த விஜயகாந்தால் அரசியலில் ரியல் ஹீரோவாக முடியவில்லை என்பதே யதார்த்தம்.
 விஜயகாந்த் அரசியலுக்கு வந்து தமிழகத்தை காப்பாற்றப் போகிறார் என எந்த மக்களுக்கும் காத்திருக்கவில்லை என்பதே உண்மை.
அவர் அரசியலுக்கு வந்த போது  புதிதாய் ஒருவருக்கு வாக்களிப்போமே என வாக்களித்தவர்களே அதிகம்.
ஏறுமுகத்திலயே இருந்த அவரின் சினிமா வாழ்க்கை போல் அல்லாமல், அவரின் அரசியல் வாழ்வு பெரும்பாலும் இறங்கு முகத்திலயே இருந்தது.
எதிர்க்கட்சி தலைவரானதெல்லாம் விஜயகாந்தின் தனிப்பட்ட வெற்றி கிடையாது.
கலைஞரை வீழ்த்துவதற்காக ஜெயலலிதா, வைகோ போன்றவர்களெல்லாம் விஜயகாந்தை பயன்படுத்திக் கொண்டார்கள்.கடைசியில் விஜயகாந்தின் கட்சியே வீழ்ந்து போனது.
 உண்மையில் விஜயகாந்த் எந்தவிதத்திலும் அரசியலுக்கான மனிதர் அல்ல.
விஜயகாந்த் படங்களில் சண்டை தான் ஷ்பெஷல்,  சுவற்றில் கால் வைத்து காற்றில் சுழன்று எதிரிகளை அடித்த,  பின்னங்கால்களின் கிக்குகளால் பைட்டர்ஸ்களை பின்னியெடுத்த கேப்டன், நேற்று, நிற்ககூட முடியாமல் தடுமாறி விழப்போனதை தொலைக்காட்சியில் பார்க்கும் போது கண்கள் கலங்கின.
நீங்கள் அரசியலில் எல்லாம் ஒன்றும் சாதிக்க வேண்டாம், மீண்டும் பழைய கேப்டன் விஜயகாந்த்தாகவே நலம்பெற்று வந்தால் போதும்.
இதுவே உங்களுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள்
!என் அன்பு சகோதரனே‌ . உங்கள் தர்ம குணத்தை ஆரம்பத்தில் இருந்து அருகில் இருந்து பார்த்த நான் நம்புகிறேன் உங்கள் தர்மம் உங்களை மீட்டெடுக்கும்.இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
...

கருத்துகள் இல்லை: